பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/612

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

564 / அயோத்திதாசர் சிந்தனைகள்

திருமாலென்றும், புத்தபிரானையே கொண்டாடி வந்ததுமன்றி சுவாமி சாமியென்றும் அவரையே சிந்தித்து வந்தார்கள்.

சீவகசிந்தாமணி

பான்மிடை யமிர்தம்போன்று / பருகலாம் பயத்தலாகி
வானிடை முழக்கிற் கூறி / வாலற வமுதமூட்டித்
தேனுடை மலர்கள் சிந்தித் / திசைதொழச் சென்றபின்னாட்
டானுடை யுகலங்கொள்ளர் / சாமி நாட் சார்ந்ததன்றே.

கமல சூத்திரத்தில் சகஸ்திரநாம பகவனென்றும், மணிமேகலையில் ஆயிரநாமத்தாழியன் திருவடி, என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட நாமங்கள் அளித்து ஆனந்தங்கொண்டாடியக் காரணங்கள் யாதென்பீரேல்:-

பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான்கு துன்பங்களையும் தன்னிற்றானே ஓதாமல் உணர்ந்து மறுபிறவிக்கு ஆளாகாமலும், பிணியினும் உபத்திரவந் தோன்றாமலும், மூப்பென்னும் தளர்ச்சியும், நரை திறையும் தோன்றாமலும், மரணத்தில் உண்டாகும் பஞ்ச அவஸ்தைகட்கு உட்படாமலும், தனது அதி தீவரபக்குவத்தால் காமனையும் காலனையும் செயித்து நிருவாணத்தைத் தானடைந்ததுமன்றி ஏனைய மக்களையும் ஈடேற்றுவான் வேண்டி உலகெங்கும் கற்றி சத்தியதன்மத்தை ஊட்டித் தன்னைப்போல் மற்ற மக்களும் காமனையும் காலனையும் வென்று நிருவாணம் அடையும்படிச் செய்தபடியால் அப்பேரின்பத்தை அநுபவித்தவர்களும், நித்தியானந்தத்தைக் கொண்டவர்களும், சித்தின் நிலையைக் கண்டவர்களும், தங்களுக்குள் எழும் ஆனந்தக் கிளர்ச்சியால் ஜெகத்குருவை அனந்தானந்தப் பெயர்களால் அழைக்கலானார்கள்.

மணிமேகலை

பிறப்பே பிணியை மூப்பே சாவென / மொழிந்திடு துன்பமெனவிலை.
மாரனைவெல்லும் வீரனின்னடி. / காமற்கடந்த யேமமாயோர்.

சூளாமணி

காமனைக்கடிந்தனை காலனைக் காய்ந்தனை / தேமலர் மாரியை திருமறு மார்பனை தேமலர் மாரியை திருமறு மார்பனை / மாமலர் வண்ணநின் மலரடி வணங்கினம்.

சீவகசிந்தாமணி

சுறவுக்கொடிக்கடவுளொடு காலற்றொலைத்தோயெம்
பிறவியறுகென்று பிறசிந்தையிராகி
நறவுமலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலமெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூமமொடு தொழுதார்.

புத்தபிரான் காமனையும் காலனையும் செயித்து நிருவாணமடைந் ததுமன்றி மற்றவர்களது மரணதுக்கத்தையும் செயிக்கும் தன்மத்தை ஊட்டியிருக்கின்றார்.

மணிமேகலை

சாதுயர்நீக்கிய தலைவன் றவமுனி / சங்க தருமன் றாமெனக் கருளிய

சீவகசிந்தாமணி

கோதையுங் குழலும் பொங்கக் / குவிமுலைக் குழாங்கன்மாலைப்
போதுகப் பொருது நாணும் / பொருகடன் முந்து மூழ்க
காதலுங் களிப்பு மிக்குங் / கங்குலும் பகலும் விள்ளார்
சாதலும் பிறப்பு மில்லாத் / தண்மெய்பெற்றவர்களொத்தார்.

யமகாதகன் என்றும், இயமனை வென்றோன் என்றும், மரணத்தை ஜெயித்தோன் என்றும் கொண்டாடப்பெற்ற புத்தபிரானையும் அவரோதியுள்ள முதநூலாகும் சத்தியதன்மத்தையும் உணர்ந்தவர்கள் எவரோ அவரே பிறவியை அறுத்து மரணத்தை ஜெயித்து நிருவாணமடைவார்கள் என்று மகாஞானிகளும், சித்தர்களும் வற்புறுத்திக் கூறியிருக்கின்றார்கள்.

சித்தாந்தக்கொத்து

அருணெறியாற் பாரமிதை யாறைந்துமுடனக்கிப்
பொருள் முழுதும் போதிநிழ னன்குணர்ந்த முநிவரன்ற
னருள்மொழியா நல்வாய்மெய யறிந்தவரே பிறப்பறுப்பார்
மருணெறியாற் பிறநூலு மயக்கறுக்குமாறுளதோ.