பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/674

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

626 / அயோத்திதாசர் சிந்தனைகள்

நந்தனென்னும் அரசனிடம் வந்து சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி ஆசிகூறினார்கள்.

அவர்கள் அம்மொழிகளைக் கேட்டவுடன் ஏதோ இவர்கள் விவேக மிகுத்தப் பெரியோர்களாயிருக்க வேண்டுமென்று எண்ணி திவ்யாசனமளித்து வேண உபசரிப்பு செய்துவருங்கால் சமண முநிவர்களும் உபாசகர்களுமறிந்து அரசனிடஞ் சென்று இராஜேந்திரா தற்காலந் தங்களிடம் வந்திருக்கும் பிராமண வேஷதாரிகளை யதார்த்த அறஹத்துக்களென்றாயினும் சமணமுநிவர்கள் என்றாயினும் தென்புலத்தாரென்றாயினும் கருதவேண்டாம். சில காலங்களுக்கு முன் இவர்கள் சிந்தூரல் நதிக்கரை ஓரமாக வந்துக் குடியேறி இத்தேசத்தோரிடம் யாசக சீவனஞ் செய்துக்கொண்டே இத்தேச சகடபாஷையாம் சமஸ்கிருதங் கற்றுக்கொண்டு பூர்வக் குடிகள், அந்தணர், தென்புலத்தார், சமணமுநிவரென்று வழங்கப்பெற்றப் பெரியோர்களைக் கண்டவுடன் பயபக்த்தியுடன் ஆசனமளித்து வேண உதவிபுரிந்துவருவதை யாசகஞ்செய்துக்கொண்டே நாளுக்குநாள் பார்த்துவந்தார்கள். சமணமுநிவர்களுடையவும், அந்தணர்களுடையவும் செயல்கள் யாதென்று அறியாதிருப்பினும் அவர்களைப்போல் வேஷமிட்டு தங்கள் சீவனத்திற்காய சுலோகங்களை ஏற்படுத்திக்கொண்டு பிள்ளை பெண்சாதிகளின் சுகத்தை அநுபவித்துக்கொண்டே தங்களை அந்தணர்களென்றும், தென்புலத்தோரென்றும் பொய்யைச்சொல்லிக் கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து தந்திரசீவனஞ் செய்து வருகின்றார்கள். தாங்களும் இவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீரென்று சொன்னவுடன் அரசன் திடுக்கிட்டு மிக்க ஆட்சரியமுடையவனாகி பெண் மாய்கையிற் சிக்காதிருந்தவனாதலின் அவர்களை ஓர் ஆச்சரிய உருவமாகக் கொள்ளாமல் அவர்களுடைய வரலாறுகளைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவனாகி புருசீகர்களின் அருகில் சென்று யதார்த்த அந்தணர்களைக் கண்டவுடன் கைகூப்பி சரணாகதி கேட்பதுபோல் வணங்கினான். அரசன் கைகூப்பி சரணாகதி கேட்பதின் ரகசியார்த்தமறியா வேஷப் பிராமணர்கள் தங்கள் கூட்டத்தோர்களுடன் எழுந்து ஒருகரந் தூக்கி ஆசீர்வதித்தார்கள்.

புலன் தென்பட்டோராகும் தென்புலத்தார்போல பெண்சாதிபிள்ளைகளுடன் யாவரும் ஒரு கரந்தூக்கியதைக் கண்ட அரசன் சற்று நிதானித்துத் தாங்கள் யார், யாதுகாரணமாக இவ்விடம் வந்தீர்களென்று வினவ, நாங்கள் பிராமணர்கள் தங்களுடையப் பெயருங் கீர்த்தியும் இத்தேசத்தில் என்றும் விளங்கும்படி செய்வித்தற்கு வந்தோமென்று கூறினார்கள். அவற்றைக் கேட்ட அரசன் அவர்களை நோக்கி வந்துள்ள நீங்களெல்லவரும் பிராமணர்களா அன்றேல் தனிமெயாக பல்லக்கில் உட்கார்ந்திருக்கின்றாரே அவர் மட்டிலும் பிராமணரா என்று வினவினான். அவற்றிற்கு மாறுத்திரமாகப் புருசீகர்கள் நாங்கள் எல்லவரும் பிராமணர்களேயென்று கூறினார்கள்.

நீங்கள் பெண்சாதி பிள்ளைகளுடன் சகல சுகபோகங்களையும் அநுபவித்துக்கொண்டு எல்லவரும் பிராமணர்களென்றால் உங்கள் வார்த்தைகளை எவ்வகையால் நம்புகிறது. இதனந்தரார்த்தங்களை ஏதேனும் சாஸ்திரங்கள் விளக்குகின்றதாவென்று கேட்க பூர்வத்தில் எங்களைப்பற்றி ஓர் பெரியவர் சில ரிஷிகளுக்கு மனுதன்மசாஸ்திரமென்னும் ஓர் இஸ்மிருதி சொல்லி வைத்திருக்கின்றார். அதில் உலக உற்பத்தியைப்பற்றி பிரமத்தினிடமிருந்து தங்கவடிவமான ஓர் முட்டை உதித்து இரண்டு பாகமாகி மேற்பிரிவு வானமாகவும், கீழ்ப்பிரிவு பூமியாகவும் தோன்றி அதை ஆளுதற்கு பிரம்மாவின் முகத்திலிருந்து பிராமணனும், புஜத்திலிருந்து க்ஷத்திரியனும், துடையிலிருந்து வைசியனும், பாதத்திலிருந்து சூத்திரனும் பிறந்தார்களென்று குறிப்பிட்டிருக்கின்றவைகளில் முகத்திற்பிறந்த பிராமணர்களாகிய நாங்களே சிறந்தவர்களென்று கூறியதை அரசன் கேட்டு, இதனந்தரார்த்தத்தைத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று மடாதிபர்களாம் சமணமுநிவர்களைத் தருவித்து புருசீகர்கள் சொல்லிவந்த சகல காரியங்களையுங் கூறி அவைகளின் அந்தரார்த்தத்தை