உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 / அயோத்திதாசர் சிந்தனைகள்


இவற்றுள் சொந்த வீட்டை உடையோர்களுக்கு மேலும் மேலும் சுகமும், குடிக்கூலி வீடுடையோருக்கு மேலும் மேலும் அசுகமுமாயிருக்குமாயின் அவைகளை அந்தந்த டிவிஷன் கமிஷனர்களே நன்காராய்து சுகச்சீரளிப்பார்களென்று நம்புகிறோம்.

ஐரோப்பியர்களே இருந்து ஆண்டு வரும் ஓர் தேசத்தில் முநிசபில் கமிஷனர்களாயுள்ளவர்களே முனைந்து குடிகளுக்கு சகல சுகாதாரங்களையும் அளித்து வருவதுடன் சொற்பலாபத்தைக் கருதி சகல வியாபாரங்களையும் நடத்தி வருகின்றார்களாம். அதனால் ஏழைமக்கள் யாவரும் அகச்சீர் பெற்றிருப்பதாக விளங்குகின்றது. அத்தகைய கருணையும் ஊக்கமும் முயற்சியும் நம்தேய கனவான்களுக்குண்டாகுமாயின் தேசமும் தேசமக்களும் எவ்வளவோ சீரும் சிறப்புமடையுமென்பது சொல்லத்தரமன்று.

- 7:12; ஆகஸ்டு 27, 1913 -


299. ஐரோப்பியருக்குள் நிறைவேறும் முநிசிபாலிடியும் ஐரோப்பிய முநிசபில் கமிஷனர்களும்

ஐரோப்பியர்களே பெரும்பாலும் வாழக்கூடிய சில தேசங்களில் ஐரோப்பியர்களே கமிஷனர்களாயுள்ளவர்கள் தங்கள் சுயவேலை யாதொன்றிருந்தபோதிலும் அவைகளை நிறுத்திவிட்டு அதிகாலையில் எழுந்து தங்களுக்கு வகுத்துள்ள டிவிஷன்களுக்குச் சென்று அந்தந்த வீதிகளின் சுத்தங்களை சரிவரச் செய்து வருகின்றார்களா என்றும் அந்தந்த வீதிகளில் தீபங்கள் சரிவர எரிந்து வருகின்றதா என்றும், அந்தந்த வீதிகளில் நீர் வருத்துப்போக்குகள் சரிவரப் பாய்ந்து வருகின்றதா என்றும், இரவுகாலங்களில் போலீஸ் பந்தோபஸ்துக் காவல் சரிவரக் கார்த்து வருகின்றதா என்றும், அந்தந்த டிவிஷன் வைத்தியசாலைகளில் வந்துள்ள வியாதியஸ்தர்களுக்கு சிகிட்சையும் உணவும் மேற்பார்வையும் சரிவரப் பார்த்து வருகின்றார்களா என்றும், அந்தந்த வீதிகளும் பயிரங்க ரோடுகளும் வண்டிகள் போக்குவருத்துக்கும் மக்கள் போக்குவருத்துக்கும் மேடுபள்ளங்களின்றி வசதியாயிருக்கின்றதா என்றும் பார்வையிட்டு வருவது அவர்களது கருணையும் செயலுமாயிருக்கின்றதாம்.

குடிகளுக்கு வேண்டிய எந்ததெந்த சுகாதாரங்களை ஒட்டி வரி வசூல் செய்கின்றார்களோ அந்தந்த சுகாதாரங்களையே மிக்கக் கவனித்து நீர்வசதிகள் கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் அவற்றை சீர்திருத்தியும், தீபவசதிகள் கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் சீர்திருத்தியும், வீதி வசதி கெட்டிருக்குமாயின் உடனுக்குடன் சீர்திருத்தியும், சுகாதாரங்களை அளித்து வருவதுடன் விரகுகள் கிடையாமல் மக்கள் சீரடைவார்களாயின் முநிஸ்பாலிட்டியாரே காடுகளை குத்தகையெடுத்து அந்தந்த டிவிஷனில் விறகு தொட்டிகளை ஏற்படுத்தி குடிகளுக்கு சொற்ப லாபத்திற்கு விற்று சுகமளிக்கின்றார்களாம். மற்றுந் தானியங்களை வியாபாரிகள் கலப்புற்றும் அதிகலாபம் வைத்தும் குட்டிகளை நஷ்டப்படுத்துவார்களாயின், முநிசிபாலிட்டியாரே அந்தந்த டிவிஷன்களில் மண்டிகளை ஏற்படுத்தி, பலதேச தானியங்களைத்தருவித்து குடிகளுக்கு சொற்ப லாபத்திற்கு விற்று சுகமளித்து வருகின்றார்களாம். மற்றும் பல சரக்குகளிலும் நெய்களிலுங் கலப்புற்று அதிக லாபம் வைத்து குடிகளை நஷ்டப்படுத்துவார்களாயின் முநிசிபாலிட்டியாரே முநிந்து பல தேச பலசரக்குகளையும் நெய்களையுந் தருவித்து சொற்ப லாபத்திற்குக் குடிகளுக்கு விற்று சுகமளித்து வருகின்றார்களாம். அத்தகையக் கருணை மிகுந்தச் செயலால் வரிசெலுத்துங் குடிகள் யாவரும் தங்கள் தங்கள் வரிகளை ஆனந்தமாக செலுத்தி சுகச்சீரடைவதுடன் முநிசிபாலிட்டியாருக்கு நன்றியறிந்த வந்தனமும் செலுத்தி வருகின்றார்களாம்.