பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/621

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம்/573

வேசிகாந்தம், கள்ளவுள்ளம் உள்ளோருக்கும் போதிக்காமல் பண்படுத்தியுள்ள சுத்தபூமியென்னும் சீலமிகுத்தவர்களுக்கே போதித்து சீர்பெறச் செய்யவேண்டும் என்று கிறீஸ்துவும் போதித்திருக்கின்றார். ஆதலின் விசாரிணைப் புருஷர்கள் ஒவ்வொருவரும் வஞ்சநெஞ்சம் உள்ளோர் வார்த்தைகளையும் பொறாமெய் உள்ளோர் போதங்களிலும் செவிகொடாது,

சத்தியதன்ம போதங்களாகும் மோசே, தாவீது, கிறீஸ்து முதலிய மேதாவிகளின் வாக்கியங்களை சிரமேற்கொண்டு சன்மார்க்கத்தில் நடந்து சுகம் பெறவேண்டியதே கிறீஸ்துவை பின்பற்றியவர்களின் ஒழுக்கமாகும்.

- 2:29; டிசம்பர் 30, 1908 -

மோசே என்னும் மகாஞானியார் தெளிந்த தேசஞான விவரம்

நாம் ஒவ்வொருவரும் சீருஞ் சிறப்பும் பெற்று மேனோக்க வேண்டிய சரித்திரங்களை ஆராய்ச்சி செய்யவேண்டுமேயன்றி கற்பனா கதைகளை மெய்யென்று நம்பிக் காலம் போக்குவோமாயின் தினேதினே துக்கத்திலாழ்ந்து முற்றுஞ் சீர்கெட்டுப்போவோம்.

ஆதலின் நமதன்பர்கள் சரித்திர ஆராய்ச்சியினின்று சகலவற்றையும் உசாவ வேண்டுகிறேன்.

அதாவது எங்கும் கீர்த்திபெற்ற ஆங்கில வித்துவான் கோல்புரூக் என்பவர் தான் எழுதியுள்ள சரித்திரத்தில் அடியில் குறித்துள்ளவாறு வரைந்திருக்கின்றார்.

“தற்காலத்துப் புலமையைக் கொண்டு புராதன இந்தியாவைப்பற்றி ஆராயுங்கால் மிகப் பழமைதங்கிய அத்தேசத்தின் நாகரீகம் இணையற்ற லட்சணம் உடையதென்ற பெரும் விஷயம் தெளிவாய் ஏற்படுகின்றது. இந்தியர்களிடத்திலிருந்து கிரேக்கர்கள் எவ்வளவோ விஷயங்களைக் கிரகித்ததுமாத்திரமன்றி அவர்களுடைய மதங்கூடச் சரித்திரகாலத்துக்கு முன்பு முதற்றொட்டுவரும் தேசத்தாராகிய இந்தியர்களின் மதத்தையே முக்கியாம்சங்களில் ஆதாரமாகக் கொண்டதாயிருந்தது. இனி ரோமியர்கள் கிரேக்கர்களிடமிருந்து ஞானோதயம் பெற்று அதன்மூலமாய் ரோமநகரம் உலகத்துக்கெல்லாம் ஒப்பற்ற தனிநாயகமாய் விளங்கி அரசு செலுத்தி வந்ததென்பதும் அந்நகரத்தின் ஆதிபத்தியத்திற்குட்பட்ட தேசத்தாரனைவரும் ஆதியில் இந்தியாவிலிருந்து பரவிய தத்துவஞானப்பிரகாசத்தையும், சமயநெறிகளையும் அந்த ரோமநகரத்தின் வாயிலாகப் பெற்றார்கள் என்பதும் உலகப் பிரசித்தம்.”

கனங் கோல்புரூக்கவர்கள் கூறியுள்ளவற்றிற்கு சார்பாய் மைசூர் அரண்மனை டாக்ட்டர் ஜெகநாத நாயுடு அவர்கள் தானியற்றியுள்ள பைஷஜ கல்ப்பமென்னும் ஆயுருசாஸ்திரத்தில் அடியிற்குறித்தவாறு வரைந்திருக்கின்றார்.

“நாம் வாசஞ்செய்கிற இந்த பரதகண்டமாகிய இந்தியாவில் பூர்வத்தில் ஆயுர்வேதம் பிரபலப்பட்டிருந்தது. அப்போது அநேக சிறந்த வைத்தியர்களும் சீவித்திருந்தனர். இந்தத் திவ்விய வைத்தியவித்தையை அக்காலத்தில் அராபியர், யுதேயர், எகிபத்து தேசத்தார், ஜினோவா, வெனிஸ், கிரேக்கர் முதலானவர்கள் கற்றுத் தெளிந்ததாக சரித்திரக்காரர்கள் செப்பினதன்றியில் சாலோமோன் அரசன் முதலானவர்களும் கற்றுச் சென்றதாக ஓர் அமேரிக்கன் சாஸ்திரிவரைந்துள்ளாரென்று குறித்திருக்கின்றார்.”

இவைகள் யாவும் சரித்திர ஆராய்ச்சிகளின் தெளிவுகளேயாகும்.

இந்திரரென்னும் புத்தபிரான் பரத்துவாசரென்னும் ஓர் பிணியாளனுக்கு ஆயுருவேதமென்னும் தேக குணாகுணங்களையும், உபரச குணாகுணங்களையும், மூலிகை குணாகுணங்களையும், வியாதியின் குணாகுணங்களையும் கற்பித்து சிகிட்சாநிலையில் விருத்தி செய்தவற்றுள் ஈரத்தில் இஞ்சியென்றும், காய்ந்தபோது சுக்கென்றும் வழங்கும் ஓர் மூலிகையை உபயோகப்படுத்துப்வற்றுள் இந்துக்களால் சுக்கை கஷாயரூபமாகவும், சூர்ண ரூபமாகவும், வடக்ரூபமாகவும், தைலரூபமாகவும் உபயோகித்து வருகின்றார்கள். ஆங்கிலேயர்கள் சுக்கை திராவகரூபமாக உபயோகித்து வருகின்றார்கள். யூனானிசாஸ்திரிகள் சுக்கை முரப்பா ரூபமாக உபயோகித்துவருகின்றார்கள்.