உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

444 / அயோத்திதாசர் சிந்தனைகள்

சாதிபேதத்தை ஒழித்தே தீரல்வேண்டும். அது ஒழியுமளவும் இவர்களது கூட்டக்கோறிக்கை இத்தேசத்திலுள்ள ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்து தேசத்தின் சிறப்பழிவதுடன் தேசமக்களில் சிலர் சீர்பெற்றும் பலர் பாழடைந்தும் போவார்கள். ஆதலின் நீதியும் நெறியும் கருணையும் அமைந்த ராஜாங்கத்தார் இதனைக் கண்ணுற்று நமது கவர்னர் ஜெனரலைக் கொல்ல ஆரம்பித்த ராஜதுரோகிகளை அத்தேசத்தோர் பிடித்துக்கொடுக்குமளவும் இச்சிவில் செர்விஸ் கமிஷன் ஆலோசினையைத் தடைச்செய்து வைப்பார்களென்று நம்புகிறோம்.

- 6:30; ஜனவரி 1, 1913 -


282. யதார்த்த ராஜவிசுவாசிகளுக்கு விண்ணப்பம்

அன்பர்காள்! வித்தையும் புத்தியும் யீகையும் சன்மார்க்கமும் சீவகாருண்யமும் நீதிநெறியும் பூரணமாக நிறைந்த நமது பிரிட்டிஷ் அரசாட்சியார் இதுகாரும் இந்தியதேயத்தை வந்து அரசாட்சி நடத்தாமற் போயிருப்பார்களாயின் தேசங்கள் என்ன சீர்கெட்டிருக்கும், தேசத்தில் வாழும் மக்கள் என்ன சீரழிந்திருப்பார்களென்பதை அவரவர்களே தங்கள் தங்கள் மனசாட்சிக்கு விரோதமின்றி சீர்தூக்கி ஆலோசிப்பார்களாயின் அங்ஙனமே விளங்கிப்போம்.

அதாவது புத்ததன்மமானது இந்தியதேய முழுவதும் பரவியிருந்த காலத்தில் சகல மனுமக்களும் ஒற்றுமெயுற்று வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் நிறைந்து குருவிசுவாசம் இராஜவிசுவாசத்திலும் அமைந்து சகலமக்களும் சுகச்சீர்பெற்று நல்லொழுக்கம், நன்நீதி, நன்ஞானம், நற்கடைபிடியினின்று நல்வாழ்க்கைப் பெற்றிருந்தபடியால் அக்காலத்தில் இந்தியதேய முழுவதும் நிறைந்திருந்த மநுமக்கள் முப்பத்திமூன்றுகோடி பெயரையும் முப்பத்திமூன்று கோடி தேவர்களென்று அழைக்கும்படியாக வாழ்ந்து வந்தார்கள். காரணம் அவர்களுக்கிருந்த குருவிசுவாச நம்பிக்கையும், இராஜவிசுவாச அன்பின் மிகுதியுமேயாம்.

அதன்பின்னர் புத்ததன்மத்திற்கு எதிராகவே அபுத்ததன்மக் கூட்டத்தோர் இத்தேயத்தில் வந்து குடியேறி தங்களுடைய நயவஞ்சகத்தாலும் மித்திரபேதத்தாலும் தங்கள் சுயப்பிரயோசனங்களுக்காக ஒற்றுமெயுடன் வாழ்ந்திருந்த குடிகளை சாதிபேதமென்னும் பிரிவினைகளை உண்டு செய்தும் ஞான ரீதியில் நிறைந்திருந்த குடிகளை அஞ்ஞானமாம் பொய்தேவதைகளென்னுஞ் சிலாலயங்களை உண்டு செய்து நல்லுழைப்பிலும், நல் வித்தையிலும், நன்முயற்சியிலும் இருந்த மக்களை கல்லையுங் கட்டையையும் வணங்கிக் கொண்டால் கேட்ட வரமெல்லாம் சாமிகொடுப்பாரென்று சோம்பேறிகளாகச் செய்துவிட்டதுமன்றி, தங்கள் பொய்ப் போதகங்களுக் கடங்காத அரசர்கள் யாவரையும் மித்திரபேதங்களால் கொன்றும், தங்கள் பொய்ப்போதகங்களை செவியிற் கேளாமலும் மாடுகளையுங் குதிரைகளையும் மநுக்களையும் உயிருடன் நெருப்பிலிட்டுச் சுட்டுத் தின்னுங் கொடும் பாவிகளாகிய மிலேச்சர்களென்று அவர்களைக் கண்டயிடங்களிலெல்லாம் அடித்துத் துரத்திவந்த விவேக மிகுத்தவர்களையும் வித்தையில் தேர்ந்தவர்களையும் உழைப்பில் ஊக்கமுடையவர்களையும் பூமிக்கென்றே உழைத்து தானியவிருத்தி செய்து வந்தோர்களையுந் தாழ்ந்த சாதியோரென வகுத்து அவர்களை எவ்வகையினுந் தலையெடுக்கவிடாத கொடுந் துன்பங்களைச் செய்தற்கு ஆரம்பித்துக்கொண்டதுடன் இத்தேசத்தோர்களும் தங்கள் வித்தைகளையும் சோரவிடுத்துப் பெருஞ்சோம்பேறிகளாகி உடைந்தையாய சத்துருக்களாகிவிட்டபடியால் வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கங்கள் யாவும் அழிந்து துன்மார்க்கங்களாம் சாதி சண்டைகளும் சாமி சண்டைகளும் ஒற்றுமெக்கேடுகளும் வித்தையின் குறைவுகளும் விவசாய நாசங்களும் நாளுக்குநாள் அதிகரித்து தேச சிறப்பழிந்தும் தேசமக்கள் சீர்குலைந்தும், சோம்பேறிகளே மிகுத்து பிச்சையிரந்துண்போரே அதிகரித்து, ஈவோர், குறைந்துவருங்கால் மகம்மதியர் துரைத்தனமும், போர்ச்சுகியர்துரைத்தனமும்,