448 / அயோத்திதாசர் சிந்தனைகள்
வகுத்துள்ளக் கூட்டத்தோர் சேற்று நீரையேனும் குட்டைநீரையேனும் அசுத்த நீரையேனும் அருந்தி பற்பல வியாதிகண்டு மடிந்துபோக வேண்டுமென்பதே அவர்களது கருத்தேயன்றி சானிட்டேரியென்னும் சுகாதார யெண்ணம் அவர்களுக்குக் கிடையாது. அவ்வகை சுகாதாரத்தைத் தேடுகிறவர்களாயின் தாங்கள் புசிக்கும் சுத்தநீரை சகலரையும் புசிக்கும் படியான வழிகளைத் தேடுவார்கள். அவர்களிடத்துள்ளக் கெட்ட எண்ணமே போக்குக்காட்டுகின்றது. தாழ்ந்த சாதியோனென்று அழைக்கப்படுவோன் உயர்ந்த சாதியோன் அருந்தும் நீரைத் தொடுவதினால் சானிட்டேரிக்குக் குறைவுண்டாகும் என்பதாயின் தாழ்ந்த சாதியோன் காலினால் துவைத்து மிதித்த நெல்லையும் அரிசியையும் உபயோகிக்கும் போது சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் காலினாலுங் கையினாலும் மிதித்துப் பிசைந்தப் புளியை உபயோகிக்குங்கால் சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் மிதித்துத் துவைத்த வெல்லத்தில் சானிட்டேரியம் இல்லையோ. தாழ்ந்த சாதியோன் வெட்டுங் குளத்திலுங் கிணற்றிலும் சானிட்டேரியம் இல்லையோ, தாழ்ந்த சாதியோன் ஏரிநீரை கலக்கிக்கொண்டு வருங்கால் சானிட்டேரியம் இல்லையோ. இவ் வகையான சமயயுக்த்தவார்த்தைகள் யாவும் தாழ்ந்த சாதியோரென்று அழைக்கப் பெற்ற ஆறுகோடி மக்களை அல்லலடையச் செய்வதற்கேயாம்.
மற்றும் கேழ்வி யாதெனில் தாழ்ந்தசாதியோர் வசிக்குமிடங்களில் நீங்கள் உள்ளுக்கே பிரவேசிக்கமாட்டேன் என்கிறீர்களே அவ்வகையான உங்களுக்கு மேலான உத்தியோகங்கள் தகுமோ என்றதற்கு நாளுக்குநாள் போக்குவருத்தாகி விடுவார்களென்று கூறினார்கள். இவ்வகை கூறுவோர்களுக்கு உயர்ந்த உத்தியோகங்களைக் கொடுத்துவிடுவதாயின் இன்னும் என்னக்கேடுகளைச் செய்து தேசத்தைவிட்டு அகற்றுவார்களோ என்பதை ராஜாங்கத்தோரே யோசிக்கவேண்டியதுதான். இத்தேசத்துள் சாதிகளென்று ஏற்பட்டதே பொய்வேஷக் கட்டுப்பாடுகளாகும்.
அதில் தாழ்ந்தவர்களென்று வகுக்கப்பட்டுள்ளவர்களோ சாதித்தலைவர் கள், பொய்ப் போதனைகளுக்கும் சாதிக்கட்டுப்பாடுகளுக்கும் அடங்காத எதிர் விரோதிகள், அவ்விரோதத்தினாலேயே அவர்களைத் தலையெடுக்கவிடாமல் நசித்துத் தங்கள் சுகாதாரங்களைமட்டிலும் அநுபவித்து வருகின்றார்கள், இவ்வகையாய சாதிவேஷத்தால் சாதித்தலைவர்களின் அதிகாரமே இத் தேசத்தில்மிக்கப்பெரிதாயிருக்கின்றது. அச்சாதித்தலைமெ அதிகாரத்தால் தேசத்திற்கு அனந்தங் கேடுகள் விளைந்து வருகின்றது. அத்தகைய சாதித்தலைவர் அதிகாரத்துடன் தேசத்தை ஆளும் உத்தியோக அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ளுவார்களாயின் யாரைத்தாழ்த்தி யாராரைக் கெடுத்துப் பாழாக்குவார்களோ என்பது சகலருக்கும் சொல்லாமலே விளங்கும்.
இத்தகைய சாதிகேடுபாடுள்ள தேசத்தில் அதிகார உத்தியோகங்கள் யாவற்றையும் சாதிபேதமில்லா ஆங்கிலேயர்களே ஆளவேண்டுமேயன்றி பொய்ச்சாதி வேஷக்காரர்களுக்குக் கொடுக்கவே கூடாது.
இச்சாதி பேதமென்னும் பொய்வேஷம் இந்துக்கள் மனதை விட்டகலும் வரையில் அவர்களை யோர் புண்ணிய புருஷர்களென்றும் விவேகமிகுத்தவர் களென்றும் சீவகாருண்யர்களென்றும் எண்ணவேகூடாது. அவர்கள் கூச்சலிட்டுப் புலம்புவதெல்லாம் தங்கள் தங்கள் சுயப்பிரயோசனங்களைக் கருதிப் பேசுவதேயன்றி தேசசிறப்பைப் பற்றியேனும், தேசமக்கள் சீர்திருத்தத்தைப் பற்றியேனும் பேசுவது கிடையாது. அத்தகையோர் வார்த்தையை நம்பி கலைக்ட்டர் பரிட்சையையும் இவ்விடத்தில் வைக்கப்படாது, கலைக்ட்டர் உத்தியோகங்களையும் அவர்களுக்குக் கொடுக்கப்படாது. சாதி அதிகாரங்களினாலேயே இத்தேசஞ்சீர்கெட்டும் தேசமக்கள் சீரழிந்தும் போனார்கள். இன்னும் அதற்கு உபபலனாக உத்தியோக அதிகாரங்களையுங் கொடுத்துவிடுவதாயின் இப்போதுள்ள சீருஞ் சிறப்புங்கெட்டு அதோகதியான பாழடைந்துபோமென்பது சத்தியம் சத்தியமேயாம்.