534/ அயோத்திதாசர் சிந்தனைகள்
7. ஏழு கடல்களின் விவரம்
முன்கலை திவாகரம்
உவ ரொடு கரும்பு மது நெய், தயிர் பால் புனன்
மாகட வேழென வகுத்தனர் புலவர்.
பூர்வ புத்தமார்க்க வித்துவான்கள் கடல் ஏழெனும் பெயரை எவ்வகைப் பொருட்களுக்களித்துள்ளார் என்றால், பூமியின் மீது விட்டவுடன் மடைபிரண்டோடும் சலனங்களெவையோ அவைகளுக்கேயாம். அதாவது - உப்பு நீரை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், உவர்நீர் கடலென்றார்கள். கரும்பின் சாற்றை பூமியின் மீது விட்டால் அதுவும் மடைபிரண்டோடும், கரும்பஞ்சாற்றுக் கடலென்றார்கள். மதுவென்னுங்கள் தேன் இவற்றை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், மதுக்கடலென்றார்கள். எள் நெய், ஆமணக்கு நெய், பசுநெய், தெங்குநெய் முதலிய நெய்களை பூமியின் மீது விட்டால், அவைகளும் மடைபிரண்டோடும், நெய்க்கடல் என்றார்கள். தயிராகும் புளிச்சாரங்களை பூமியின்மீது விட்டால் அவைகளும் மடைதிரண்டோடும், தயிர்க்கடல் என்றார்கள், ஆட்டுப்பால், மாட்டுப்பால், மதுப்பால், மரப்பால் முதலியவைகளை பூமியின்மீது விட்டால் அவைகளும் மடை திரண்டோடும், பால்கடல் என்றார்கள். இளநீர், பனைநீர், மழைநீர், புனநீராகும் சுத்தநீர்களை பூமியின்மீது விட்டால் அதுவும் மடைதிரண்டோடும், புனல் கடல் என்றார்கள்.
இவ்வகையாக, பூமியின்கண் ஜலம்போல் ஊடுருவி திரண்டோடும் வஸ்துக்களுக்குக் கடல்கள் என்றார்கள். உலகத்தில் கண்ணுக்குத் தோற்றமாய் மடைபிரண்டோடும் உப்புநீர், சுத்தநீர், கள், கருப்பஞ்சாறு, பால், தயிர், நெய் ஆகிய ஏழு வழு வஸ்துக்களையும் எழுகடலென வகுத்திருக்கின்றார்கள்.
விவேக மிகுத்த மேன்மக்கள், உலகத்தில் தோன்றும் கூட்டத்தொருபெயர், ஒரு சொற்பல பொருட்பெயர், ஒலிபற்றியபெயர், செயல் பற்றிய பெயர், பண்பு பற்றிய பெயர், செயற்கை வடிவப்பெயர், பல் பொருட் பெயர், இடப் பெயர், மரப்பெயர், விலங்கின் பெயர், மக்கட்பெயர், தேவர்கள் பெயர் என்னும் ஒவ்வோர் தோற்றங்களுக்கும் பெயர்கள் அளித்துள்ளவற்றுள் எழுவகைக் கூட்டத்திற்கும் எழுகடல் என்னும் ஒருவகைப் பெயர் கொடுத்துள்ளார்கள்.
இதனந்தரார்த்தம் அறியாதோர் கல்வியற்றோரை வஞ்சித்துப் பொருள் பறிப்பான் வேண்டி பொய்ப்புராணமாங் கட்டுக்கதைகளை வரைந்து பால்கடல் என்னும் ஒரு சமுத்திரம் உண்டென்றும் அதில் ஓர் பரமன் படுத்திருப்பாரென்றும் பரக்கக் கூறுகின்றனர். இன்னும் இப்பொய்ப் புராணங்களைப் புரட்டிப்பார்க்கும் போதகர்கள் தோற்றாவிடின் அவர்கள் பரமன் பால்கடலில் படுத்திருப்பதுபோல் தயிர்கடலில் பரமன் தவிழ்ந்திருக்கும் புராணம் ஒன்று, நெய்கடலில் பரமன் நிமிர்ந்திருக்கும் புராணம் ஒன்று, உப்புக்கடலில் பிரமன் உட்கார்ந்திருக்கும் புராணம் ஒன்று, கருப்பஞ்சாற்றுக் கடலில் பரமன் கவிழ்ந்திருக்கும் புராணம் ஒன்று, மதுக்கடலில் பரமன் மகிழ்ந்து நிற்கும் புராணமொன்று, நல்லத்தண்ணீர்க்கடலில் பரமன் நகைத்திருக்கும் புராணம் ஒன்று எழுதி மற்றவர்களையும் இருளில் நுழைத்து மடியவைத்திருப்பார்கள்.
ஆதலின் நமதன்பர்கள் ஒவ்வொருவரும் பால் கடல் ஏதோ ஓரிடமிருக்கும் என்று திகைக்காமல் நமக்குள் வழங்கும் தயிர், பால், நெய், கரும்புசாறு, தேன், உப்புநீர், நல்ல நீர் என்னும் இவ்வத்துக்களுக்கே கடல்கள் என்னும் பெயர்களை அளித்துள்ளார்கள் என்று அறிந்துக் கொள்ளுவீர்களாக.
- 1:9; ஆகஸ்டு 15, 1907 -
8. மதுரை செந்தமிழ்
ம-அ-அ-ஸ்ரீ மதுரை செந்தமிழ் பத்திராதிபருக்குப் பட்சமான வந்தனம்:- ஐயா தாம் பராபவ வருஷம் சித்திரைமீ வெளியிட்டுள்ள பகுதி-6 தொகுதி-4 பக்கம் 223-ல் பழந்தமிழ் குடிகள் என முகப்பிட்டு அவற்றுள் காலவரையின்றி