516 / அயோத்திதாசர் சிந்தனைகள்
அன்னமிட்டோர் வீட்டிலேயே கன்னமிடுவதுபோலும் அன்னை தந்தையர்போல் ஆதரித்து வரும் அரசாட்சியோரையே எதிர்ப்பதும் அவர்களரசாட்சியையே அபகரிக்க வழிதேடுவதுமாய ஏதுக்கள் நீதிக்கும் நெறிக்கும் பொருந்தவே பொருந்தாவாம். நீதியும் நெறியும் அமைந்த செயல்களே சகல சித்தியையுமளிக்கும். நீதிநெறி அற்றச் செயல்களோ உள்ளத்தையும் பாழ்படுத்திப்போடும் என்பது சத்தியம் சத்தியமேயாம்.
- 7:37: பிப்ரவரி 18, 1914 -
319. லார்ட் மின்டோ பிரபுவின் மரணம்
நமது லார்ட் மின்டோபிரபு அவர்கள் கன்னடாவென்னுந் தேசத்தில் கவர்னர் ஜெனரலாயிருந்து பின்னர் இந்தியதேச சக்கிரவர்த்திப் பிரதிநிதி வைசராயாக வந்து இந்திய ராட்சிய பாரந்தாங்கி லண்டனுக்குச் சென்று அங்குஞ் சில சீர்திருத்த விஷயத்தில் உழைத்து வருங்கால் ஓர்வகை வியாதிகண்டு இம்மாதம் முதல் திகதி ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்த செய்தியைக் கேட்டு மிக்க ஆயாசமடைந்தோம். காரணமோவென்னில் நமது பிரிட்டிஷ் இந்திய சக்கிரவர்த்தியாருக்கே பிரிதிநிதியாக வந்து இராட்சிய பாரந்தாங்கி இருந்தவராதலால் இந்திய தேசத்தோர் யாவரும் அவருடைய மரணத்தைப் பற்றி துக்கிக்கவேண்டியதேயாம்.
அதனினும் அவர் இந்திய தேசச் சக்கிரவர்த்தியார் பிரதிநிதியாக வந்து தனதாளுகையை ஒப்புக் கொண்டபோது சுதேசிகளென்போர் கலகங்களும் வெடிகுண்டெறிவோர்களும் பத்திரிகை எழுதுவோர் கலகங்களும் பலவாறாகத் தோன்றி அவர் மனதைப் புண்படுத்திவிட்டது. ஆயினும் அவைகள் யாவற்றிற்கும் அவரஞ்சாது அடக்கவேண்டியவர்களை அடக்கியும் ஆதரிக்க வேண்டியவர்களை ஆதரித்தும் முன்னோர் வகுத்துள்ள சட்டதிட்டங்கள் யாவையும் அவர்களுக்கு குறைவு நேராது நிலை நிறுத்தியும் வந்தார். இத்தியாதி நிர்வாக காரியாதிகளுக்கும் நமது பிரிட்டிஷ் சக்கிரவர்த்தி யாரையும் தாய் சபையோர்களையுமே காரணஸ்தர்களென்னலாம் எவ்வகையிலென்பரேல் இந்திய தேசத்திற்கு ராஜப் பிரதிநிதியாக அனுப்பப்பட்டோர் யாவரும் தனச் செல்வம் பெற்றுள்ளவர்களைத் தெரிந்தெடுத்தனுப்புவது இயல்பாம். அதுகொண்டு அவர்கள் இராட்சிய பாரந்தாங்குங்கால் தங்களுக்கமைந்துள்ள மேலான அந்தஸ்தின் செயல்களையும் மேலாய அன்பின் நோக்கத்தையும் முன்னிட்டுபார பட்சமின்றி எவரது நட்பையுங் கருதாது நீதியின் செங்கோலை நடாத்தி வருகின்றார்கள்.
அத்தகையாருள் நமது லார்ட்மின்டோ அவர்களும் ஒருவராகும். அதனால் இந்திய ராட்சிய பாரத்தை தாங்கிய காலத்தில் சுதேசிகளென்போர் கலகமோ சொல்லத்தரமன்று. பத்திரிகைகளின் கலகமோ பேசத்தரமன்று. இவர்களது கேடுபாடுகளால் தேசமனுக்களின் மனக்கவலைகளோ பலவாறுற்று திகைத்து நின்றார்கள். இத்தியாதி கோஷத்தில் சுதேசிகளென்போரையும் அடக்கி பத்திரிகைகளுக்கும் வாய்பூட்டிட்டு தேசமனுக்களின் மனக்கவலைகள் யாவும் போக்கி சுகநிலையளித்தப் பிரபு லார்ட் மின்டோ அவர்களேயாம். ஆதலின் அவரது செய்நன்றி மறவாது அவரது மரண செய்தி எட்டியவுடன் இந்தியதேசம் நீதி மன்னரொருவரை இழந்தது என்னுந் துக்கத்தை இந்தியா தேசமனுக்கள் யாவரும் அநுசரிக்க வேண்டியவர்களாகின்றோம்.
இவர் 1847 ளு ஜூலை மீ 9உ பிறந்தவர். மரணமடையும்போது வயது 67. அவர் முதல் ஈடன் இரண்டாவது டிரினிடி காலேஜ் கேம்பிரிட்ஜில் வாசித்தவர், அவர் மிலிடெரி ஸெர்விஸில் அதிக பிரீதியுள்ளவர், ஸ்காட்ஸ்கார்ட்டில் மூன்று வருஷம் துவஜக் கொடி பிடிப்பவராக இருந்து 1871 ளு துருக்கு பக்கம் வாலண்டியராயிருந்தார். பிறகு இராஜாங்க முறையில் ஈடுபட்டார். 1898ம் வருஷத்தில் கனடாவுக்கு கவர்னர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார், 1905ம் வருஷத்தில் இந்தியாவுக்கு வைஸ்ராயாக நியமனம் பெற்றார்.
- 7:40; மார்ச் 11, 1914 -