பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



420 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சுகவீனத்தையறிந்த நமது இந்தியதேசச் சக்கிரவர்த்தியார் ஐந்தாவது ஜார்ஜ் அரசரவர்கள் மனஞ்சகியாது நாடோறும் அவரது பிணி நிலையை விசாரிப்பதே பெருங் கவலையாய் இருந்தாரென்பது உலகப் பிரசித்தமாயிருக்க நாம் வியாகூலமடைவது பெரிதல்லவாக்கும்.

ஜப்பான் சக்கிரவர்த்தியார் நீதியிலும் நெறியிலுங் கருணையிலும் அன்பிலுமிகுத்தவரென்பது அவரது செயல்களினால் நன்கு விளங்கும். அங்ஙனம் தந்தன் தேசக்குடிகளுக்குமட்டிலும் அன்பு பொருந்தியவரோவென்னில் இல்லை. சகல தேசமக்களிடத்தும் அன்பு பொருந்த வாழ்ந்தவர் என்பதற்கறிகுறியாக இந்திய தேசத்தில் உண்டாய பஞ்சத்திற்கு உதவியாய் நன்கொடையளித்த ஐம்பதினாயிரரூபாய் உதவியே போதும் சான்றாம். உருஷிய தேசத்தோருக்கும் ஜப்பானியருக்கும் யுத்தம் நேரிட்டகாலத்தில் யுத்தத்தில் அடிபட்டு வீழ்ந்து கிடந்த உருஷியமக்களையுந் தங்கள் மக்கள் போல் கருதி வேண சிகிட்சைகள் புரிந்து உணவளித்துக் கார்த்த செய்தியை அவர்களது யுத்த சரித்திரத்திலும் காணலாம்.

மற்றும் யுத்த காலத்தில் தனது சக்கிரவர்த்தியின் அந்தஸ்தையும், ஆனந்த சுகத்தையும் கவனியாது யுத்தத்திற்குச் சென்றிருக்குந் தனது குடிபடைகளின் மனைவிகளுக்குச் சென்று அங்கங்கு தங்கி அவரவர்களுக்கு வேண்டிய ஆறுதலைக் கூறி இருவகைச் சேனைகளின் கஷ்டநஷ்டங்களிலும் கவலை கொண்டவராகவே இருந்தார். அதற்குப் பகரமாக ஜப்பான் சக்கிரவர்த்தியார் தலைமகன் உருஷியதேச சக்கிரவர்த்தியைச் சந்திக்குமாறு அவரது தேசத்திற்குச் சென்றபோது ஜப்பான் சக்கிரவர்த்தி மைந்தனை உருஷிய சக்கிரவர்த்தியார் ஆனந்தத்துடன் எதிர் நோக்கி அன்புடனழைத்து உபசரித்த நன்றியே அதற்குச் சான்றாகும். மற்றும் அக்குடிபடைகள் யாவரையுந் தன்னவர் என்றாதரித்தாரன்றி அன்னியரென பாவித்தாரன்று.

இத்தகைய நீதியும் நெறியுங் கருணையும் அமைந்த ஜப்பானியரையும் உருஷியரையும் இந்திய தேசத்திலுள்ளப் பெரிய சாதி வேஷக்காரர்கள் தங்கள் தங்கள் பத்திரிகைகளில் குரங்குகளுக்கும் கரடிகளுக்கும் யுத்தம் நடக்கப் போகின்றதாக அவமதிப்பில் எழுதிவந்தார்கள். அதே வேஷசாதியோர் தங்களது பத்திரிகையில் தற்காலம் அவர்களை உயர்த்தியும் சிறப்பித்தும் பேசி வருகின்றார்கள். வேஷசாதியோரே ஜப்பானியரை மேலாக சிறப்பிப்பதாயின் நாம் சிறப்பிப்பது குறைவன்றாம்.

நீதியும் நெறியும் சீவகாருண்யமும் மதியூகமும் அமைந்த சக்கிரவர்த்தியை இழந்த தேசவாசிகளும் அவரது பத்தினிகளும் புத்திரபௌத்திரங்களும் துக்கத்திலாழ்ந்த போதினும் தோற்றும் பொருட்கள் யாவுங் கெடுமென்று போதித்துள்ள புத்தரது தன்மத்தைப் பின்பற்றியவர்கள் ஆதலின் நேர்ந்த துக்கத்தை நீடிக்காமல் அகற்றி விடுவார்களென்று நம்புகிறோம்.

- 6:9; ஆகஸ்டு 7, 1912 -


266. நமது இந்தியதேசச் சக்கிரவர்த்தியார் ஐந்தாவது ஜார்ஜ் அரசரவர்களும் ஜப்பான்தேசச் சக்கிரவர்த்தியார் மிக்காடோ பூமானவர்களும்

நீதிநெறி வாய்மெ நிறைந்த மேன்மக்களாக விளங்க நின்றார்கள் என்பதும் நமது சக்கிரவர்த்தியார் நிற்கின்றார் என்பதும் உலகப் பிரசித்தமேயாம்.

இவ்விரு சக்கிரவர்த்திகளுக்குள் மிக்காடோ சக்கிரவர்த்தியார் ஆளுகைக்கு உட்பட்டக் குடிகள் யாவரும் ஏகமதம், ஏகசாதி, ஏக்குணம் பொருந்தியுள்ளவர்களாதலின் அவரது நீதிநெறி வாய்மெய் அமைந்த நிலைமெயிற் கட்டுப்பட்டு இராஜ விசுவாசம் நிறைந்து வாழ்ந்தும் வந்தார்கள். இனிவாழ்ந்தும் வரப் போகின்றார்கள். நமது இந்திய தேசச் சக்கிரவர்த்தியார் நீதி நெறி வாய்மெயும் அன்பும் சீவகாருண்யமும் நிறைந்தவராயிருந்து அவரது ஆளுகைக்குள் பலமதம், பலசாதி, பலகுணம் அமைந்தவர்களாயிருக்கின்றபடியால் அவரது மேலாய அன்பினையும் சீவகாருண்யத்தையும்