பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

558 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நடந்துவந்தார்களோ அதனைப் பின்பற்றி அநுசரித்து வந்தக் குடிகள் தற்காலம் நூதனமாகத் தோன்றியுள்ள சிவமதம், விஷ்ணுமதம், பிரமமதம், ஆரிய மதங்களைத் தழுவிக் கொண்டபோதிலும் பூர்வ புத்தசங்க மந்திரவாதிகளின் தன்மகன்மங்களையே அனுசரித்து வருகின்றார்கள்.

புத்தசங்கத்தைச் சார்ந்த சமண முநிவர்களுள் உபநயனம் பெற்று வேத அந்தத்தில் நிலைத்து அறஹத்துக்களாம் அந்தணர்களாகி தேகத்தைக் கழற்றி இருபிறப்படையும் ஜீவன்முத்தர்களாம் சீவகர்களானோர் நீங்கலாக அஷ்டசித்தின் அந்தத்திற்கும், வேத அந்தத்திற்கும் மத்தியில் நிலைத்து தேகத்தை நீருடன் நீராய்கலத்தலும் நெருப்புடன் நெருப்பாய்க்கலத்தலும், காற்றுடன் காற்றாய் கலத்தலும், மண்ணுடன் மண்ணாய் கலத்தலும், விண்ணுடன் விண்ணாய் கலத்தலுமாகிய எண்பத்தொன்பது சித்துக்களும் விளையாடி அந்தரத்து உலாவுகின்றார்கள். இவர்களையே விதேகமுத்தர்கள் என்றும், சாரணர்கள் என்றும், சித்தர்கள் என்றும் கூறப்படும்.

பின்கலை நிகண்டு

நீரினில் பூவில் வானில் / நினைந்துழி யொதுங்குகின்ற
சாரண் ரெண்மராவர் / சமணரிற் சித்திபெற்றோர்.

மணிமேகலை

நிலத்திற்கலத்து நெடுவிசும்பேறிச் / சலத்திற்றிரியுமோர் சாரணன்றோன்றி.

சிலப்பதிகாரம்

இந்திரவியார மேழுடன்புக்காங் / கந்தரசாரிக ளாறைம்பதின்மர்.
அந்தர சாரிகள் மறைந்தனராற்று / இந்திரவியார மேழுடன் போகி.

சீவகசிந்தாமணி

இலங்கு குங்கும மார்பனேந்துசீர் / நலங்கொள் சாரணர் நாதன்கோயிலை
வலங்கொண்டார் மலர்ப்பிண்டி மாநிழற் / கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான்.

பாம்பாட்டிசித்தர்

வச்சிரத்திற் கோர்பழுது வாய்க்குமாயினும்
வல்லுடம்புக் கோர்குறைவு வாய்த்திடாது
மெய்ச்சசட முள்ளவெங்கள் வேதகுருவை
வேண்டித் துதித்துநின் றாடு பாம்பே.
மூண்டெறியு மக்கினிக்குண் மூழ்கிவருவோம்
முந்நீரி லிருப்பினு முழுகிநிற்போம்
தாண்டி வரு வெம்புலியைத் தடுத்தாளுவோம்
தார்வேந்தர் முன்புநின் றாடாய்பாம்போ.

- 2:20; அக்டோபர் 28, 1908 -

சீவக சிந்தாமணி

நலத்திரு மா மக ணயந்த தாமரை / நிலத்திருந் திருசுடர் நிமிர்ந்து செல்வபோ
லுலப்பருத் தவத்தினா லோங்கு சாரணர் / செலத்திரு விசும்பொளி சிறந்ததென்பவே.

சுருதி முடிவென்றும், மறைமுடி வென்றும், வேத அந்தமென்றும் வழங்கும் வேதாந்தத்திற்கும், அஷ்டசித்துக்களின் அந்தமாம் சித்தாந்தத்திற்கும் மத்தியில் தேகத்துடன் அந்தரத்துலாவுவோர்களே சித்தர்களென்றும், சாரணர்களென்றும் அழைக்கப் பெற்றார்கள்.

இதை யநுசரித்தே தாயுமானவர்சித்தர்களை தியானிக்குங்கால் ‘வேதாந்த சித்தாந்த சமரச நன்னிலை பெற்ற வித்தகச் சித்தர் கணமே’ என்றுங் கூறியுள்ளார்.

இத்தகைய வேதாந்திகளும் சித்தாந்திகளும் தற்கால முளரோவென்று உசாவுவாறுமுண்டு. அவர்கள் அந்தரத்தில் நட்சேத்திரம் பெற்று அகண்டத் துலாவுகினும் நமது அஞ்ஞானம் நிறைந்த ஊனக்கண்ணிற்குப் புலப்படாமல் இருக்கின்றார்கள். சாந்தம், ஈகை, அன்பெனும் காருண்ய முகத்தினின்று உபநயனமாம் உள்விழிப் பார்வையால் அவர்களைக் காணக் கூடும்.

தாயுமானவர்

ஞானசுகுணாகர முகங்கண்போதிலோ திலோ நவனாதசித்தர்களு முன்
னட்பினைவிரும்புவார் சுகர்வாமதேவர் முதன் ஞானிகளு முனை மெச்சுவார்.