478 / அயோத்திதாசர் சிந்தனைகள்
மற்றுஞ் சிலர் தங்களை மிக்கப் பரமயோக்கியர்களெனக் காட்டிக் கொண்டு தங்கள் சுபாசுபகாலங்களில் காலன்காலனாக சாராயங்களை வாங்கிவைத்துக் கொண்டு, வருவோர்களுக்கெல்லாம் வார்த்துக் குடிக்க வைத்துக் கெடுப்பதுடன் இந்தப் பரமயோக்கியர் செயல்களை மற்றோரும் அநுசரித்துப் பாழ்படும் கெடுவழிகளையும் திறக்கின்றார்கள். இத்தகையக் குடியைவிருத்திசெய்வோரும் குடித்துப்பாழடைந்தவருமான எத்தனையோ குடும்பங்கள் உடுக்கவுடைக்கும் உண்ண சோற்றுக்குமில்லாமல் வீடுவீடாய் அலைவதையும் வீதிவீதியாய்த் திரிவதையுங்கண்டுமுள்ள உத்தியோகஸ்தரும் வாசித்தவர்களும் அக்கொடிய துற்பழக்கத்தையே மேலும் மேலுங் கொண்டு உழல்வார்களாயின் கல்வியற்ற இழிதொழிலாளர் விடுவரோ, அறிவாளிகள் என்றும், கல்வி கற்றவர்கள் என்றும் உத்தியோகஸ்தர்கள் என்றும் முன்னுக்கு வந்துள்ளவர்கள் தங்கள் தங்கள் விவேகத்தைக் கையாடாது தாங்கள் குடித்து மதிகெடுவதுடன் தங்கள் பெண்களையுங் குடித்து கெடுக்கவைத்துக் கொள்வதால் அத்தகையாயக் குடியனுங் குடிக்காரியஞ் சேர்ந்து வாழும் வாழ்க்கையும் ஓர் வாழ்க்கை யாமோ. அவர்கள் பெற்றுள்ளப்பிள்ளைகளும் சீர்பெறுமோ. சிறுவயதிலேயே அப்பிள்ளைகள் கூசாமற்குடித்துக் குடிகெடுவார்களேயன்றி மனிதனென்னும் சிறப்பை அடையமாட்டார்கள்.
இத்தகையச் செயல்களை ஒவ்வொர் குடியர்கள் வீடுகளில் அநுபவமுங் காட்சியுமாகக் காணலாம். ஈதன்றி சகல சாதியோர்களுங் குடிக்கின்றார்களன்றி ஒரு சாதியான் குடிப்பதில்லை யென்று கூறுதற்காதாரமில்லை. ஆனால் தங்கள் தங்கள் சாதி வேஷத்தைக் கார்த்துக் கொள்ளும் அந்தரங்கக் குடியர்கள் அனந்தம் பேரிருக்கின்றார்கள் ஆயினும் சகல சாதியோராலும் பறையர்களென்று தாழ்த்தப்பட்டுள்ள கூட்டத்தோர்களே பெரும்பாலுங் குடிக்கின்றார்களென (ரிப்போர்ட்) என்னும் சில அறிக்கைகளால் காணப்படுகின்றதை யோசிக்கில் சாதிவேஷத் தலைவர்கள் பொறாமெயுமிருக்கலாம். கரையாரென்னும் வகுப்பாருள் மீன்விற்கும் பெண்டுகளையும் புருஷர்களையும் மந்தை மந்தையாகக் கள்ளுக்கடைகளில் வாயிலில் அந்தியவேளையில் சந்ததங் குடித்து உலாவுவது ரிப்போர்ட்டிற்கு செல்லுவதில்லை போலும். மற்றும் சாதி வைத்துள்ளக் கூலித் தொழில் செய்வோர்களில் நூற்றுக்கு தொண்ணூறுபெயர் குடியர்களைக் காணலாம். அவர்களும் ரிப்போர்டிற்கு வருவதில்லை போலும். சாதிவேஷத்தில் அந்தஸ்தும் உத்தியோகமும் செல்வமும் உள்ளவர்களில் நூற்றிற்கு ஐன்பதுபெயரேனும் இருக்கலாம். ஆட்களகப்படாவிட்டாலும் புட்டிகள் மட்டும் அகப்படும். இத்தியாதிபலரிலுங் குடியர்களிருந்தும் பறையர்கள்மட்டிலும் பெருந் தொகையானக் குடியர்களென்று தோன்றியது, அவர்களைத் தாழ்ந்த சாதியோரென்றுத் தாழ்த்தி சகலவற்றிலும் முன்னேற விடாமற் செய்யும் படுபாவிகளின் செயல்களே அதற்குப் பீடமாகும். காரணமோவென்னில் பத்து பெயர்க்கூடி ஒரு மனிதனை இவன் தாழ்ந்த சாதியன், கொடியன், மிலேச்சனெனச் சொல்லிக்கொண்டே வருவதுடன் அவனை நெருக்கவிடாது, தீண்டவிடாதும் இழிவுபடுத்தி வருவார்களாயின் அவன் மனங்குன்றி நாணடைந்து நாளுக்குநாள் சீர் கெடுவானேயொழிய சீர்பெறமாட்டான்.
அவற்றுள் சில விவேகிகள் மட்டிலும், அடடா இவனென்ன நம்மெ ஒத்த மனிதன் கேவலப்புசிப்புடையவன். கேவல உடையுடையவன், கலை நூல் கல்லாதவன், பொய், வஞ்சினம் திருடு, விபச்சாரங் கொலைப்பாதகம் கள்ளருந்தல் முதலிய பஞ்சபாதகங்கள் நிறைந்தவன், நம்மெய்க்கண்டு தாழ்ந்த சாதியோன் என நடிப்பதும் இழிவு கூறுவதுமாயச்செயல் பொறாமேயாலும் மிலேச்ச குணத்தாலும் தூற்றியலக்கழிக்கின்றான் என்று எண்ணி அவனை சட்டை செய்யாது விலகிப்போய்விடுகின்றார்கள்.
மற்றுமுள்ள அவிவேகிகளோ அவர்கள் தாழ்த்திக் கூறுவது மெய்யென்று கொண்டும் தங்களைத் தாழ்ந்தவர்களென்று எண்ணிக்கொண்டு