பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 5

தாரைவார்த்து விட்டு வெளிதேசங்களிற் போய் பிழைக்கின்றார்கள், மற்றுமுள்ள எழிய குடிகளிற் சிலர் தங்கள் கஷ்டநிஷ்டூரங்களை கலைக்டருக்கு எழுதிக் கொள்ளுவார்களானால் அதைக் கலைக்ட்டர் பார்வையிட்டு தாசில்தாருக்கேனும் முநிஷிப்புக்கேனும் அதை அனுப்பி விசாரிக்கும்படி செய்வாராயின் அதிலேதேனும் தாங்கள் செய்துள்ள இடுக்கங்களை எழுதியிருக்குமாயின் அதற்குத் தக்கவடைப்பைக் கலைக்கடருக்கு எழுதிவிட்டு அவ்வகையாகத் தங்களிடுக்கங்களை எழுதினவனையும் அவன் குடும்பத்தையும் வையாமல் வைது, வதைக்காமல் வதைத்து அக்கிராமத்தில் தங்கவிடாது ஓட்டிவிடுகின்றார்கள். அல்லது ஏழைகள் எழுதிக்கொள்ளுங் குறைகளைக் கலைக்டர் பார்வையிட்டு யாரிடமும் சொல்லாமல் தானே நேரில் வந்து ஏழைக்குடியானவனை அழைத்து அவன் சங்கதிகளையும் நடந்த விருத்தாந்தங்களையும் பூர்த்தியாக விசாரித்து உத்தியோகஸ்தர்களைக் கண்டிக்க ஆரம்பிப்பாரானால் இவர்களெல்லோரும் ஒன்று கூடி வசூல் செய்யும் மாசூல்களுக்கும் குறைவுநேரிடும் வழிகளை உண்டு செய்து கலைக்டர்கள் பேரில் பலவகை நிஷ்டூரங்களை கவர்ன்மெண்டுக்கு எழுதி ஜில்லாக்களைவிட்டு மாற்றுவதுடன் மற்றுமுள்ளக் குடிகளையும் வஞ்சித்து மரத்தாலி கட்டி வருவதினால் நாளுக்குநாள் பயிரிடுங்குடிகள் நசிந்து பூமிகளைப் பண்படுத்தி பயிரிடுவதற்கு ஆட்களில்லாமலும் அப்படி பூமிகளை உழுது பயிரிடுவதற்கு முயற்சித்தபோதிலும் சுதேச உத்தியோகஸ்தர்களின் இடுக்கணுக்கே பெரும்பாலும் பயந்து பயிரிடுந் தொழிலாசையையும் மறந்து கூலிவேலையேனுஞ் செய்து பிழைக்கலாமென்று புறதேசங்களுக்குப் போய்விடுகின்றார்கள். ஒருவன் பணக்காரனாக நூறு குடிகளைக் கெடுக்கும் வஞ்சகச் செயல்களினால் குடிகளும் நசிந்து பூமிகளின் விருத்தியுங்குறைந்து தானியங்களும் மெலிந்து தேசம் பாழடைந்து வருகின்றது. இத்தியாதி சீர் கேட்டிற்கும் சுதேச உத்தியோகஸ்தர்களே காரணம் என்பது சுதேசப் பயிரிடுந் தொழிலாளராகிய கிராமவாசிகளால் பரக்க விளங்கும்.

- 1:3; சூலை 3, 1907

அரசியலென்றும் இறையாட்சியென்றும் அரசாங்கமென்றும் வழங்கும் விசாலமுற்று முல்லை, மருதம், நெய்தல், குறிஞ்சி என்னும் சதுர் வள நாடுகளும், இரத, கஜ, துரக, பதாதிகளென்னும் சதுரங்க சேனைகளும், சாம, தான, பேத தண்டமென்னும் சதுர்விதவுபாய மந்திராலோசனை அமைந்த அமைச்சர்களும், வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் என்னும் சதுர் முறைக்குடிகளும், நாடரண், காடரண், மலையரண், மதிலரணாகும் நான்கரண்களும், தனசம்பத்து, தானிய சம்பத்து, ஆடை சம்பத்து, ஆபரண சம்பத்தாகும் சதுர் வித சம்பத்துக்களுமாகிய ஆறங்கங்களுடைய நிலையே அரசாங்கமென்னப்படும்.

இத்தகைய அங்கத்தை பெற்ற அரசன் விவேகம், விடாமுயற்சி, ஈகை, தைரியம், விசாரணை, விழிப்பு கலைநூற் பயிற்சி, துணிபு, தருமம் நிலைநிருத்தல், அதருமம் நீக்கல், குற்றத்திற்கு நாணுதல், அந்தஸ்தை நிலைநிருத்தல், தேசத்தில் தனக்குவருங் கப்பங்கள் பெருகுவதற்கான வித்தியாவிருத்தி செய்தல், விருத்தியால் விளைந்த பொருட்களை சேர்த்தல், சேர்த்த பொருட்களை சிதரவிடாமற் கார்த்தல், கார்க்கும் பொருளை அறம் பொருள் இன்பத்திற் சிலவு செய்தல் - குடிகள் சொல்லுவதை நம்பாமல் தானே சென்று பார்வையிடல் குடிகளிடத்து மிருதுவான வார்த்தைக்கூறுதல், ஒருகுடியால் மற்றோர் குடிக்கு கெடுதி நேரிடாமற் கார்த்தல் தனதீகையை இனிய வார்த்தையால் அளித்தல், நெறிமுறை தவிராது குடிகளைக்கார்த்தல் குடிகளுக்குத் துன்பமணுகாது தேசவிருத்தியை (வரி தெளிவில்லை) விசாரித்து நன்மெய் பயக்குதல், செவ்விய விசாரணைச் செய்தல், நீதியின் தராசுகோல் பிடித்தல், குடிகளுக்கு நேரிடுந் துன்பங்களை தனக்குற்ற துன்பம்போற் கருதி கார்த்தலுமாகிய செயல்களின் செங்கோலைச் செலுத்துவானாயின் அவனை குடிகளுக்கோர்