உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/615

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /567


சுருதியென்றும், வரையாக் கேள்வியென்றும், மூவரும் மொழியென்றும், ஆதிவேதமென்றும், ஆதிமறையென்றும், மூன்று வேதவாக்கியங்கள் என்றும் வழங்கிவந்த முக்கட்டளையாகும் திரிபீடங்களேயாம். அதாவது,

சப்பபாபஸ்ஸ அசுரணம் / குஸலஸ உபசம்பதா.

சஸித்தசரி யோதபனங் /ஏதங்புத்தானுசாஸனம்.

பாபஞ்செய்யாதிருங்கள், நன்மெய்க்கடைபிடியுங்கள், உங்கள் இதயத்தை சுத்தி செய்யுங்கள் என்னும் மூன்று பேதவாக்கியங்களாகும் கட்டளைகளே மோசேயின் நித்தியசீவனுக்கு வழியாயிருந்தது. அவரோ அவ்வார்த்தையை சிரமேற்கொண்டு நீதியின் பாதையில் நடந்து நீதியின் ஒழுக்கத்தினின்று நீதியின் நீரை அருந்தி நித்திய சீவனைப்பெற்றார்.

ஆதியில் இவ்வருமொழியாம் வார்த்தையான வரிவடிவிலில்லாமல் ஒலிவடிவ மாத்திரமாய் இருந்தது கொண்டு யோவான் என்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் ஆதியில் வார்த்தையிருந்தது, அவ்வார்த்தை தேவனிடத்திருந்தது. அவ்வார்த்தையே தேவனென்று ஆதிதேவனின் நன்மெய் சொரூபத்தையும் விளக்கியிருக்கின்றார்.

மேசேயநுசரித்த வேதமொழிகளாகும் நீதி மொழிகளை அவர் வழிபட்டொழுகும் தாவீதரசனும் யாது கூறியுள்ளாரென்னில்:-

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து இரவும் பகலும் அவ்வேதத்திற் கியானியாயிருக்கப்பட்ட மனிதன் பாக்கியவான்.

அத்தகைய கியானமிகுத்த பாக்கியவானின் அடையாளம் யாதெனில் - நீர்வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு காலத்திற் கனியைத்தந்து இலையுதிராதிருக்கிற மரத்திற் கொப்பாவான். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.

அதற்குப்பகரமாய்க் கிறீஸ்துவும் தனது மலைப்பிரசங்கத்தில் நீதியின் பேரில் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்க்ள. அவர்கள் பரலோக ராட்சியத்தை சுதந்தரித்துக் கொள்ளுவார்கள் என்றும் கூறியுள்ளார்.

இதை அநுசரித்தே மார்க்கென்பவர் எழுதியுள்ள சுபவிசேஷத்தில் விசுவாசத்தினால் ஞானஸ்தானம் பெற்றவனின் அடையாளம் யாதெனில் பலபாஷைகளையும் பேசுவான், விஷத்திற்கு ஒப்பான அவுடதத்தைப் புசித்தாலும் சாகமாட்டான், பாம்புகளைக் கையிற் பிடித்துக் கொள்ளுவான், அவன் கை வியாதியஸ்தர்கள்பேரில் பட்டால் சொஸ்தமடையும் என்றும் பின்னும் பின்னும் தாவீதரசனின் நீதிவாக்கியங்களில் அவருடைய கட்டளையே விளக்கென்றும் அதன்மேறை நடத்தலேபிரகாசமென்றும், அதன்வழியே ஜீவ வழியென்றும் கூறி ஞானத்தைக் கண்டடைகின்றவனும், புத்தியை சம்பாதிக்கின்றவனும் பாக்கியவான். அவன் வலதுகையில் தீர்க்காயுளும், இடதுகையில் செல்வமும், கனமுமிருக்கிறதென்று கூறியுள்ளார்.

இத்தகைய நீதியின் பாதையிலும், ஞானத்தின் நோக்கத்திலும் மோசேயவர்கள் இரவும் பகலும் இடைவிடாது விழித்திருந்த கியானத்தால் மரணத்தை ஜெயித்து நித்தியசீவனை அடைந்து இருபிறப்புக்காளானதினால் தானடைந்த நித்தியபலனை மற்றவர்களும் அடைய வேண்டும் என்னும் கருணையால் பிண்டோற்பவத்தை எழுதி அதன்பின் நித்திய வழியை விளக்கும் மார்க்கத்தை ஆரம்பித்தார்.

அதாவது - புத்ததன்ம சாஸ்திரிகள் யாவரும் உலக உற்பவத்தையும், அதன் மடிவையும் ஆராயாமல் உடலையும், அதனுற்பவத்தையும் உண் மெய்யையும் ஆராய்பவர்களாதலின் ஆதியிற் பிண்டோற்பவ தத்துவத்தை விளக்குவதே அவர்கள் அனுபவமாயிருந்தது.

அவரருட் பெற்றருளிய மோசேயென்னும் மகாஞானியாரும் பிண்டோற் பவமாகும் கருப்பையின் விளக்கத்தையும், அதன் வளர்ச்சியையும், முடிவையும் வகுக்கலானார்.