அரசியல் / 459
உண்டாம் பாசத்தினாலும் சகோதிரனென்னுங் காருண்யத்தினாலும் அவனே சுகமாக அனுபவித்துக் கொள்ளட்டுமென்று விட்டுவிடுவானா அன்றேல் பாரதக்கதையை வாசித்த அனுபவங்கொண்டு தன் பாகங்கொடா சகோதிரனையும் அவனைச் சார்ந்தவர்களையும் பலவகையான துன்பத்திற்குள்ளாக்கி அவனையுங்கெடுத்து தானுங்கெட்டு துக்கத்தில் ஆழ்வானா. பொருளாசையின் மிகுதியால் எதிரிகளின் பிராணனுக்கே தீங்கை விளைவிப்பானா என்று ஆலோசிக்கில் வாசித்தவன் அனுபவமும் செயலிலுந் தோற்றுமாதலால் வஞ்சத்தாலும், சூதாலும், மாய்த்தாலும் கொல்லுங் கதையை சிறுவர்கள் கண்ணிலும் பார்க்காதிருப்பதே அழகாம்.
பெரியபுராணம் சிறியபுராணங்களை சிறுவர்களுக்குக் கற்பிப்பதாயின் சீவகாருண்யம் நிலைத்து கொலைசெய்யாமெய், களவு செய்யாமெய், கள்ளருந்தாமெய், பொய்சொல்லாமெய், பிறர் தாரமிச்சியாமெய்யென சுத்ததேகிகளாக உலாவும் சன்மார்க்கர்களாம் பௌத்தர்களை சீவகாருண்ய மற்ற பஞ்சமாபாதகர்களும் துன்மார்க்கர்களுங்கூடி கழுவிலுங் கற்காணங்களிலும் வசியிலுங் குத்தி வதைத்துக் கொன்ற கதையை அவற்றுள் விசாலமாக வரைந்திருக்கின்றது. அவற்றை வாசிக்கும் சிறுவர்கள் மக்கள் விசுவாசமும் இராஜ விசுவாசமுமற்று சீவகாருண்யம் என்பதே கனவிலுமில்லாமலும் நீதியும், நெறியும், நிலையிலில்லாமலுந் துன்மார்க்க கிருத்தியங்களுக்கே பிரவேசிப்பார்களன்றி நன்மார்க்கத்தில் நிலைக்கமாட்டார்கள்.
மற்றும் அக்காதையுள் சாமியே மனிதனாக வந்து ஏது திக்கியு மற்ற கைம்பெண் கிழவியினிடஞ்சென்று உடைந்த ஏறிகரைக்கு மண்ணிடுவதாக ஒப்பந்தம் பேசி அவள் வயிறு பிழைக்க விற்றுண்ணும் புட்டுகளை எல்லாந் தின்றுவிட்டு ஒப்பந்தம் பேசியபடி செய்யாமல் பிரம்படிப்பட்டதாக வரைந்திருக்கின்றது. அதனை வாசிக்கும் சிறுவர்கள் சாமியே கைம்பெண் கிழவியிடம் ஒப்பந்தம் பேசி அவள் புட்டெல்லாந்தின்றுவிட்டு ஒப்பிய வேலையையுஞ் செய்யாமல் பிரம்படிப்பட்டிருக்க நாமென்ன நரமனிதர் ஒருவனிடம் ஒப்புக்கொண்ட வேலையையுஞ் செய்யாமல் பணமும் பெற்றுக்கொண்டு பிரம்படிபட்டாலென்ன சிறைச்சாலைச் சென்றாலென்ன என்று முனைவார்களன்றி நீதியிலும் நெறியிலும் நிலைத்து உலக விவகாரங்களை நடத்தமாட்டார்கள். பின்னும் அக்கதையுள் கூறியுள்ள மோட்சராட்சியத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் ஓர் பெண்ணைக்கண்டு மோகித்து பூமியில் வந்து சேர்ந்துக்கொண்டதாக வரைந்திருக்கின்றது. அத்தகைய துன்மார்க்கக் கதைகளை சிறுவர்கள் வாசிப்பதினால் மோட்சராட்சியத்திலேயே பெண்களைக்கண்டு மோகித்து சுகமடைவது இயல்பாயிருக்க பூமியின் கண்ணுள்ள பெண்களைக்கண்டு மோகித்து அவர்களைக் கெடுப்பதினால் நமக்குக் கெடுதியாதுண்டாமென்னுந் துணிவு கொள்ளுவார்களன்றி அச்சத்திலும் ஒடுக்கத்திலும் நின்று சீர்பெறமாட்டார்கள். மற்றுமுள்ளக் கேடுபாடுகளை வரையின் வீணேவிரியும் என்றஞ்சி எமதபிப்பிராயத்தை வெளியிடுகின்றோம்.
அதாவது சிறுவர்களது தமிழ் பரிட்சைக்கு திரிக்குறள், திரிகடுகம், நாலடிமுதலிய நீதிநூற்களைவைப்பதுடன் அந்தந்த வகுப்பிற்குத் தக்கவாறு பிரதம கலாசாலை முனிஷிகளே மக்கள் விசுவாசமும் இராஜவிசுவாசமும் அமைந்துள்ளச் செய்யுட்களையும் விவேகவிருத்தி, வித்தியாவிருத்தி, விவசாயவிருத்திக்குத்தக்க செய்யுட்களையும் அமைக்கச்செய்து அவைகளைப் பாட சோதனைகளுக்கு வைப்பதாயின் பிள்ளைகள் நீதியிலும், நெறியிலும், சன்மார்க்கத்திலும் அமைந்து வித்தையிலும், விவசாயத்திலும் முனைந்து சுகவாழ்க்கைப் பெற்று மக்கள் விசுவாசத்திலும், இராஜ விசுவாசத்திலும் அமர்ந்திருப்பார்கள். மற்றப்படி மதிகேட்டிற்கும் நீதியின் கேட்டிற்கும் ஆதாரமாயுள்ள நூற்களை கலாசாலைகளில் வைப்பதாயின் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கலாசாலைகளுக்கென்று வேணப்பணவுதவிசெய்தும் விழலுக்கிரைக்கும் நீர்போலாமேயன்றி யாதொரு பயனையுந் தாராவாம்.
- 6:42; மார்ச் 26, 1913 -