உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

542/அயோத்திதாசர் சிந்தனைகள்

புத்ததன்மங்களுடன் புத்தபிரான் சில பிராமணர்கள் கோட்பாடுகளைக் கண்டித்து அவர்களை புத்தமார்க்கத்தில் சேர்த்துவிட்டதுபோல் எழுதி அனுப்பி விட்டிருக்கின்றார்கள்.

அவ்வகையால் தங்களைத் தாழ்த்தி புத்தரை உயர்த்தி எழுதிக்கொடுக்க வேண்டியக் காரணம் யாதென்பீரேல், அவர்களைத் தாழ்த்துவதும் உயர்த்துவதும் பெரிதல்ல. இப்பிராமணர் என்று சொல்லித் திரியும்படியான கூட்டத்தார் புத்தர் காலத்திலேயே இருந்தார்கள் என்னும் ஓர் ஆதாரம் நிலைத்துவிடுமாயின் அதைக் கொண்டே தங்களை இத்தேசப் பூர்வக்குடிகள் என விளக்குவதற்கேயாம்.

சிலர் உபநிடதங்களை வாசித்து புத்தர் தெளிந்திருக்கின்றார் என்று மாக்ஸ்முல்லர் கூறுகின்றாரே அதினால் இப்பிராமணமதம் முன்பே இருந்ததல்லவா என்பாரும் உண்டு.

இவ்வேதங்களுக்கும் உபநிடதங்களுக்கும் உரியவர்களாகிய பிராமணர்கள் அறியாமல் மாக்ஸ்முல்லர் சொல்லுகிறார் நானும் அவற்றை சொல்லுகிறேன் என்பது ஏனவாயன் கதையேயாகும்.

மாக்ஸ்முல்லர் அவர்களோ புத்தர்கால பாஷையையும் அவர் கண்டடைந்த மார்க்கத்தையும் அவரால் உண்டு செய்துள்ள பாஷைகளையும், பௌத்த சங்கத்தோர் உபநிடதங்களையும் அதனதன் காலவரைகளையும் சீர்தூக்கிப்பாராமலும் தன்னிடம் கிடைத்துள்ள உபநிடதம் முந்தியதா புத்ததன்மங்கள் முந்தியதா என்று உணராமலும் ஆதாரமற்ற அபிப்பிராயம் அளித்திருக்கின்றார்.

- 2:9; ஆகஸ்டு 12, 1908 -

அவர் ஒருவர் அபிப்பிராயத்தைக்கொண்டு சரித்திரங்களையும் செப்பேடுகளையுஞ் சிலாசாசனங்களையும் அவமதிக்கப்போமோ ஒருக்காலுமாகா.

புத்தபிரானுக்கு முன்பு வேதங்கள் இருந்ததென்பதும், உபநிஷத்துக்கள் இருந்ததென்பதும் இந்துதேசப் பூர்வ விசாரிணையற்ற பொது அபிப்பிராய மன்றி அஸ்த்திபாரமற்றக் கட்டிடமுமாகும். இந்நான்கு வேதங்களும் திரண்டு புத்தகருபமாய் வெளிவருவதற்குக் காரணம் யாவரென்றும் எப்பாஷையிலிருந்து யாவரால் கொடுக்கப்பட்டதென்றும் எக்காலத்தில் தோன்றியதென்றும் அறிந்தோம்.

இனி ஒருவன் அதை வாசிப்பதினாலும் அதைக் கேட்பதினாலும் யாது பயனடைந்து யீடேறுவானென்பதையும் விசாரிப்போமாக.

இருக்குவேதம் 13-ம் பக்கத்தில் அக்கினி, வாயு, சூரியனென்னும் மூன்று கடவுளர்கள் உண்டென்று கூறி அவற்றுள் யதார்த்தமாக ஒரே கடவுளாகிய மகாத்மா உண்டென்றும் அம் மகாத்மாவே சூரியனென்று குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய வேதத்தை ஒரு கடவுள் பிரம்மாவுக்குப் போதித்து, பிரம்மா முனிவர்களுக்குப் போதித்து அவர்கள் சிஷியர்களுக்குப் போதித்ததாகக் கூறி அதே கடவுள் வேதங்களிலுள்ள சில பாகங்களை நேரில் முநிவருக்கே போதித்திருப்பதாகவே பாயிரத்தில் குறிப்பிட்டிருக்கின்றது.

இதைப் பின்பற்றிய ஒருவன் கடவுள் என்னும் வார்த்தையை நம்புகிறதா, பிரம்மாவை நம்புகிறதா, முநிவர்களை நம்புகிறதா, அக்கினியை நம்புகிறதா, வாயுவை நம்புகிறதா, சூரியனை நம்புகிறதா, சூரியனே மறுபெயர் கொண்ட மகாத்மாவை நம்புகிறதா, அன்றேல் அச்சூரியனைக் காலம் பார்த்து விழுங்கும் இராகு என்னும் பாம்பை நம்புகிறதா என்னும் விவரம் யாதும் விளங்கவில்லை.

இவற்றை யாரொருவர் நம்பி இன்ன சுகமடைந்துள்ளார் என்னும் பலனும் விளங்கவில்லை. இத்தியாதி கடவுளர்களும் நீங்கலாக யஜுர்வேதம் 120-வது பாகத்தில் பிரம்மத்தைத் தெளிவிக்கவேண்டும் என்று புத்திரன் பிதாவைக் கேட்கின்றான். அதற்குப் பிதா சருவமும் பிரம்மமென்றார்.