பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /551

இத்தொழிலாகுந் தோற்றத்தையே உயிருடல் இரண்டிற்கும் ஒத்தகுணமென்று வகுத்துள்ளார்கள்.

உயிரில்லா பொருட்குணமாகும் இருகோணம், முக்கோணம், வட்டம், சதுரமென்னும் வடிவங்களையும், துற்கந்தம், நற்கந்தம் என்னும் நாற்றங்களையும், வெண்மெய், கருமெய், செம்மெய், பொன்மெய், பசுமெய் என்னும் ஐவகை வருணங்களையும், கைப்பு, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு, என்னும் அறுசுவைகளையும், வெம்மெய், தண்மெய், மென்மெய், வன்மெய், நொய்மெய், சீர்மெய், இழிமெய் என்னும் எட்டு ஊறுதளையும் உயிரல் பொருட்குணமென வகுத்துள்ளார்கள்.

உடல் உயிர் என்னும் இரண்டினுள் உயிர் என்னும் செயலற்றவிடத்து உடல் அசையாமலும், உடல் தோற்றி அசையா இடத்து உயிரென்னும் பெயரற்றுப்போவதால் ஒற்றுமெய் நயத்தால் ஒன்றென்றும், வேற்றுமெய் நயத்தால் இரண்டென்றும் வழங்கிய உரூவக மனிதனை ஆன்மன் என்றும், புருஷன் என்றும் பொதுப்பெயரால் வழங்கி வந்தார்கள்.

பஞ்சஸ்கந்தங்களால் அமைந்துள்ள புருஷனுக்கே ஆன்மனென்றும், ஆத்துமனென்னும் பெயருண்டாயிற்று.

மனுட உருவக தோற்றம் உண்டாயவிடத்து ஆத்துமமென்னும் பெயருண்டாயதன்றி தோற்றமுண்டாகாவிடத்து ஆன்மமென்னும் பெயரில்லை.

இத்தகைய உடலுயிரென்பவற்றுள் தான் கற்றவைகளையும், கண்டவைகளையும் சிலகால் சென்று சிந்தித்தபோது கொடுக்குங் குணத்திற்கு உள்ளமென்றும், அவ்வுள்ளமே விரிதலும், மறைதலுமாகிய குணத்திற்கு மனமென்றும், அவ்வகையால் விரியும் மனதை சற்று தடுத்தாளும் குணத்திற்கு மதி என்றும், அம்மதியைப் பெருக்கி இஃது நன்கு தீதென்று தெளிந்து தேறுங்குணத்திற்கு அறிவென்றும், அவ்வறிவின் பெருக்கத்தால் உடலுயிர் இரண்டிற்கும் நிகழும் பிணிமூப்புச் சாக்காட்டினால் உண்டாகும் துக்கம், துக்கோற்பவம், துக்கோற்பவ காரணம், துக்க நிவாரணமாகும் நான்கு வாய்மெய்களை உணர்ந்து,

காக்கைபாடியம்

உடலுயிர்பொருத்தா லுள்ளந்தோன்றி / கடலுளவிரிவே மனமென வாய்ந்து

வடவிரிமனமாள் மதியெனப்பெருகி / திடம்பெரு வறிவாற் றேவராகினரே.

நல்வாய்மெய், நற்காட்சி, நல்லூற்றம், நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைபிடி, நல்லுள்ளமாம் அஷ்டாங்கமார்க்கத்தில் சென்று ஞானவாசிரியராகும் அறஹத்துவை அடுத்து உபநயனம் என்னும் உதவி விழியாம் ஞானக்கண் பெற்று ஊனக்கண்ணற்று உள்விழி பார்வையால் சுழிமுனைக் கனலேறி ஜாக்கிரத்தில் சுழுப்த்தியாயபோது தசநாதமுண்டாகிதானே தானே சுயம்பிரகாச உண்மெய்யனாகின்றான். இந்நிலையையே மெய்கண்டோனென்றும், மெய்யன் என்றும் கூறப்படும்.

இம்மொழியையே பாலிபாஷையில் தானே தானே சுயம்பாதலை ததாகதரென்றும், மெய்யனை புத்தரென்றும், அழைக்கலாயினர்.

மெய்கண்டவுடன் பஞ்சஸ்கந்த விவகார ஆன்ம பற்றற்று புளியம்பழத்தின் ஓடுபோல் உடலுயிர் என்னும் பெயரற்று அநித்திய அனாத்தும் நிருவாணநிலை அடைகின்றான்.

தாயின் கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது சுவாபம்.

- 2:16; செப்டம்பர் 30, 1908 -

தாயினது கருப்பையில் குழவி கட்டுப்பட்டிருக்குங்கால் அது முட்டுவதும், உலாவுவதும் சகலருக்கும் தெரிந்த விஷயம். அவ்வகை உலாவும் குழவிக்கு அதன் மூச்சானது உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது இயல்பாம்.

அஃதெவ்வகையால் உள்ளுக்கே ஓடிக்கொண்டிருப்பது என்பீரேல் உந்தியாகும் கொப்புழை ஆதாரமாகக் கொண்டு இடதுபுற மார்பின் உள்ளுக்கே