பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/462

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

414 / அயோத்திதாசர் சிந்தனைகள்


260. ஐரோப்பியர்களைப்போலவே இந்துக்களுக்கும் சமரச உத்தியோகம் வேண்டுமாமே

இவ்வகை வேண்டுவோர் அவர்களுக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கத்தை வேண்டினாரா, அவன்சாதி சின்னசாதி, என்சாதி பெரியசாதி என்னும் பொறாமெய் குணமில்லா பெருந்தன்மெய்யை வேண்டினரா, இல்லையே. எங்கள் தேசத்தில் கீழ்ச் சாதியோர் சிலர் இருக்கின்றார்கள் அவர்கள் யாவரும் எங்களைப் போன்றே மேற்சுகங்களை அநுபவிக்கலாகா, நாங்கள் தான் சகல சுகங்களையும் அனுபவிக்க வேண்டும் என்று முயன்று நிற்பவர்கள் ஐரோப்பியர்களைப் போன்ற சுகந்தாங்களும் அடைய வேண்டும் என்று கருதலாமோ. ஐரோப்பியர்கள் அடையுஞ் சுகத்தை இந்துக்களும் அடைய வேண்டும் என்பதானால் பெரியசாதியோன் என்பவன் அடையுஞ் சுகங்களை சின்னசாதியோன் என்பவனுடைய சுதந்திரமும் பாகமுமில்லையோ, தன்னவர் அன்னியர் என்னும் பேதமற்ற பிரிட்டிஷ் அரசாட்சியில் சின்னசாதி பெரியசாதி என்னும் பேதங்களும் உண்டோ, அவ்வகை உண்டாயின் ஐரோப்பியர்களைப்போல் இந்துக்களுக்கும் சமரச உத்தியோகம் வேண்டுமென்று கேட்பார்களோ ஒருக்காலும் கேட்கமாட்டார்கள். எப்போது தங்கள் சுகத்தைக் கருதி பேதமில்லையென்று வெளிவந்தார்களோ அப்போதே நமது இந்திய மாதாவாகும் விக்டோரியா பெருமாட்டி (பிரோக்கிளமேஷன்) வாக்கைக் கடந்தே தங்கள் சுகங்களைக் கருதி நிற்கின்றார்கள் என்று விளங்குகின்றது. இத்தகையச் செயல்களைக் கண்டுவரும் பிரிட்டிஷ் ஆட்சியாரும் பாப்பான் திருடினாலும் பினல்கோட் சட்டம் ஒன்று, பறையன் திருடினாலும் பினல்கோட் சட்டம் ஒன்றென்றே வகுத்துக் காரியாதிகள் நடத்திவருகின்றார்கள். நீதிநெறி அமைந்த சட்டங்களைக் கொண்டே ஐரோப்பியர்களுக்குள்ள அந்தஸ்துள்ள உத்தியோகத்தை இந்துக்களும் அடைய வேண்டும் என்று கோருகின்றவர் தங்களுக்குள் தாழ்ந்த சாதியோர் இருக்கின்றார்களென்று மறந்தும் பேசப்போமோ, பேசலாகாது. அவ்வகைப் பேசுவதாயின் ஐரோப்பியர்களைப் போல் இந்துக்களுக்கும் உயர்ந்த உத்தியோகங்கள் கொடுக்கவேண்டும் என்று கேட்கலாகாது, காரணமோவென்னில் இத்தேசப் பூர்வக் குடிகளுக்கே, யாதாமொரு சுயாதீனமில்லாதபோது இத்தேசத்துள் நூதனமாகக் குடியேறி சாதிபேதம் வைத்துள்ளார்களுக்கு மட்டிலும் சுவாதீனமுண்டாமோ, இப்பேதங் கொண்டாகாவாம்.

ஐரோப்பியர்களைப்போல் இந்துக்களுக்கும் சமரச உத்தியோகத் தரவேண்டும் என்று கேட்பதாயின் அவன் கீசாதி, நான் மேசாதியென்னும் அவிவேக மொழிகளை ஒழித்து பொறாமெய் குணங்களை அழித்து மிருகங்களை மிருகங்களாகவும், மக்களை மக்களாகவும் பாவித்து இத்தேச மக்களது சகல சுகங்களையும் சமரசமாகக் கருதுவாராயின் ஐரோப்பியர் அடையுஞ் சுகத்தை இந்துக்களும் அடையலாம் என்பது சொல்லாமல் நிலைக்கும்.

அங்ஙனமின்றி எங்களது விரோதச் சிந்தையாலும் பொறாமெய் குணத்தாலும் தாழ்ந்த சாதியோரெனக் கூறப்பெற்றவர்கள் தாழ்ந்தவர்களாகவே இருத்தல் வேண்டும். தாழ்ந்த சாதியோரை உயர்த்தப் போகின்றோம், தாழ்ந்த சாதியோரை உயர்த்தப் போகின்றோமென சகலரும் அறியக் கூச்சலிட்டுத் தாழ்த்தி தங்களை உயர்ந்த சாதிகளெனப் படாடோபம் அடிப்பவர்களுக்கு ஐரோப்பியருக்குள்ள சகல சுதந்திரங்களும் கிடைக்கப்போமோ, ஒருக்காலும் கிடைக்காவாம். சாதிபேதமுள்ள தேசத்தில் சாதிபேதம் உள்ளோருக்கே சகல சுதந்திரங்களையுஞ் கொடுத்து விடுவார்களாயின் அவர்களால் கீழ்ச்சாதி யோர்கள் என்று தாழ்த்தப்பட்டுள்ள ஆறு கோடி மக்களும் அவ்வருஷமே நசிந்து அதோகதியாகிவிடுவார்கள். ஆதலின் நீதிநெறிமிகுத்த பிரிட்டிஷ் ஆட்சியார் இச்சாதிநெறியை சீர்தூக்கி, சாதிபேதமில்லாரை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறோம்.

- 6:3; சூன் 26, 1912 -