பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/649

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 601

காரணமோவென்னில், ஆதியில் இத்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடிவந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறவரத்தை ஓதியது கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதநூலுக்கு “வரதன் பயந்த வற நூலென்றும்” அவரைக் கொண்டாடிய இத்தேசத்திற்கு வடபரதம் தென்பரதமென்றும் கொண்டாடி வந்தார்கள்.

இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் விசேஷமாகக் கொண்டாடாமல் இந்திரரென்னும் பெயரினாலேயே, விழாக்களையும், வியாரங்களையும், விசேஷமாகக் கொண்டாடி வந்தபடியால் இத்தேச மக்களை இந்தியர்களென்றும், இத்தேசத்தை இந்தியதேசமென்றும் வழங்கிவந்தார்கள். அதுகொண்டு வடயிந்தியமென்றும், தென்னிந்தியமென்றும் பிரபலப்பெயர் உண்டாயிற்று.

அருங்கலைச்செப்பு

இந்தியத்தை வென்றான் தொடர்பாட்டோ டாரம்ப / முந்தி துறந்தால் முநி.

மணிமேகலை

இந்திரரெனப்படு மிறைவ நம்மிறைவன் / றந்தநூற்பிடகம் மாத்திகாயமதென்.

சூளாமணி

மாற்றவர் மண்டில மதனுளூழியா / லேற்றிழி புடையன விரண்டுகண்டமாந்
தேற்றிய விரண்டினுந் தென்முகத்தது / பாற்றரும் புகழினாய் பரதகண்டமே.

வேறு

கந்துமு மணித்திரள் கடைந்த செம்பொனீன்சுவர்
சந்துபோழ்ந்தியற்றிய தகடுவேய்ந்து வெண்பொனால்
இந்திரன் றிருநக ருரிகெயோடு மிவ்வழி
வந்திருந்தவண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே.

இந்திரதேயத்தின் ஆதிபாஷையாகும் மகிடபாஷையென்னும் பாலியை வரிவடிவமின்றி ஒலிவடிவமாகவே பேசிவந்தார்கள். அக்கால் ஆதிபகவனாகும் புத்தபிரான் ஓதிவைத்த ஆதிவேதமொழி, ஆதிமறைமொழி என்னும் திரிபீட வாக்கியங்களாம் மூவரு மொழிகளை வரிவடிவின்றி ஒலிவடிவ சுருதியாக போதிக்கவும் அதனைக் கேட்போர் சிந்தித்துத் தெளிவடைவதுமாய் இருந்த படியால் சிலர் கேட்டும் அவரவர்கள் மனதிற் படியாமல் சுருதி மயக்கங்கண்ட மாதவன் சகடபாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிடபாஷையாம் தமிழையும் வரிவடிவாக இயற்றி ஜினனென்னும் தனது பெயர்பெற்ற மலையில் வரிவடிவால் திரிசீலம், பஞ்சசீலம், அஷ்டசீலம், தசசீலமென்னும் மெய்யறத்தை வரைந்து சகலமக்கள் மனதிலும் பதியச் செய்ததுமன்றி இன்னும் அவ்வரிவடிவ பாஷையை, தான் நிலைநாட்டிவரும் சங்கத்தோர் யாவருக்கும் கற்பித்து சத்தியதன்மமானது மேலுமேலும் பரவுவதற்காக ஜனகர், வாமதேவர், நந்தி, ரோமர், கபிலர், பாணினி இவர்களுக்கு சகடபாஷையையும், அகஸ்தியருக்கு திராவிடபாஷையையும் கற்பித்து ஜனகரை மகதநாட்டிற்கு வடபுரத்திலும், அகஸ்தியரை தென்புரத்திலும், திருமூலரை மேற்புரத்திலும், சட்டமுனிவரை கீழ்புரத்திலும் அநுப்பித் தானும் அந்தந்த இடங்களுக்குச் சென்று வரிவடிவமாம் பாஷையை ஊன்றச் செய்து மெய்யறமாம் புத்த தன்மத்தையும் பரவச்செய்தார்.

வீரசோழியப் பதிப்புரை - சிவஞானயோகியார்

இருமொழிக்குங் கன்ணுதலார் / முதற் குரவ ரியல் வாய்ப்ப
இருமொழியும் வழிபடுத்தார் / முனிவேந்த ரிசை பரப்பும்
இருமொழியு மான்கிறவரே / தழீஇனா ரென்றாலிங்
கிருமொழியும் நிகரென்னு / மிதற்கைய முளதேயோ.
திடமுடைய மும்மொழியார் / திரிபிடக நிறைவிற்காய் / வடமொழியை பாணினிக்கு
(...)

தொடர்புடையத் தென்மொழியை / யுலகமெலாந் தொழுதேத்த
குடமுநிக்கு வற்புருத்தார் / கொல்லாற்றுபாகர்.