பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 / அயோத்திதாசர் சிந்தனைகள்


உலகமுழுவதும் ஆளவேண்டும் என்னும் எண்ணமுடையவன் அதற்குத் தக்கக் காலங்கள் அறிந்து செய்வானாயின் அவன் எண்ணம் முடியும். அதாவது தான் கண்டுபிடித்துள்ள ஆயுதபலமுங் காலபலமும் சரிவர நிற்குமாயின் அபஜெயம் அடையானென்பது கருத்து.

அரசனானவன் பயிறு விருத்திகாலத்தையும் படைபயிற்று காலத்தையும் படைஎழிற்சிகாலத்தையும் சீர்தூக்கிப்பார்த்து செய்துவருவானாயின், அவனது செல்வத்தை வேற்றரசன் கொள்ளானென்பதாம். காக்கையானது ஆந்தையைப் பகல்காலத்தில் வெல்லும். ஆந்தையோ காக்கையை இராக்காலத்தில் வெல்லும். அதுபோல் அரசன் தன் காலத்தையும் காலதேசத்தையும் நன்காராய்ந்து யுத்தஞ்செய்யல் வேண்டுமென்பதாம்.

- 1:39; மார்ச் 11, 1908 -

அரசனானவன் தனது யுத்த ஆரம்பத்திற்கேனும் குடிப்படை அமைத்தலுக்கேனும் தனதுயிர் நிலை காப்புக்கேனும் ஒவ்வொருவரைத் தெரிந்தெடுத்துக் காரியத் தலைவர்களாக்க வேண்டும்.

அரசரது தன்மகன்மங்களைக் குறைவற நடாத்துகின்றவனும், அரசனது பொருளை அபகரிக்காது பாதுகாக்கின்றவனும், அரசன் இன்பத்திற்கு இடையூறு செய்யாதவனும் அரசன் உயிருக்கு ஓர் தீங்கும் வராமல் காக்கின்றவனுமாகியவன் எவனோ அவனே நற்குடியிற் பிறந்தவன் எனப்படும்.

இத்தகைய குடிபிறப்பையும் அவனவன் குணாகுணச் செயலையுங் கண்டறியாது வாட்டசாட்டமுள்ள ரூபமுடையவனாகவும் கற்றவனாகவும் இருக்கின்றான் என்று எண்ணி அரண்மனை ஏவலில் வைப்பது அரயன் தீங்கடைவதற்கு ஆதாரம் எனப்படும்.

அதாவது பிச்சையேற்றே வளர்க்கும் குடும்பத்திற் பிறந்தப் பிள்ளையாயினும், அந்தரங்க விபச்சாரத்திற்கு விடுத்து அதினாற் சீவிக்கும் குடும்பத்திற் பிறந்தப் பிள்ளையாயினும், தனக்குந் தனது இஸ்திரீகளுக்கும் யாது மானக்கேடு வந்தாலும் அதை ஒருபொருட்டாகக் கருதாமல் செல்வப்பொருள் கிடைத்தால் போதும் என்று அலையும் குடும்பத்தில் பிறந்தப் பிள்ளையாயினும், ஒருவன் கல்விகற்று அரசனது ஆளுகை உத்தியோகத்தில் அமர்ந்து விடுவானாயின் தான் பிறந்த குடும்ப மிலேச்ச செய்கைகள் மாறாமல் பொருளாசை அதிகரிப்பால் அரண்மனையிலுள்ள நூறு குடிகளைக் கெடுத்து தான் தன்வந்தனாகத் தோன்றுவான்.

இவனது மிலேச்ச செய்கைகளை நாளுக்கு நாள் அறிந்துவந்த அரசன் இவனை நீக்கும்படி ஆரம்பிப்பானாயின் அவ்வரசனுக்கும் அரசாங்கத்திற்கும் தீங்கு விளைவிக்கத்தக்க தனது மிலேச்ச குணத்தைக் காட்டிவிடுவான்,

ஆதலின் அரசனது அரணும், அகழியும், ஆயுதங்களும், செல்வமும் குறைந்திருந்தபோதிலும் தன்னைச் சூழ்ந்துள்ள அமைச்சக் குடிபடைகள் நீதியையும் நெறியையும் வாய்மெயையும் நிறைந்துள்ள குடும்பங்களிற் பிறந்தவர்களாயிருப்பின் அவர்கள் நீதிநெறிக்காப்பே அரசாங்கத்தை சிறப்பிக்கச்செய்யும்.

அங்ஙனமின்றிப் பித்தளையைத்தீட்டிப் பிரகாசிக்கக் காட்டியபோதிலும் அதைப் பொன்னென்று நம்பாமல் உரைக்கல்லும் ஆணியுங்கொண்டு சோதிப்பதுபோல் அரச அங்கத்திற் சேர்ப்பவர்களின் உருவங்களைநோக்கி சேர்க்காமல் அவரவர்கள் குடும்ப குணாகுணச் செயல்கள் அறிந்து சேர்த்தல் வேண்டும்.

ஏனெனில் பொருளைச் சேகரிக்கும் பெரும் அவாக்கொண்டவனை அரசவங்கத்தில் ஒருவனாகச் சேர்த்துக்கொள்ளுவதால் அரசவங்கச்செயல்களில் அதியூக்கமற்று பொருள் சேர்க்கும் ஊக்கத்தால் அரசனையும் மற்ற அங்கத்தோர்களையும் விரோதிக்கச்செய்து அரசனுக்குத் தன்னை அதியுத்தமனைப்போற் காட்டி, அபிநயிப்பான்.

இத்தகைய நடிப்பைக் காணும் அரசன் இவனைப் பொய்யனாகக் கொள்ளாது மெய்யனாகக் கொள்ளுவானாயின் உள்ள அங்கத்தவர் யாவரையும் ஒட்டிவிட்டு தங்கள் சுற்றத்தோரைச் சேர்க்கும் சுயநோக்கத்தில் இருப்பான்.