458 / அயோத்திதாசர் சிந்தனைகள்
கல்வியினிடத்தும் மெய்கல்வியென்றும் பொய்க்கல்வியென்றும் இரு வகைத்துண்டோவென உசாவுவோரும் உண்டு. புறப்பொருள்காட்சியையும் பிரயோசனமற்ற நூற்களையுங் கண்டறியாது படிக்குந் தெண்டப்படிப்பே பொய்க் கல்வியென்றும், அகப்பொருட்காட்சியையும் நீதிநெறி ஒழுக்கங்களையுங் கண்டறிந்து படிக்கும் படிப்பை மெய்க்கல்வி என்றும் கூறப்படும்.
இத்தகைய மெய்க்கல்வியின் விருத்தியைநாடி நமது கருணைதங்கிய ராஜாங்கத்தார் கலாசாலைகள் கட்டுவதற்காய வேணபணவுதவியும் கல்வியின் விருத்தியை செய்விப்பதற்காய வேண பணவுதவியும் செய்துவருபவற்றுள் மாணாக்கர்களது பரிட்சைகளுக்குத் தமிழ் பாஷையில் எப்புத்தகங்களை வைக்கலாம் என்னும் உத்தேசங்கொண்டிருப்பதாகத் தெரிந்து மிக்க ஆனந்திக்கின்றோம்.
இராமாயணமென்னும் புத்தகத்தைப் பரிட்சைக்கு வைக்கலாமோ வென்னில் அதன் கதாசுருக்கம் அம்மதத்தினோர்க் கடவுள் இராமனாகப் பிறந்து தன் மனைவியுடன் சுகித்திருக்குங்கால் பத்துத் தலையும் இருபது கையுமுடைய ஓர் ராட்சதன் சமுத்திரங் கடந்து எடுத்துப்போய்விட்டான் என்றும் அவனைக் கொல்லுவதற்காக அத்தேசத்திற்குச் சென்று அவனையும் அவன் குடும்பத்தோரையும் அவன் தேசத்தோர் யாவரையுங் கொன்று இராமர் தன் மனைவியை அழைத்துக்கொண்டு வந்துவிட்டார் என்பதேயாம்.
இத்தகையக் கதையை சிறுவர்கள் வாசித்து வருவார்களாயின் அவர்களுக்கு நீதிமார்க்கம் நிலைக்குமா. ஈதன்றி அவருடன் யுத்தஞ்செய்த எதிரிகளுக்கு அலைபோல நாக்குகளும் மலைபோல மூக்குகளும் உண்டாம். மனைவியை எடுத்துப்போனவனுக்குப் பத்துத்தலைகள் இருந்தனவாம், இஃது பொருந்துமா. இயற்கையிலேயே ஓர்தலையையுடைய மனிதனுக்கு அத்தலை சிறுத்துவிடுமாயின் புத்திகெட்டு குரங்கின் சேட்டைச் செய்வதைக் காண்கின்றோம். மற்றவனுக்கு ஓர்தலை உள்ள பரிமாணத்திற்குமிக்கப் பெருத்திருக்குமாயின் அத்தலையைக் கழுத்துத் தாங்கமுடியாது உருளுவதும் புத்திகெட்டு கிடப்பதுமாகியச் செயலைக்காண்கின்றோம். ஈதனுபவக் காட்சியாயிருக்க பத்துத்தலையையுடைய ஓர் மனிதன் பாரியை எடுத்துப்போய் விட்டான் என்றும் அவன் பெருத்த யுத்தஞ் செய்தான் என்றும் சிறுவர்கள் வாசிப்பார்களாயின் வித்தியாவிதரண விவேக விருத்தியுண்டாமா அன்றேல் மயங்குமா. ஒருவன் மனையாளை அபகரிப்பானாயின் அவனையும் அவன் குடும்பத்தோரையுங் கொல்ல முயலுவானா, நிதானத்தினில் நிற்பானா என்பதைக் கூர்ந்து ஆலோசிப்பதாயின் சிறுவர்கள் இத்தகையக் கதைகளைக் கண்ணினாற் பார்க்காமலிப்பதே அழகாம்.
பாரதக்கதையை சிறுவர்களுக்குக் கொடுத்து வாசிக்கச்செய்வதாயின் அக்கதையின் உற்பவமே இரிஷியும் முனியும் ஞானியுமாகிய ஓர் மனிதன் கைம்பெண்களைச் சேர்ந்தே பிள்ளைகளைப் பெற்றிருப்பது காட்சியாம். அதை வாசிக்கும் விதரணையற்ற சிறுவர்கள் இரிஷிகளே கைம்பெண்களைச் சேர்ந்திருக்க நாம் சேருவதினால் என்னக்கெடுதியென்று உறுத்திக் கைம்பெண்களைச் அணுகி பிள்ளைகள்தோற்ற அப்பிள்ளைகளைக் கழுத்தை முறித்துக் குப்பையிற் போடவும் உயிருடன் கொண்டுபோய்க் கிணற்றில் போடவுமாகிய சீவகாருண்யமற்றச் செயலும் துற்கிருத்தியங்களும் பெருகுமா குறுகுமா. பாரதக்கதா சுருக்கமோவென்னில் பங்காளிகளின் பூமி வழக்கேயாம். ஒரு சகோதிரனுக்குக் கொடுக்கவேண்டிய பாகத்தை மற்றொரு சகோதிரன் கொடுக்காத தடையால் அவனையும் அவனைச்சார்ந்தக் குடும்பத்தோர்களையும் மற்றும் தேசத்து அரசர்களையும் வஞ்சினம் சூது மித்திரபேதம் மாயாவாதம் முதலியவைகளாற் கொன்று தங்கள் பாகத்தையும் எதிரி சகோதரர்கள் பாகத்தையும் பெற்றுக்கொண்டார்கள் என்பதேயாம். இத்தகையதை வாசிக்குஞ் சிறுவர்கள் தங்கள் சகோதிரர்கள் ஏதேனும் ஓர் பாகங் கொடுக்காமல் வைத்துக்கொள்ளுவார்களாயின் உதிரக்கலப்பினால்