உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 465

சொல்லாமலே விளங்கும். இத்தகைய சாஸ்திரங்களை ஓர் தன்மசாஸ்திரமென்று எண்ணி நடக்குங் கூட்டத்தோரால் இத்தேசத்திய விவசாயத்தொழில் சீர்கெடுமா சீர்பெருமா என்பதை விவேகிகள் உணரற்பாலதே. பூர்வம் இத்தேசத்திருந்த பௌத்தர்களோவென்னில் “மேழிச்செல்வங் கோழைப்படாது” என்றும், “சீரைத்தேடில் ஏறைத்தேடு” என்றுங் கூறியிருக்கின்றார்கள். அத்தகைய வாக்கியங்களை தன்மவாக்கியங்களென்று எண்ணி இத்தேசத்தோர் தன்மவழி பிறழாது நடந்துவந்தவரையில் காலமழைத் தவிறாது பெய்யவும், பூமிவளம் பெருகவும், தானியங்கள் ஓங்கவும், குடிகள் சுகச்சீரடையவும் அரசர் ஆனந்த வாழ்க்கைப் பெறவுமாயிருந்தது. சத்திய தன்ம வாக்கியங்கள் யாவும் மாறுபட்டு அசத்திய தன்மமும் அசப்பிய நூற்களும் துன்மார்க்கக் கூட்டங்களும் பெருகி தேசத்தோர் ஒற்றுமெயுற்றிருந்த வாழ்க்கையை சாதிபேத பொய்வகுப்பால் கெடுத்து வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கத்தில் வாழ்ந்து வந்தோரை துன்மார்க்கப் பொய்சாமிகதைகளாம் பல மதபேதத்தால் கெடுத்து தங்கள் தங்கள் சுயப்பிரயோசனத்தையே நாடி நிற்குங் கூட்டத்தோர்களே மிக்கப் பெருகி விட்டபடியால் காலமழை தவறியும் பூமிகளது வளங் குன்றியும், தானிய விளைவு குன்றியும், தேசம் நாளுக்குநாள் பஞ்சத்தால் பாழடைந்து தேசமக்கள் பற்பல வியாதிகளால் பீடிக்கப்பட்டடே வருகின்றார்கள். குடிகள் இத்தகைய பஞ்சத்தாலும் பெருவாரி வியாதிகளாலும் பட்டுவருங் கஷ்டங்களை கண்ணுற்ற நமது கருணை தங்கிய கவர்ன்மென்றார் இதக்கமுற்று விவசாய கலாசாலைகளையும் விவசாயக் கருவிகளையும் விவசாய விதைமுதலையும், விவசாயம் நடாத்தும் யுக்தாயுக்தங்களையும் வேணசெலவிட்டு செய்து வந்தபோதினும் கருணை என்பது கனவிலுமில்லாத கூட்டத்தோர்களே அதனிலும் பிரவேசித்துக் காரியாதிகளை நடாத்தி வருகின்றபடியால் கவர்ன்மெண்டார் ஏழைகளது சுகர்சீரைநாடி ஏராளமாய பணத்தை செலவு செய்தபோதினும் விவசாய விருத்தி மயங்கி நிற்கின்றதே அன்றி சிறப்புறுவதைக் காணோம். ரூபாயிற்கு மூன்றரையடி நாலுபடி அரிசி விற்பதே விவசாய விருத்திக்குறைவு என்னலாகும்.

ஒரு ரூபாயிற்கு பதினாறு படி இருபதுபடி அரிசி வித்துவந்த தேசத்தில் மூன்றரைபடி நான்குபடி அரிசி விற்குமாயின் தேசத்தில் எத்தகைய அதன்மக் கூட்டத்தோர் பெருகி அர்த்தநாசமடைந்துவருகிறதென்பதை அனுபவத்தாலுங் காட்சியினாலும் அறியலாமன்றோ. நமது கருணை தங்கிய பிரிட்டிஷ் ராஜாங்கத்தாருக்குள்ள சீவகாருண்யமும், அன்பும், இதக்கமும், வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் இத்தேசத்தோருக்கும் இருந்திருக்குமாயின் ஒரு ரூபாயிற்கு மூன்றரைபடி விற்கும் அரிசி ரூபாயிற்கு முப்பது படி அரிசி விற்குமன்றோ. அத்தகைய குணநலமில்லாக் கூட்டத்தோர்களே பெருகிமழைப் பெய்யவில்லையென்று வானத்தை நோக்குவதில் யாது பயன். மனிதர்களை மனிதர்களாகப் பாவித்து வானத்தை நோக்குவதைவிட்டு ஏழைமக்களது கஷ்டநஷ்டங்களை நோக்கி கருணையை, வளர்ப்பார்களாயின் காலமழையும் பெய்யும், பூமிகளின் வளமும் ஓங்கும், பலதானியங்களும் விளையும். அங்ஙனமின்றி தேசத்தில் யார்கெட்டாலென்ன யாரழிந்தாலென்ன என்னும் இருமாப்புற்று சுயப்பிரயோசனத்தைநாடி கருணையற்று வாழ்வதாயின் அவ்வாழ்க்கைக் கூடிய சீக்கிரம் நசியுமென்பது சாத்தியமாதலின் தேசத்தோர் அசத்திய தன்மங்களை ஒழித்து சத்தியதன்மத்தை நாடுவார்களென்று நம்புகிறோம்.

- 6:48; மே 7, 1913 -


290. மோட்டார்கார்! மோட்டார்கார்!!

மோட்டார்கார் என்பது மாடுகட்டாமலும் குதிரை பூட்டாமலும் நீராவியின்றி அக்கினியாவியால் ஓடும் வண்டியாம். அதனில் அமைத்துள்ள இயந்திரக் கருவியைக் கொண்டே அதிஜாக்கிரதையில் ஓட்டல் வேண்டும். அதை நடத்துவோன் எஜமானனாயினும் ஆளேயாயினும் தக்க பிலமும் மனத்திடமும்