பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

484 / அயோத்திதாசர் சிந்தனைகள்

எடுத்துவிடவேண்டும் என்பது இந்தியாவின் ராட்சிய பாரத்தை நிலைக்க விடாது கெடுக்க முயற்சியாக விளங்குகின்றதேயன்றி இராட்சியபாரம் நிலைக்கத்தக்க ஏதுவாகக் காணவில்லை. “உட்சுவரிருக்கப் புறச்சுவர் பூசுவோர்” என்னும் பழமொழிபோல் தங்கள் சுயதேசசீர்திருத்தங்கள் அனந்தமிருக்க அவைகளை நோக்காது புறதேசத்தோர் சீர்திருத்தங்களை நாடுகின்றவர்கள் ஆதலின் தங்கள் மனம்போனவாறு ஏதேதோ ஒன்றை முடிவு செய்து விடுகின்றார்கள். அஃதியாதென்னிலோ செளத்தாப்பிரிக்காவிலுள்ள ஐரோப்பியர்கள் இந்தியர்களை மிக்கக் கஷ்டப்படுத்துகிறார்கள் என்றும் கறுப்பு தேகத்திற்கும் வெண்தேகத்திற்கும் வித்தியாசம் பாராட்டியே பிரித்து நடத்துகிறார்களென்றும் வெகு ஊக்கமாகவும் மிக்கப் பரிந்தும் பெரும் பெருங்கூட்டங்கள் கூடி பேசும்படியானவர்கள் தங்கள் சுயதேசத்திலேயே கறுப்பாயிருக்கும் சாதிபேதமற்ற ஆறு கோடி மக்களை கறுப்பாயிருக்கும் பலகோல கோடி மக்கள் ஒன்று கூடிக்கொண்டு சுத்த நீரை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரமெடுக்க விடாமலும், அம்பட்டர்களை சவரஞ்செய்ய விடாமலும் அவர்களை எந்த வழியிலும் முன்னேறவிடாமலும் பூமியை உழுது பண்படுத்துங் கூலிகளுக்கு ஓரணா ஒன்றரையணா கூலிகொடுத்து அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியில்லாமல் வதைக்காமல் வதைத்து, கொல்லாமற் கொன்றுவிடும் படும்பாவிகள் செயல்களை இக்கூட்டங்கள் கூடி பேசும் பெரியோர்களறியார்களோ. பறையர்கள் தண்ணீர் மொண்டு குடிப்பதற்கு இல்லாது தவிக்கின்றார்கள் அவர்களுக்கென்று பிரத்தியேகக் கிணறுகள் தோண்ட வேண்டுமென்றும் அதற்காயப் பணவுதவி செய்யவேண்டும் என்றும் கனம் பாண்டியனவர்கள் பல தேசத்திற்குஞ் சென்று கூட்டங்கள் கூடிவருவதைப் பத்திரிகைகளின் மூலமாகவும் நேரிலும் இக்ககூட்டத்தோர் கண்டதில்லையோ. ஆடு மாடு குதிரை முதலிய மிருகஜெந்துக்கள் சாதிபேதமுள்ளோர் குளங்களிலுங் கிணறுகளிலுந் தாராளமாகத் தண்ணீர் குடிக்கலாம், தங்களை ஒத்த மனிதர்களாகிய பறையர்கள் மட்டிலுந் தண்ணீரைக் குடிக்ககூடாதென்னுங் கொடூரச்செயலை நீதிநெறி அமைந்தக் கருணைக்குரித்தாயச் செயல் என்று எண்ணியிருக்கின்றனரோ. செளத்தாப்பிரிக்காவிலுள்ள கறுப்புத் தோல் வெள்ளைத்தோல் நீதிநெறி குறைகளை நீளபேச ஆரம்பிக்கும் நீதிமான்கள் சுயதேசத்தில் கறுப்புத்தோலைக் கறுப்புத்தோலார் செய்யுங் கஷ்ட நஷ்டங் கண்டறிந்து சீர்திருத்தவும், அவர்கள் மீது தங்கள் கருணையை செலுத்தாததுமான செயலும் ஓர் செயலாமோ, அக்கூட்டமும் ஓர் சீர்திருத்தக் கூட்டமாமோ, அவர்கள் பேச முயல்வதும் பொதுநல வார்த்தையாமோ. இத்தேசத்தில் ஏற்படுத்திக் கொண்டுள்ள சாதிவேஷங்கள் யாவும் பொய் பொய் யென்று கூறுதற்குப் போந்த ஆதாரங்களிருக்க சீர்திருத்தப் பெரியோர்களென்று கூட்டம் கூடுகிறவர்களுக்கு மட்டும் சாதிவேஷம் மெய் மெய்யென விளங்குகின்றது போலும், அத்தகைய வித்தியாசம் பாராட்டுவோர் செளத்தாப்பிரிக்கா கறுப்புத்தோல் வெள்ளைத்தோலுக்குமட்டிலும் வித்தியாசம் பாராட்டாது தங்கள் தங்களுக்குத் தோன்றிய நீதிகளையும் நெறிகளையுங் கருணையுள்ளவர்போல் கண்கலக்கப் பேசிக் கரகோஷ்டஞ் செய்வது எற்றிற்கு. சுயதேசத்திலுள்ள கறுப்பர்கள் கறுப்பர்களைச் செய்யும் அக்கிரமங்களையும் அநீதிகளைக் கண்டறிந்து அவர்களை சீர்த்துவார்களாயின் அவர்களையே பொதுநலப் பிரியர்களென்றும் கருணை நிறைந்த பெரியோரென்றும், நீதிநெறி யமைந்தோரென்றுங் கொண்டாடலாம். அங்ஙனமின்றி இந்திய மந்திரிசபையை எடுத்துவிட வேண்டும் செளத்தாப்பிரிக்கா கறுப்பர்களுக்கு சுகமளிக்க வேண்டுமென்று மட்டிலும் பேசித் திரிவார்களாயின் அவர்கள் சாதியாசார சுயக்காரியர்களென்றே விளங்குகிறபடியால் கருணை தங்கிய ராஜாங்கத்தார் இவற்றை மிக்க ஆலோசிப்பார்களென்று நம்புகிறோம்.

- 7:14: செப்டம்பர் 10, 1913 -