உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 501

ஆறு கோடி மக்களும் அதோகதியடைந்து நாசமாக வேண்டுமென்னுங் கருத்துபோலும். இல்லாது மெய்யாய பரிதாபிகளாயின் உள்ளூரில் அல்லல்படும் இந்தியர்களுக்கு சுகங்கொடுத்து அயலூரிலுள்ள விந்தியர்களின் கஷ்டங்களை நீக்குவார்கள். அங்ஙனமின்றி உட்சுவரிடிந்துவிழ, புறச்சுவரைப் பூசுவதைப்போலும், தன் கண்ணில் கன்னத்தைத் தடவிக்கொண்டு அன்னியன் கண்ணில் வெண்ணெயைத் தடவுவது போலும் இத்தேசத்தில் பொய்யாய சாதிவேஷ கொடு நாற்றத்தால் ஆறுகோடி மக்கள் சொல்லொண்ணா பலவகையான துன்பங்களை அநுபவித்து வருவது உலகமெங்கும் பிரசித்தமாயிருக்க அவைகளைக் கண்ணோக்காது செளத்தாப்பிரிக்காவில் சாதிபேதம் பாராட்டுகின்றார்கள், அவைகளை நீக்கவேண்டுமென்று இத்தேசத்தோர் முயன்று நிற்பது என்ன பரிதாபமோ, ஏது கருணையோ விளங்கவில்லை.

இத்தேசத்துள் சிறிய சாதியோன் ஏதொரு குற்றஞ் செய்யினும் அவனைத் தொழுவிலிட்டு வாதிக்கவேண்டும், பெரிய சாதியோன் ஏதொரு குற்றஞ் செய்து விடுவானாயின் அவனை யாதொரு உபத்திரவமின்றி ஓர் நிலையிலிருக்கச் செய்வதுமாய பாராபட்ச சட்டங்களை நிலைபடுத்திக் கொண்டு செளத்தாப்பிரிக்காவின் மூன்று பவுன் வரியிட்டிருக்குஞ் சட்டத்தை எடுத்துவிட வேண்டுமென்று முயல்வது என்ன நீதியோ, யாது கருணையோ ஏது பரிதாபமோ விளங்கவில்லை.

இத்தியாதி வித்தியார்த்திகளின் மித்திரபேத பரிதாபம் அவ்விடமுள்ள இந்தியர்களை சீர்கெடுக்குமோ, சீர்படுத்துமோ, சற்று ஆழ்ந்து ஆலோசிக்க வேண்டியதே ஆகும்.

- 7:27; டிசம்பர் 10. 1913 -


312. சௌத் ஆப்பிரிக்கா இந்தியர் மீதுற்றுள்ள பரிதாப ஆராய்ச்சி

செளத்தாப்பிரிக்காவிற் சென்றுள்ள இந்தியர்கள் படுங் கஷ்டத்திற்காகப் பணஞ் சேர்ப்பதைப்பற்றி தமிழன் என்னும் பத்திரிகை விரோதமாகக் கூறுகிறதென்று சில கூட்டத்தோர் ஆயாசமடைவதாகக் கேள்விப்படுகிறோம். அவ்வாயாசம் ஆலோசனையற்றதேயாம். எக்கால் இத்தேசத்தோருக்குப் பொதுநல அன்பும் பொது நல உபகாரமும் உண்டாயிற்றோ அதுவே நமக்குப் பேரானந்தமாம்.

அத்தகைய உபகாரத்தையும் பணஞ்சேர்ப்பதையும் ஆராய்ந்து செய்யவேண்டுமென்பதே எமது கோறிக்கை. ஓயாக் குடியனுக்கு தினேதினே நாலணா தானஞ் செய்வதாயின் அவன் சீர்பெறுவானா சீர்கெடுவானா என்றும் பாலதானமுள்ள ஓர் சிறுவனுக்கு நித ஒத்தை ரூபாய் அன்புடன் ஈய்ந்து வருவதாயின் சிறுவன் கலைகற்று அறிவின் விருத்தி பெறுவானா, அன்று அறிவு மயங்கி சீர்கெடுவானா என்றும், ஓர் எஜமானிடம் பத்து ரூபா கூலியில் உத்தியோகஞ் செய்வோனுக்கு வேறிடம் பத்து ரூபாய்க் கிடைக்குமாயின் எஜமானனின் ஊழியத்தை சரிவரச் செய்வனோ ஒருக்காலுஞ் செய்யமாட்டான். அதுபோல் செளத்தாபிரிக்காவிலுள்ள இந்தியர் கஷ்டப்படுகின்றார்கள் என்று பரிதவித்து பணங்களை சேகரித்தனுப்புவதாயின் அப்பணத்தினால் அங்குள்ள இந்தியர்களுக்கு சுகமுண்டாமா அன்றே அசுகமுண்டாமா என்று முதலாவது ஆலோசிக்க வேண்டியது. அவற்றுள் பணங்களை சேகரித்து அனுப்பும் தைரியத்தினால் அவ்விடமுள்ள இந்தியர்கள் இராஜாங்கத்தையே எதிர்த்துக்கொண்டு உள்ள சுகமுங் கெட்டு பாழடைவார்களாயின் அவர்களை முற்றும் சீர்திருத்தி சுகமடையச் செய்தற்கு இத்தேசத்திய இந்துக்களுக்கு இயலுமோ. இத்தேசத்திய இந்துக்களை நெல்லிக்காய் மூட்டை என்றும், மகமத்தியர்களை வெல்ல மூட்டையென்றுஞ் சொல்லத்தகுமே. அதாவது ஐந்தாறு பெயர் கூடி நெல்லிக்காய்களைப் பொறுக்கி ஓர் கோணிப்பையில் நிரப்பி விட்டால் அதற்கு நெல்லிக்காய் மூட்டையென்று பெயர். அம்மூட்டையைக் கொட்டினாலோ பல விடங்களிலும் சிதறியோடுங்கால் மறுபடியும் ஐந்தாறு