பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசியல் / 15

யானையானது வேல் போன்ற கொம்பினை உடைத்தாய் மிக்க வலிமெய்ப் பெற்றிருக்கினும் புழுதியுற்ற சேற்றிற் புதைந்துவிடுமாயின் ஓர் சிறிய நரியை ஜெயிப்பது கஷ்டமாகும். அதுபோல் அரசனானவன் யுத்தத்திற்குச் செல்லுமுன் தனதமைச்சர்கள் வேற்றரச நாட்டின் இடபேதங்களை முன்பறிந்து காலாட்படைகட்கு அறிவித்தல் வேண்டும். இடபேதமறியா படைகள் சுத்தவீர மறவர்நிலை பெற்றிருப்பினும் இடத்தினிடுக்கத்தால் அழிந்துவிடுவர்.

அரணும் அகழியும் வாயலுமற்ற அரசனாயிருப்பினும் விசாலப் பண்ணை பூமியைப் பெற்று முயற்சியில் தளராக் குடிகளும் இடபேத ஆராய்ச்சி மிகுத்த அமைச்சனும் இருப்பானாயின் வேற்றரசனால் வெல்லுதற்கரிதாகும். இரக கஜ துரக பதாதிகள் மிகுத்த அரசன் தனது பொறாமெய்க்குத் தக்க அமைச்சர்கள் வார்த்தைகளை நம்பி சிறிய சேனையை உடைய வேற்றரசன் மீது படையெடுத்து செயித்தல் பழிக்கும் பாவத்திற்கும் ஏதுவாம். ஆதலின் வேற்றரசன் இடங் குடிபடை இவற்றை அமைச்சன் ஆராய்ந்து அரசனுக்கு ஓதி யுத்தஞ்செய்தல் அழகாம்.

அமைச்சன் ஆராய்ந்து செய்துவரும் கன்மங்களில் தனதிடத்தை வலிசெய்தலும், போரில் படை பயிற்றுதலுமாகியச் செயல் ஊக்கமிகுத் திருப்பானாயின் அரசன் கவலையற்றிருப்பான்.

நிலத்திலோடுந் தேர் கடலிலோடாது, கடலிலோடும் ஓடம் நிலத்தி லோடாது. ஆதலின் கடலினிட பேதங்களையும் நிலத்தினிட பேதங்களையும் அமைச்சன் ஆராய்ந்து அரசனுக்கறிவித்து யுத்தம் ஆரம்பித்தல் அழகாகும். முதலையானது ஆழமுள்ள நீரிலிருக்கும் வரையில் யானை சிம்ம முதலிய வலியசீவன்கள் யாவையும் ஜெயித்துவிடும். அதேமுதலை நீருள்ள இடத்தை விட்டு நிலத்தில் வந்துவிடுமாயின் அற்ப சீவன்களும் அம்முதலையை ஜெயித்துக்கொள்ளும்.

அதுபோல் அமைச்சனானவன் முக்கியமாக தனதிருப்பிடத்திலிருந்து செய்யும் யுத்தத்தையும் வேற்றரசனிடஞ் சென்று செய்யும் யுத்தத்தையும் நன்காராய்ந்து அரசனுக்கு ஓதி யுத்தமாரம்பித்தல் அழகாம்.

இவ்வகை இடங்களில் ஆராய்ச்சியில் மிகுந்த அமைச்சன் செயல்களால் எதிரி அரசர்களின் எண்ணம் பாழாகும் என்பதாம். இடங்கள் அறிந்து யுத்தஞ்செய்தல் தன்படைகளைக்கார்த்து எதிரியை செயிப்பதுடன் தானுமோர் துன்பமின்றி வருவான். தன் அரண் அகழியென்னும் இடத்தினது வலியால் அரசன் ஆறுதலுற்றிருப்பான்.

கொக்குகளானது தங்களுக்கு வேண்டும் இறையை நோக்கி வாய்திரவாமலுங் கண்மூடாமலும் பார்த்திருந்து இறையைக் கண்டவுடன் கவ்விக் கொள்ளுவதுபோல் அரசனும் தனது காலபலங் கூடுவரையில் கார்த்திருந்து வேற்றரசன்மேற் பாய்ந்து ஜெயமடைவான். அரசனானவன் தனது யுத்த ஆரம்பத்தை பனிகால மழைகாலங்களை ஆராய்ந்து தன் படை பலங்களை ஆராய்ந்து தன் காலப்போக்குகளை ஆராய்ந்து செய்வானாயின் ஜெயக்கொடி நாட்டுவான். எதிரியரசனை ஜெயிக்கவேண்டிய காலம் எதுவென்று அறிந்துகொள்ளும் வரையில் தான் ஒடுங்கினவனைப்போல் தலைகவிழ்ந்து தனக்கு உறுதியுண்டாகுங் காலம்வரில் எதிரியின் செறுக்கை அடக்கிவிடுவான்.

விவேகமுள்ள அமைச்சர்களால் தெளிவுற்றிருக்கும் அரசன் விவேகமற்ற வேற்றரசன் முறிந்து போர்புரிய ஆரம்பிப்பானாயின் அவனுக்குண்டாய கோபத்தின் காரணத்தையும் படையின் குறைவையுங் கண்டு இதக்கமுற்று விவேகம் ஊட்டி அவனது கோபத்தை ஆற்றி ஆதரிப்பான்,

ஆட்டுக்கடாவானது தனது எதிரிக்கடாவின் பேரிற்பாய்ந்து மோதுதற்கு பின் சென்று மோதுவது வழக்கம். அதுபோல் அமைச்சர்கள் அதியூகத்தில் தெளிந்த அரசன் தனது படை எழுச்சிக்குத் தக்ககாலம் வரும் வரையில் எதிரி அரசர்க்கு பின்னிடைந்தவன் போல் ஒதுங்கி காலம் வந்தவுடன் பாய்ந்து ஜெயக் கொடி நாட்டுவான்.