பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 13

அவர்கள் துக்கத்தையும் அப்போதைக்கப்போது அரசனுக்கு அறிவித்து வேண்டிய திருத்தங்களைச் செய்தல் வேண்டும்.

வேற்றரசர் படையுந் தங்கள் படையுங் கலந்து போர்புரியுங்கால் தங்கள் படையின் உச்சாகமானது அரசனைக் காக்கவேண்டும். தேசத்தைக் காக்கவேண்டும் என்னும் தீரத்தால் தங்கட் பிராணனைத் துரும்புபோல் எண்ணி யுத்தமுனையேறத்தக்க அன்பூட்டி ஆதரித்தல் வேண்டும்.

சிதறியக் குடிபடைகளை சேர்த்தலும் சேர்ந்துள்ள குடிபடைகளை ஆதரித்தலும் நூதனமாக வருங் குடிகளின் பூர்வதேயங்களையும் குணாகுணங்களையுஞ் செய்கைகளையும் நன்காராய்ந்து நகரத்துள் சேர்க்கவேண்டியவர்களை நகரத்துள்ளும் புறம்பே நிக்கவேண்டியவர்களைப் புறம்பிலும் வைத்து ஆதரித்தல் வேண்டும்.

பூமியை விருத்தி செய்யுங் காலங்கள் அறிந்து பூமிகளின் விருத்தியும், தானிய விருத்திகளின் காலமறிந்து தானியவிருத்திகளும், கனிவிருத்திகளின் காலமறிந்து கனிகளை விருத்திசெய்தலும், நெய்விருத்தி காலமறிந்து நெய்களை விருத்திசெய்தலும் பசுவிருத்தி காலமறிந்து பசுக்களை விருத்திசெய்தலும், லோகங்களை எடுக்குங் காலங்கள் அறிந்து லோகங்கள் எடுக்கவும், நவரத்தினங்கள் எடுக்கும் காலங்கள் அறிந்து இரத்தினங்கள் எடுக்கவும் அதனதன் விருத்தியை நாடி கைத்தொழில் நடத்தவேண்டிய காலங்கள் அறிந்து கைத்தொழில் நடத்துங் கலை நூல்களைக் கற்று அரசனுக்கு அறிவித்து இடைவிடாது குடிகளுக்கு விளக்கிவைத்தல் வேண்டும்.

குடிகளுக்கும் படைகளுக்கும் அரசனுக்கும் நேரிட்டுள்ள குறைகள் தங்களுக்கு விளங்காதிருந்தும் அரசனிடத்தில் தனக்கு விளங்குவதுபோல் வீண்வார்த்தை விளம்பாது தன்னினும் நீதிநெறி மிகுத்த மேலோரை அடுத்து அதன் மூலங்களை அறிந்து அரசனுக்கோதி உள்ளக் குறைகளைத் தீர்த்து ஒத்து வாழும்படிச் செய்யவேண்டும். குடிகளால் ஒருவருக்கொருவர் நேரிட்டுள்ள மனத்தாங்கல்களைத் தேறவிசாரித்து அரசனுக்கு விளக்கி தண்டித்தல் வேண்டும்.

அரசனுக்குள்ள அறத்தின் விஷயத்திலும் நீதியின் விஷயத்திலும், நெறியின் விஷயத்திலும் கண்ணோக்கம் வைத்துக் குறைவற நடத்தி வருதலிலும் தங்களிடத்துள்ள நீதிநெறி தருமத்திலும் நிலைபிறழாது நின்று அமைச்சல் அடைதல் வேண்டும். தாங்கள் கற்றுள்ள கலை நூற்களால் நுண்ணிய கருமமாயினும் எண்ணிச் செய்யத்தக்க உபாயங்களைத் தாங்கள் அறிவதுமன்றி அரசனுக்கும் அறிவித்து குடிகளுக்கும் போதித்துவரல் வேண்டும்.

உலகத்தோர் ஆனந்திக்கத்தக்கச் செயல்களையும் உலகத்தோர் பின்பற்றத்தக்கச் செயல்களையும் உலகத்தோர் சங்கம் அடையத்தக்கச் செயல்களையும் ஆராய்ந்து கடந்தகாலங் கடத்தி நிகழ்காலம் வருங்காலப்பலன்களை எண்ணிச் செய்தல் வேண்டும்.

அரசனுடைய தருமத்தையும் நீதிநெறிகளையுங் குறைக்கத்தக்க ஒரு மந்திரி அரசனின் பக்கத்திலிருப்பானாயின் நூறுகோடி வேற்றரசர்களை எதிரிகளாக்கிக்கொள்ள நேரிடும் ஆதலின் அரசன் தன் அறநெறி நீதிகளை விருத்தி செய்யத்தக்க அமைச்சர் அருகில் இருத்தல் வேண்டும்.

தன்மமில்லாக் கையும் நீதியற்ற வாக்கும் நெறியற்ற வாழ்க்கையும் வாய்த்த ஓரமைச்சன் அரசன் அருகில் இருப்பதைப் பார்க்கினும் அத்தேசத்தில் அவனையொற்றக் குடியானவன் ஒருவனில்லாமல் இருப்பது நன்று.

தொண்ணூற்றொன்பது நீதிநெறி வாய்த்த அமைச்சருடன் ஒரு நீதி நெறி கேடன் தன்னை நீதிநெறியுள்ளவன்போல் நடித்து சேர்வானாயின் அவர்களையுங் கெடுத்து அரசனையும் பாழாக்கி குடிகளையுங் கெடுத்து விடுவான்.

ஆதலின் அரசர்களின் அருகில் வாசஞ்செய்யும் அமைச்சர்கள் மட்டிலும் கலை நூற்கற்ற விவேகிகளாயிருப்பினும் அவர்கள் வம்மிஸவரிசை யோ