450 / அயோத்திதாசர் சிந்தனைகள்
உத்தியோகத்திற்கு இன்னும் பயந்து நடக்க ஆரம்பித்துக்கொள்ளுவார்கள். ஆதலின் சாதித்தலைவர்களாகவும் குருக்களாகவும் உலாவுவோர்களுக்கு கலைக்ட்டர் உத்தியோகத்தையுங் கொடுத்து விடுவதாயின் இராஜாங்கத்திற்கும் சாதிபேதமில்லா ஏழைக்குடிகளுக்கும் ஓர்கால் தீங்குண்டாமென்பது திண்ணம் திண்ணமேயாம்.
ஈதன்றி கலைக்ட்டர் அண்டு மாஜிஸ்டிரேட் உத்தியோகமானது அச்சில்லாவையே ஆளும் அரசனுக்கு ஒப்பாயதாம். அத்தகைய உத்தியோகத்தில் குடிகளை நியாயவழியில் ஆண்டும் அந்நியாய வழியில் ஆண்டும் வருபவற்றுள் ஓர் கலகமுண்டாகிவிடுமாயின் அவற்றை அடக்கியாளும் மனோதிடமும் வல்லபமும் இந்தியதேச சக்கிரவர்த்தியார் ஆளுகையின் ஒன்றை நாமாளுகின்றோம் என்னும் ஊக்கமும் அவர்களுக்குக் கிடையவே மாட்டாது. அல்லது மகமதியர்களுக்கு மனோதிடமும் வல்லபமுமுண்டாயினும் நீதியின் வழியாகப் பொருத்தாளும் நிதானநிலை அவர்களுக்குக் கிடையாது. ஆதலின் மனோ திடமும் நீதிநெறியும் வல்லபமும் தன்னரசு என்னும் பொறுப்பும் பொருந்தவுள்ளவர்கள் ஐரோப்பியர்களேயாதலின் அவர்களே அக்கலைக்ட்டர் உத்தியோகத்திற்குப் பொருந்தியவர்களாவார்கள்.
ஐரோப்பியர்களுக்கு வல்லபமும் மனோதிடமும் நீதிநெறியுமட்டிலும் உள்ளதன்று. வித்தை புத்தி யீகை சன்மார்க்கம் சீவகாருண்யம் தன்னவர் அன்னியரென்னும் பட்சபேதமற்ற அன்பு யாவும் நிறைந்திருக்கின்றது. இத்தகைய குணநல மிகுத்தவர்களே சாதிபேதமுள்ள இத்தேசத்தையாளுங் கலைக்ட்டர்களாகத் தோன்றுவது நியாயமேயன்றி வேறொருவருக்கும் பொருந்தாவாம்.
மகமதியர்களுக்குப் பொருந்தாவோ என்பாரும் உண்டு. இத்தேசத்தோருக்கு சாதிபேதமென்னும் மனக்களிம்பு எவ்வளவு தடிப்பேறியிருக்கின்றதோ அது போலவே மதபேதமென்னும் மனக்களிம்பு மகமதியர்களுக்குத் தட்டிப்பேறி இருக்கின்றபடியால் பலமதத்தோர்கள் வாழுமித்தேசத்துள் அவர்களுக்கும் அவ்வுத்தியோகம் பொருந்தாது.
மற்றும் அக்கமிஷன் விசாரிணையில் ஓர் ஐரோப்பிய பெரிய உத்தியோகஸ்தரெழுந்து இத்தேசத்தோருக்கு சாதாரணவறிவு போதாததால் கலைக்ட்டர் உத்தியோகத்திற்குப் பொருந்தமாட்டார்களென்று கூறினார். அவருக்கு மறுப்பாக இத்தேசத்தோர் ஒருவரெழுந்து இந்திய ஜட்ஜிகள் மெத்த புத்திசாலிகளென்று லண்டனிலுள்ள பெரிய உத்தியோகஸ்தர்கள் கூறியிருக்கின்றார்களே, அதற்குத் தாமென்ன கூறுவீரென்று கேட்டிருக்கின்றார். அக்கேழ்வி அதற்குப் பொருந்தாவாம். அதாவது புத்தியில் தீவிரமில்லாதவர்களாயிருந்து கிஞ்சித்து புத்திசாலித்ததினால் அம்மொழி தோன்றியதன்றி இயற்கையிலேயே புத்திவிசாலமுற்றிருப்பவர்களாயின் அம்மொழி தோன்றாவாம்.
அன்றியும் ஐரோப்பியரது பெருத்த நற்குணம் யாதெனில் வித்தையிலும் புத்தியிலும் ஒருவர் முன்னேறுவதைக் காண்பார்களாயின் அவர்கள் செயலை சற்று சிறக்கக்கூறி சில பட்டங்களுங் கொடுத்து மேலுமேலு முன்னேறச் செய்வது இயல்பாம். அதுபோல் ஜட்ஜுகளில் சில புத்தியில் விசாலமுள்ளோரைக்கண்டு அவர்கள் புத்தி இன்னும் விசாலமடைதற்குக் கூறிய மொழியேயன்றி இந்துக்கள் யாவரும் இயற்கையிலேயே புத்தியில் விசால மிகுத்தவர்களென்று கூறிய மொழியன்றாம். ஆதலின் இந்தியர்களுக்கு அறிவு போறாது அவர்களுக்குக் கலைக்ட்டர் உத்தியோகங் கொடுக்கத் தகாது என்று கூறியுள்ள பெரியோர் மொழியையே ஆமோதித்து இவ்விடங் கூறுகிறோம். அவற்றிற்குத்தக்க மறுமொழி கொடுப்போ ருளராயின் வெளிவரலாம்.
1-வது. தங்களை உயர்ந்த சாதிகளென சிறப்பித்துக்கொண்டு ஏனைய மக்களைத் தாழ்த்தி வருவது அறிவுள்ளோர் செயலா.