உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/486

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

438 / அயோத்திதாசர் சிந்தனைகள்

இல்லையே, சகலசாதியாரையும் சகல மதத்தோரையும் சமரசமாகவே அன்பு பாராட்டி நடத்திவருகின்றார்கள்.

அவர்கள் கிறிஸ்தவர்களேயாயினும் கிறிஸ்துவின்மீது பற்றும் தம்மதச்சார்புங் கனவிலுங் கிடையாவாம். அவர்களுக்குப் பிள்ளைகள் பிறக்குமாயின் அதனைக் குறிப்பிட்டுவைப்பதற்கும் பெயர் கொடுப்பதற்கும் ஓரிடமும், விவாகஞ் செய்யவேண்டுமாயின் அதனைக் குறிப்பிட்டு சாட்சிகள் முன்னிலையில் பதிவிக்க ஓரிடமும், மரணமடைந்துவிட்டால் அதனைக் கொண்டுபோய் அடக்குவதற்கு ஓரிடமுமாக அக் கட்டிடத்தை நினைந்து காரியாதிகளை நடத்திவருகின்றார்களன்றி தம்மதக் கோவில், தம்மதச்சாமியென்னும் பற்றுகளில்லை என்பதை அவர்களது பொதுநலச் செயல்களாலேயே தெரிந்துக் கொள்ளலாம்.

ஆதலின் ஐரோப்பியக் கிறிஸ்தவர்களென பொதுப்படக் கூறுவதில் பிரிட்டிஷ் அரசாட்சியைச் சார்ந்த ஐரோப்பியர்கள் சம்மதப்பட்டவர்களன்றென்று அறிந்து பேசுவார்களென்று நம்புகிறோம்.

- 6:24: நவம்பர் 20, 1912 -


278. கருணைதங்கிய பிரிட்டிஷ் ஆட்சியில் பாலவிவாஹமும் பெண்களை மொட்டை அடித்தலும் வேண்டுமோ?

நமது இந்திய தேசத்தின் பூர்வ மநுக்களது செய்கைகள் யாதெனில்:- பெண்களுக்கு மங்கைபருவமென்னும் பனிரண்டு வயதிற்கு மேற்பட்டே விவாகஞ்செய்வார்களன்றி சிறு பெண்களுக்கு விவாகஞ்செய்ததுங் கிடையாது அவ்வகை செய்துவந்தார்களென்னுஞ் சரித்திரமுங் கிடையாது. சகல பூர்வ சரித்திரங்களிலும் மங்கைபருவ விவாகத்தையே குறிப்பிட்டிருக்கின்றார்கள். எட்டுவகை விவாகங்களிலும் மங்கைபருவச் செயல்களே விளங்குகின்றது.

மங்கைபருவ விவாகமுற்றப் பெண்களின் கணவர்கள் சிறுவயதில் இறந்துவிடுவார்களாயின் அவர்களை மறந்துவிடுவதற்கும் மறுவிவாகம் செய்துக்கொள்ளுவதற்கும் அவனாற் கழுத்திற் கட்டியுள்ள மாங்கல்ய சரடை எடுத்து விடுவது அநுபவமாகும். புருஷனார் கட்டிய மாங்கல்ய சரடு கழுத்திலிருக்குமாயின் வேறொருவர் விவாகஞ்செய்துக்கொள்ள இயலாதென்றே உடனுக்குடன் அம்மங்கல்யத்தை எடுத்துவிட்டு மறுவிவாகத்திற்கு எதிர்பார்த்திருப்பது இயல்பாகும். அரசர்களுக்குள்ளும் விதவா சுயம்வரங்களும் நிறைவேற்றிவந்ததாகவும் சரித்திரமுண்டு. அரசரெவ்வழியோ குடிகளும் அவ்வழி என்பதற்குப் பொருந்த மங்கைபருவமாம் சுக வயதில் விதவையானப் பெண்களை மங்கல்யத்தை மட்டிலும் எடுத்து விட்டு மறுவிவாகத்திற்குக் கார்த்திருப்பவர்கள் ஆதலின் பெண்களின் சிரோமயிர்களை சிரைத்து மொட்டையடித்து சீரழிப்பது கிடையாது. சுகச்சீரிலேயே வைத்திருப்பது இயல்பாம்.

இத்தகைய மங்கைபருவச் சீரும் மங்கைபருவ விவாகமும் மாறுபட்டு சிறுவயது விவாகமும் விதவையான பெண்களை மொட்டையடித்தலுமாகியச் சீர்கேடுகள் தற்காலத் தோன்றி மக்களை சீரழித்துவருகின்றதேயன்றி வேறில்லை.

இத்தேசத்துப்பெண்களில் மொட்டையடிப்பது யாருக்கென்னில் புருஷபோகத்தை வெறுத்து ஞானபோகத்தை விரும்பியப் பெண்கள் புத்தசங்கத்தைச்சார்ந்தபோது பிக்க்ஷூக்களைப்போல் தாங்களும் சிரமயிர் கழித்து மொட்டைத்தலையுடன் இருப்பது இயல்பாம். அதுவும் யாதுக்கென்னில் மடங்களிற்றங்கி வாசிக்கவேண்டிய விஷயங்களுக்கும் ஞானசாதனச் செயல்களுக்கும் சிரமயிரிருப்பது தொல்லையென்றும் மற்றும் புருஷர்கள் பார்வைக்கு தங்களழகைக் குறைத்துக்கொள்ள வேண்டுமென்றுங் கருதி பிக்குணிகள் மட்டிலும் பெண்களில் மொட்டைத்தலையுடனிருப்பார்களின்றி குடும்பத்தைச்சார்ந்தப் பெண்களை மொட்டையடித்து அழகைக்குலைப்பதும் சிறுபெண்களுக்கு விவாகஞ்செய்து சீரழிப்பதுங் கிடையாவாம்.

இச்சீர்கேடுகள் எக்காலத்திருந்து நிறைவேறிவருகின்றதென்று எம் மரபினராம் விவேகிகள் கூறுகின்றார்களென்னில், மகமதியர்களது துரைத்தனம்