பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

618/ அயோத்திதாசர் சிந்தனைகள்

மென்னும் சுயப்பிரயோசனத்தைக் கருதி சகலரையுங் கெடுக்க ஆரம்பித்துக் கொண்டார்கள்.

புத்தரது தன்மத்தின் சிறப்பையும், அவரது அளவுபடா ஞானத்தின் களிப்பையும் அநுபவத்திற் கண்டுணர்ந்த சமணமுநிவர்கள் ஞானத்தின் செயல்களுக்கும், வித்துவத்தின் செயலுக்கும், தொழில்களின் செயல்களுக்கும் தக்கவாறு வடமொழியிலும், தென்மொழியிலும் சிறந்த பெயர்களை அளித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், செயலுக்குத்தக்க மேதை மரியாதையுடன் உலகமக்கள் ஒழுகும் ஒழுக்கங்களை வகுத்து வைத்திருந்தார்கள்.

அத்தகைய சிறப்புப் பெயர்கள் தோன்றுதற்கு ஆதாரபூதமாக விளங்கியவர் புத்தபிரானேயாதலின் அவரது தன்மச்செயலுக்கும் குணத்திற்கும் அளித்துள்ள ஆயிர நாமங்களில் பிரம்மமென்னும் பெயரையும், பிதாமகன், பிதாவிதாதா என்னும் பெயரையும் நிலைபடக்கொண்டு மற்றும் பெயர்களையும் சிறப்பிக்கலானார்கள். சித்தார்த்தருக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்தக் காரணம் யாதெனில், அஃதோர் சாந்தத்தின் பூர்த்தியடைந்த பெயராகும். அதாவது, பூமியை ஒருவன் கொத்தி பலவகைத் துன்பப்படுத்தி பழுக அழுகக்கலக்கி பண்ணையாக்கினும் அப்பூமி நற்பலன் அளிக்குமேயன்றி தன்னை துன்பஞ்செய்தார்களே என்று துற்பலனளிக்காவாம். அதுபோல் ஒருமனிதனை மற்றொரு மனிதன் வைது துன்பப்படுத்தி பல வகையானக் கெடுதிகளைச் செய்யினும் அஃதொன்றையுங் கருதாது அவனுக்கு நற்பலனளித்து தன்னைத் துன்புறச் செய்தோனுக்கு மேலும் மேலும் இன்புறச் செய்து காக்குங் குணநிலைக்கு பிரம்மமென்னும் பெயரை அளித்துள்ளார்கள். அதையே, உண்மெயில் தண்மெநிலையுற்ற சுயஞ்சோதியென்றுங் கூறப்படும், மகடபாஷையில் பிம்பமென்றும், சகடபாஷையில் பிரம்மமென்றும் சுயஞ்சோதியென்றும் திராவிட பாஷையில் உள்ளொளியென்றும் சித்தார்த்தரது குணநிலையை சிறப்பித்திருந்தார்கள்.

பிதாமகன் பிதாவிதாதவென்னும் பெயரோவென்னில், சுத்தோதய சக்கிரவர்த்திக்கு மகனாகப் பிறந்து தனது தந்தைக்கே குருவாக விளங்கி ஞான உபதேசஞ் செய்துள்ளபடியால் பிதாவுக்கு மகனும் பிதாவுக்கு தாதாவுமென்று அழைத்துள்ளார்கள்.

பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா என்றும் உலக சீர்திருத்த ஆதிபகவனென்றும், ஆதி தேவனென்றும், ஆதி கடவுளென்றும், ஆதிமுநிவனென்றும், ஆதி பிரம்மமென்றும் அழைக்கப்பெற்ற புத்தபிரானை மற்றும் வீணை நான்முக விளிப்பாலும், நான்கு சிறந்த வாய்மெயாலும் நான்முக பிரமமென்றும் அழைத்துவந்தார்கள்.

உலகத்தின் ஆதி சீர்திருத்த உலகநாதனாக விளங்கி சருவ கலைகளுக்கும் நாயகனாகி என்றுமழியா பேரானந்த ஞானத்தை விளக்கி முத்திபேருக்கு முதல்வனான பிரமனின் நான்குவாய்மெ யுணர்ந்து தண்மெயடைந்து பிரம்ம மணமுண்டானபோது அவனது ஞானவல்லபத்தை சிறப்பிப்பதற்காய் புத்தபிரானாம் பிரம்மனின் முகத்திற் பிறந்தவனென சிறப்பித்துக்கூறி சங்கத்தோர்களுக்கு அதிபதிகளாக்கிவைத்தார்கள். பகவனது தன்மநெறிகடவாது சித்திபெற்றவர்களை பகவன் முகத்திற் பிறந்தவர்களென அவரது அளவுபடா சிறப்பைக்கொண்டே பிரம்மமணமடைந்தோரை சிறப்பித்து மகடபாஷையில் பிராமணரென்றும், திராவிட பாஷையில் அந்தணரென்றும், தென்புலத்தோரென்றும் சிறப்பித்துக் கொண்டாடிவந்தார்கள்.

ஞானிகளாம் பிராமணர்களின் சீர்திருத்தத்தால் உலகமக்கள் சுகம்பெற்று வாழ்ந்தபோதினும் மக்களது இடுக்கங்களைக் கார்த்து ரட்சிக்கும் நீதியும், வல்லமெயும் புஜபல பராக்கிரமமும் அமைந்த க்ஷாத்திரியவான் ஒருவன் இருக்கவேண்டியது அவசியமாதலின் அவனும் புத்தபிரானாம் பிரம்ம நீதிநெறி தவராது குடிகளை ஆண்டு ரட்சித்துவருவானாயின் பிரம்மனது ஷாத்திரிய மிகுத்த புஜத்திற் பிறந்தவனாகக் கொண்டாடும்படி சிறப்பித்து வந்தார்கள். அத்தகைய சிறப்புற்றோனை மகடபாஷையில் அரயனென்றும், சகடபாஷையில்