உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/561

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 513

என்றும் இட்டியாகம் என்றும் கிருதயாகம் என்றும் செய்து வந்தப் பெயர்களையே பீடமாகக் கொண்டு பசுயாகம் என்றும், அசுவயாகம் என்றும், புருஷயாகம் என்றும் பெயரைக் கொடுத்து சுராபானங் குடிப்பதையும் மாமிஷந் தின்பதையுமே ஆனந்தமாகக் கொண்டுவந்தார்கள். இத்தேசப்பெளத்தர்களுக்கு பசுவை நெருப்பிலிட்டுப் பதைக்கச் சுட்டுத் தின்னுங் கொடூரக் கொலையும், சுராபான மருந்தி மயக்கமிகுத்து ஆண் பெண் நிலைகுலைந்து திரியும் அசுத்தத்தையும், மிலேச்சச் செயல்களையுங் கண்டு அக்கூட்டத்தோரை மிலேச்சரென்றும், ஆரியரென்றும், மிலைச்சரென்றும், ஈனரென்றும், இன்னனென்றும், ஈனரென்றும், இன்டென்றும் வழங்கி அதுகொண்டே இத்தேசத்தோர் அவர்களை அடித்துத் துரத்தவும் ஆரம்பித்துக் கொண்டார்கள். இதுவே பௌத்தர்களுக்கும் மிலேச்சர்களுக்கும் உண்டாய விரோதமூலம் என்னப்படும். சுராபானமாம் மயக்க வஸ்துவைக் குடித்துத் திரிவோரை சுரர் என்றும், மயக்க வஸ்துவைக் குடிக்காது சுத்த சீலத்திலிருக்கும் பௌத்தர்களை அசுரர்களென்றும் வகுத்து காமியமுற்று சிற்றரசர்களையும் கல்வி அற்றப் பெருங் குடிகளையுங் கொண்டு அவர்களைக் கொல்லவும் துன்பப்படுத்தவும் ஆரம்பித்துக்கொண்டு தங்கள் மிலேச்ச செயல்களுக்கு எதிரடையா இருந்த பௌத்தர்களையும் பௌத்த மடங்களையும் பௌத்த சாஸ்திரங்களையும் மாறுபடுத்தி அழிக்கத்தக்க மித்திரபேதச் செயல்களையே செய்துவந்ததுமன்றி பெளத்த சாஸ்திரங்களில் வரைந்துள்ளப் பெயர்களையும் செயல்களையுமே மூலமாகக் கொண்டு நூதன சாதிகளையும் நூதன மதங்களையும் உண்டு செய்துக் கொண்டவற்றுள் சிவமதமென்று தோற்றவைத்து அவற்றிற்கு சத்தி பூசையென்னும் பெயர் கொடுத்து மயக்க வஸ்துக்களையும் மாமிஷத்தையும் தங்கள் தேவனுக்குப் படைத்து சகலருங் குடித்து வெறித்து கற்புடைய ஸ்திரீகளின் நிலைகளையுங் கெடுத்துவந்தார்கள். இன்னோர்வகை நூதன விட்டோ, விட்பா, விட்டுணு என்னும் மதத்தோர் தோட்டங்களுக்குச் சென்று வெறிக்கக் குடித்துக் கூத்தாடும் உச்சவம் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டார்கள். இம்மயக்கக்குட்டிகளும் விபச்சாரத்திற்கு என்றே ஏற்படுத்திவந்த புண்டரீக யாகத்தையும் இரவிக்கை உச்சவத்தையும் விரித்து எழுதுவோமாயின் வீணே பத்திரிகை அசுசியடைந்துபோம். ஆதலின் மயக்கவஸ்துவின் குடிக்கும் மாமிஷ விருத்திக்கும் மதாச்சாரிகளே முதற்காரணமாக விளங்கினவர்களாவர். அம்மயக்க பானத்தையே நாளுக்குநாள் விரும்பி மதுவென்னும் இனிய வஸ்துவை புளிப்பேற்றி அருந்துதற்கு ஆரம்பித்துக் கொண்டதுடன் அவுல் சாராயம், கொட்டாங்குச்சி சாராயம், அரிசி சாராயம் என்னும் மயக்க பானங்களை இறக்கி அதையுங் குடிக்க ஆரம்பித்துக் கொண்டார்கள். இத்தேசத்திய குடியின் விருத்திக்கு அடிபடையாய் நின்றது நூதனமதங்களே காரணமென்று துணிந்து கூறுவோம்.

ஈதன்றி மற்றுந்தோன்றிய மதங்களோ தங்கள் தேவனுக்குத் தலையீற்று கன்றுக் குட்டிக்கறியும் தலையீற்று புறாக்குஞ்சுக்கறியும் ஆட்டையும் மாட்டையும் எங்கள் தேவன் பெயரைச் சொல்லிக் கொன்றுத்தின்பதில் யாதொரு தோஷமும் இல்லை என்று கூறுவதுடன் எங்கள் தேவன் உதிரத்துக்கு சமான கொஞ்சம் ஒயின் குடியுங்கோளென்ற மதாச்சாரிகளின் போதனையான அற்ப சாதனமானது எங்கு விருத்தியடைந்து விட்டதென்னில் சுவாமிப்பிறந்தார் என்று சாராயக்கடைகளிலும், கர்த்தர் பிறந்தார் என்று கள்ளுக்கடைகளிலும் பூமாலை மாட்டி பேருச்சவங் கொண்டாடும்படியாகிவிட்டது. இவற்றிற்கும் அம்மதாச்சாரிகளின் போதனையின் குறைவே காரணமாகும். அக்காரணம் யாதென்னிலோ அவர்கள் மதபோதனையில் வரைந்துள்ள பஞ்சசீலத்தில் கொலை செய்யாதே, பொய் சொல்லாதே, களவு செய்யாதே, விபச்சாரஞ் செய்யாதே என்னும் நான்கு சீலங்களை மட்டிலும் வரைந்து வைத்துக்கொண்டு மதியை மயக்கும் மதுவை அருந்தாதே என்னும் ஒரு சீலத்தை விட்டிருப்பதேயாம். அச்சீலத்தை விட்டிருப்பதால் சாமிப் பிறந்தார் என்னும் வருஷக் குடியர் மாதக் குடியர்களானதும், மாதக்குடியர் வாரக்குடியர்களானதும்,