பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. அரசியல்

நாட்டுக்கு நல்லரசன் வந்தாலும் தோட்டிக்குப் புல்சுமைப் போகாதென்னும் அரசாங்கத்தால் குடிகள் விருத்தியடைவார்களா அன்றேல்,

நாட்டுக்கு நல்லரசன் வந்தால் தோட்டியும் கல்விகற்று அரச அங்கத்தில் ஒருவனாக விளங்குவதால் குடிகள் விருத்தியடைவார்களா.

யாப்பருங்கலைக்காரிகைச்சூத்திரம்

மழையின்றி மானிலத்தார்க்கில்லை - மழையும் / தவமிலாரில் வழியில்லை - தவமும்
அரசிலாரில் வழியில்லை - அரசனும் / இல்வாழ்வாரில் வழியில்.

வானம் சுருங்கில் தானம் சுருங்குமென்னும் மூதாட்டியின் வாசகப்படி மழையில்லாமற் போமாயின் நிலத்தில் வாழும் அறுவகை சீவர்கள் வாழ்க்கையும் குன்றும். நிலநோக்கி வானம் பெய்யாமைக்குக் காரணம் யாதோவெனில், சீலமிகுத்த ஞானிகளாகும் பிராமணர்கள் இல்லாமையினாலேயாம். பிராமணர்கள் இல்லாமைக்குக் காரணம் யாதோவெனில், நீதியும் நெறியும் வாய்மெயும் நிறைந்த விவேகிகள் இல்லாமையினாலேயாம். விவேக மிகுத்த பிராமணர்கள் இல்லாமைக்குக் காரணம் யாதோவென்னில் சாம, தான, பேத, தண்டம் என்னும் சதுர்வித உபாயமும் அன்புமிகுத்த அரசர்கள் இல்லாமையினாலேயாம். அன்பு மிகுத்த அரசர்களில்லாமைக்குக் காரணம் யாதோவெனில், வித்தை, புத்தி, ஈகை, ஒழுக்கம் நன்னெறி ஒற்றுமெயில்லாக் குடிகள் இல்லாமையினாலேயாம்.

அகிம்சாதருமம் ஈகை ஒற்றுமை இவைகள் நிறைந்த குடிகள் பெருகில், நீர்வளம் உயரும். நீர்வளம் உயரில், வரப்புயரும், வரப்புயரில், பயிறுயரும். பயிறுயரில், சருவசீவராசிகளும் உயரும். சருவ சீவராசிகள் உயரில் அரசாங்கம் உயரில் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த ஞானிகள் பெருகுவார்கள். ஞானிகள் பெருகுவார்களாயின் வானமும் மும்மாரிபெய்து உலகம் சுகம்பெறும் என்பது சத்தியமாம்.

இத்தகைய நீதிநெறிகளைக்கடந்து என் வீட்டிற்கு வந்தால் என்ன கொண்டுவருவீர் உன்வீட்டிற்கு வந்தால் என்ன கொடுப்பீரென்னும் சுயப் பிரயோசனத்தை நாடி, நாலு நூறு குடிகளைக் கெடுத்து ஒரு முதலாளியாகிறதும் ஆயிரத்தெட்டு அபுத்த சாதிகளை ஏற்படுத்திக் கொண்டு ஒருவருக்கொருவர் ஒற்றுமெய் இல்லாமல் பல சாதிபேதங்களால் பல குணபேதங்களுண்டாகி ஒருவருக்கொருவர் பற்கடிப்பும் பெருகி நிற்கும் நிலையால், அரசநீதியாகிய செங்கோல் கொடுங்கோலாகத் தோற்றுகின்றது. நமக்குள்ள வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் கருணை ஒற்றுமெய் என்னும் சுத்த சீலங்களைப் பெருக்கிக்கொண்டு அரச நீதியை நோக்குவோமாயின், செங்கோல் செங்கோலாகவே விளங்கும். இவ்வகை விளங்கலாகிய கொடுங்கோலுக்கும் செங்கோலுக்கும் காரணம் நாமா. அன்றேல், அரசாங்கமா, உசாவுவாம்.

- 1:1; சூன் 19, 1907 -

ஓர் தகப்பனுக்கு நான்கு பிள்ளைகள் பிறக்குமாயின் அப்பிள்ளைகளை வித்தையிலும் புத்தியிலும் ஈகையிலும் சன்மார்க்கத்திலும் பெருகச்செய்து தந்தை சுகமடைவதுடன் அவன் பெயருங் கீர்த்தியும் உலகத்திற் பரவும். அங்ஙனம் இராது பிள்ளைகளை சன்மார்க்கத்தில் விடுத்தும் அதனைக்கருதாது துன்மார்க்கத்தைப் பின்பற்றி சகோதர ஒற்றுமெயற்றுத் தாங்கள் தாங்கள் நிலைகுலைவதன்றி அன்னியர்களையும் நிலைகுலையச் செய்வார்களாயின் தந்தை மறக்கருணையால் தெண்டித்து, சீர்பெறச் செய்வதும் உண்டு.

அவ்வகை சீர்திருத்தஞ் செய்யாது அறக்கருணையால் பிள்ளைகள் போனபோக்கில் விடுவானாயின் அவர்களுங்கெட்டு தனக்கும் யாதொரு சுகமில்லாமற் போமென்பது திண்ணம்.