உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/644

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

596/அயோத்திதாசர் சிந்தனைகள்


ஒருவன் என் தேவனுக்கு ஐன்னூறு தலைகளுண்டு, ஆயிரங் கைகளுண்டு, அதைத் தொழுது வேண சிலவுபுரிவீர்களாயின் தனவிருத்தி, தானியவிருத்தி அடைவீர்களென்று கூறுவானாயின், தேவனென்னும் பொருளென்னை அது எவ்வகையாயிருக்கும் ஐன்னூறுதலை, ஆயிரங்கையுள்ள தேவன் தானே பாடுபட்டுத் தின்னாமல் நம்மிடம் ஆட்டுக்கிடாய், அவலுகடலை, வாழைப்பழம் தட்சணைக் கேழ்ப்பானேன். அத்தகைய தேவதையை சிறப்பித்தும் அவற்றைத் தொழுவதால் சுகமடைவீர்களென்று கூறுகிறவர்கள் எவ்வளவு தனசம்பத்து, தானியசம்பத்து பெற்றிருக்கின்றார்கள்.

அச்சம்பத்துக்கள் யாவும் நம்மால் கொடுக்கப்பெற்றதா, ஆயிரங்கை தேவனால் கொடுக்கப்பட்டதாவென்று ஆராய்ச்சி செய்யாது ஐந்து ரூபாய் செலவு செய்து ஆயிரங்கை தேவனைத் தொழல்வேண்டும், பத்துரூபா செலவு செய்து தொழல் வேண்டுமென்று சொல்லுவோர் வாக்கைப் பின்பற்றித் திரிவதே சுவாபமாகும்.

மற்றொருவன் எங்களுடைய மோட்சம் ஒன்றுண்டு அதில் எங்கள் தேவன் உட்கார்ந்திருப்பார் நீயும் அவரை எதிரில் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கலாம் அந்த மோட்ச சுகம் வேண்டுமானால் நாங்கள் என்ன செலவு சொல்லுகின்றோமோ அவற்றிற்குத் தடைசெய்யாது உங்கள் மரணபரியந்தம் செலுத்திக்கொண்டே வரவேண்டியது. அவ்வகை செலுத்திக் கொண்டும் நான் சொல்லுகிறவர்களைத் தொழுதுக்கொண்டும் வருவீர்களாயின் முன்பு சொல்லியுள்ள மோட்சத்திற் சேருவீர்கள் என்று சொல்லுவானாயின், மோட்சமென்னுங் கட்டிடம் எங்குளது அது எக்காலத்து யாவரால் கட்டப்பட்டது, செங்கல் கட்டிடமா, கருங்கல் கட்டிடமா, அங்கு உட்கார்ந்திருக்குந் தேவன் மாமிஷ ரூபியா, மர ரூபியா, அங்கு போய் அவரை எதிரில் பார்த்துக் கொண்டிருப்பதினால் யாது சுகம்.

இறந்தபின் மண்ணில் புதைந்த போது பார்க்குங் கண்கள் அழிந்து போகின்றது, பேசும் காது மழிந்துபோகின்றது, சுகிக்குந் தேகமு மழிந்து போகின்றது. ஆன்மா என்பது ஒன்று போய் சுகிப்பதென்னில் கண்ணில்லாது ஆன்மங் காணுமா, காதில்லா தான்மங் கேட்குமா, நாவில்லா வான்மா உட்காருமா, சுகிக்குமா வென்றாராயாது காணாத மோட்சக்கவலையும், பாராத மோட்ச பாக்கியமும் பெற்றதைப் போலெண்ணி சொல்லுகிறவன் வாக்கை மெய்யென்று நம்பி கஷ்டப்பட்ட சொத்தை அவனுக்களித்து வருதே செய்கையாகும்.

இவ்வகையாய் நூறு பெயர் வார்த்தைகளை யாதாமோர் விசாரிணையுமின்றி பத்தாயிரம் பெயர் நம்பி நடக்குந் தேசத்தில் சகலகுடிகளுங் சுகம் பெறவேண்டிய சட்டதிட்டங்களையும், ஒழுக்கங்களையும் இராஜாங்கத் தோர் அருள் செய்வார்களாயின் நூறுபெயர்களால் தேவ கதைகளையும், மோட்ச கதைகளையுங் கேட்டு நடந்து வந்தவர்கள் இராஜாங்கத்தோர் நீதி நெறிகளை உணர்வார்களா ஒருக்காலும் உணரமாட்டார்கள்.

காரணம், அந்தரத்திற் தோன்றியவர் வாக்கை அற்புதவாக்காக ஏற்று நடப்பவர்களாதலின், அரசநீதி அவர்கள் ஆயுளளவும் விளங்காது என்பதேயாம்.

- 3:15; செப்டம்பர் 29, 1909 -


17. புரபசர் ஆன்கினும் சாதியும்

பிரபசர் இ.எச். ஆன்கின் என்பவர் இந்தியர் ஏற்படுத்தியிருக்கும் சாதி வித்தியாசப் பிரிவினையானது மிக்க மேலானதென்றும் அதினால் அனந்த சுகாதாரங்கள் உண்டென்றுங் கூறியுள்ளதாய் சென்னை இஸ்டாண்டார்ட் பத்திராதிபர் வெளியிட்டிருக்கின்றார்.

அங்ஙனம் பிரபசர் கூறியுள்ளது யாது சுகாதாரமென்று விளங்கவில்லை, இத்தேசமெங்கும் பௌத்ததன்மம் பரவியிருந்தகாலத்தில் சாதிபேதமென்னும் வஞ்சகச்செயலின்றி வேறுவகை சுகாதாரங்களை விளக்கியுள்ளார்கள்.