சமூகம் /571
இடங்களுக்கு அனுப்பி சத்திய தன்மத்தைப் பரவச் செய்ததாய் அவரது சரித்திரத்தாலும் சிலாசாசனங்களாலும் அறியலாம்.
கிறிஸ்து பிறப்பதற்கு முன் இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த குருக்கள் சிரியாவிலும், பாலஸ்தானாவிலும் தன்மத்தைப் பிரசங்கித்து வந்ததாக அங்கு கிடைத்துள்ள சிலாசாசன ஆதரவால் பிரபஸர் மகாபிஸ் என்பவர் கூறியுள்ளவற்றை சரித்திரக்காரர் ஆர்.சி. டட் என்பவர் தனது சரித்திரத்தில் தெளிவாக வரைந்திருக்கின்றார்.
அசோக சக்கிரவர்த்தி அநுப்பிய பெளத்தகுருக்கள் தீபேத், காஷ்மீர், ஆப்கானிஸ்தான், பர்ம்மா, கிரீக் தேசங்களுக்குச் சென்று தன்மத்தைப் பரவச் செய்துள்ள சிலாசாசன ஆதாரங்களைக் கொண்டு அதார் சந்தர் முகர்ஜி எம்.ஏ.பி.எல். அவர்களுந் தனது சரித்திரத்தில் விளக்கியிருக்கின்றார்.
சிலர் கிறிஸ்துவுக்கு இரண்டாயிரம் வருஷங்களுக்கு முன்பு மோசே இருந்ததாக அவர் சரித்திரத்தால் விளங்குகிறபடியால் பௌத்த தன்மத்தை அவர் எவ்வகையால் அநுசரித்திருக்கக் கூடும் என வினவுவாறும் உண்டு.
மோசேயவர்கள் எழுதிய தன்மங்கள் முதல் வெளிபடுத்திய சுபவிசேஷம் வரையிலும் சிலதை தள்ளுபடி யாகமங்களென்று பார்த்து இவர்களே நீக்கிவிட்டதுபோக மற்றவைகள் யாவையும் ஒன்றுதிரட்டி பிபலிக்கல் என்று அப்புத்தகத்திற்குப் பெயர் கொடுத்த காலம் கிறீஸ்த்து பிறந்த நூற்றியைன்பது வருஷங்களுக்கு பின்பேயாகும்.
மோசே முதல் வெளிபடுத்திய சுவிசேஷ வரையில் ஒன்றுதிரட்டி புத்தகரூபமான காலம் கிறீஸ்துவுக்குப் பிற்பட்டகாலமாதலின் கிறிஸ்துவுக்கு இரண்டாயிர வருஷத்திற்கு முற்பட்டது மோசேயின் காலமென்று கூறுதற்கு தக்க சிலாசாசன ஆதரவுகளேனும், செப்பேடுகளின் ஆதரவுகளேனும், கணித ஆதாரங்களே கிடையாது.
மோசேயவர்களின் சீவியக்கணக்கு சரிவர இருக்குமாயின் கிறிஸ்த்துவின் கணக்கு மாறுபட்டிருக்காது.
அஃதெவ்வகையதென்னில் தற்காலம் அனுசரித்துவரும் இங்கிலீஷ் கணக்கின்படி கிறீஸ்த்துப் பிறந்து இன்று புதன் வரையில் ஆயிரத்தித் தொளாயிரத்தி ஏழுவருடம் பதினோரு மாதம் இருபத்தி மூன்று நாளென்று கூறுவார்கள். அதாவது 1907 வருஷம் 11 மாசம் 23 நாள். இக்கணிதம் ஜனவரி மாத முதல் நாளை ஆரம்பமாகக் கொண்ட கணிதமாகும். ஆனால் கிறீஸ்துவோ டிசம்பர் மாதம் இருபத்தியைந்தாம் தேதியில் பிறந்திருக்கின்றார். அக்காலவரை கணிக்குங் கால் வருஷங்களும் மாறுபட்டுவிடுமென்பது திண்ணம்.
இக்கணிதமானது மோசேயின் பிறந்த நாளை தழுவாமலும் கிறிஸ்த்துவின் பிறந்தநாளை தழுவாமலும் பொதுவில் அனுசரித்து வருகின்றபடியால் வருஷங்களை வகுத்துவருங் கணிதங்களே புத்ததன்ம கணிதங்கள் எனப்படும்.
எவ்வகையதென்னில்,ஞாயிறென்னும் சூரியனை முதனாளாகவும், சந்திரனை இரண்டாம் நாளாகவும், செவ்வாய் என்னும் பூமியை மூன்றாம் நாளாகவும், புதனென்னும் நீரை நான்காம் நாளாகவும், வியாழமென்னுங் காற்றை ஐந்தாம் நாளாகவும், வெள்ளியென்னும் ஆகாயத்தை ஆறாம் நாளாகவும், சனியென்னும் இரவை ஏழாம் நாளாகவும் வகுத்துள்ளவர்கள் சாக்கையர்கள் என்னும் பௌத்தர்களேயாவர்.
இத்தகைய வாரகணிதங்கொண்டேசகலதேச சாஸ்திரிகளும் வருடங்களைப் பெருக்கி வருவது பிரத்தியட்ச அனுபவமாகும்.
- 2:28; டிசம்பர் 23, 1908 -
மோசே யென்னும் மகாஞானியாரின் இடபேத விவரம்
மோசே அவர்களை நாம் எகிபத்தியனென்ற போதிலும், தீபேத்தி யனென்றபோதிலும் அவர் ஆசியாகண்ட வாசியேயாவர்.
உலகொளியாய் விளங்கும் புத்தபிரானை அவர் ஜெனனித்த காண்டக் குறிப்பால் (லயிட் ஆப் ஆஷியா) ஆசியா கண்டத்து ஒளியென்றே அருகனைக் கூறி ஆர்னால்ட் ஒயிட்டென்றும் ஆங்கில வித்துவான் எழுதியிருக்கின்றார்.