சமூகம் / 629
மண்ணைத் துளைத்துக் குடியிருந்துக்கொண்டு இவ்விடம் வந்து பிச்சையிரந் துண்ணுங்கால், தங்களை நீவிர் யாவரென்று கேட்போருக்கு அக்கரையோரத்தார், அக்கரையோரத்தார் என வழங்கிவந்த மொழியையே ஆதாரமாகக்கொண்டு இப்போது இவர்கள் இங்குவந்து வாசஞ்செய்யும் இடங்களுக்கு அக்கரையோரத்தாரென்னு மொழியை மாற்றிவிட்டு அக்கிர ஆரத்தார், அக்கிர ஆரத்தா ரென வழங்கி வருகின்றார்கள்.
இத்தியாதி மாறுபாடுகளில் இப்பறையர்களென்னும் பெயர் சத்துருக்களாகியத் தங்களால் கொடுத்ததல்ல. பூர்வத்திலிருந்தே வழங்கிவந்ததைப்போல் ஓர் சமஸ்கிருத சுலோக மொன்றை ஏற்படுத்தி வைத்துக்கொண்டு சமயம் நேர்ந்த இடங்களில் அதை சொல்லிக்கொண்டே திரிகின்றார்கள். அவற்றை தாங்களே சீர்தூக்கி விசாரிக்கவேண்டியதென்று சொல்லிவிட்டு சேஷன் என்பவனைநோக்கி, ஐயா தாங்கள் சொல்லிவந்த சுலோகத்தின்படி மக்களாகும் மனிதர் உற்பவம் மானின் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும், தவளையின் வயிற்றிலும், நரியின் வயிற்றிலும் உற்பவிப்பதுண்டோ. அத்தகைய உற்பவங்கள் தற்காலம் ஏதேனு முண்டா, எங்கேனுங் கண்டுள்ளாராவென்று உசாவியபோது ஏதொன்றும் பேசாமல் மௌனத்தி லிருந்துவிட்டான். உடனே நத்தனார் அரசனைநோக்கி, ஐயனே இவர்கள் கூறியுள்ள சுலோகத்தின் கற்பனை எவ்வாரென்னில் ஜம்புகனென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை நரியின் வயிற்றிற் பிறந்தவனென்றும், கௌதம னென்னும் பெயருள்ள ஓர் மனிதனிருப்பானாயின் அவனை பசுவின் வயிற்றிற் பிறந்தவனென்றும், மாண்டவ்யனென்னும் பெயருள்ளவன் ஒருவனிருப்பானாயின் அவனை தவளை வயிற்றிற் பிறந்தவனென்றும், கார்க்கேய னென்னும் பெயருள்ள ஓர்மனிதனிருப்பானாயின் அவனை கழுதைவயிற்றிற் பிறந்தவனென்றுங் கற்பித்துக் கூறியக் கட்டுக்கதை சுலோகத்துள் சாங்கயமென்னும் மொழி அறுசமயங்களில் ஒன்றாதலின் அவர்களையும் பௌத்தர்களென்றறிந்து இவர்கள் கொடுத்துள்ளப் பெயரை மாறுபடுத்தி சாங்கயர் பறைச்சி வயிற்றிற் பிறந்தவரென்னும் மொழியையும் அதனுட் புகட்டி, பறையனென்னும் பெயரைப் பரவச்செய்துவருகின்றார்கள்.
இவ்வாரியர்கள் தற்காலங் கூறிய வடமொழி சுலோகம் முற்றும் பொய்யேயாம். அதாவது மண்முகவாகு சக்கிரவர்த்திக்கும் மாயாதேவிக்கும் பிறந்தவர் கெளதமரென்றும், சௌஸ்தாவென்னும் அரசனுக்கும், கோசலையென்னும் இராக்கினிக்கும் பிறந்தவர் மச்சமுனியாரென்றும், பாடுகியென்னுங் குடும்பிக்கும், சித்தஜியென்னுமாதுக்கும் பிறந்தவர் அகஸ்தியரென்றும் சரித்திரங்களில் வரைந்திருக்கக் கழுதை வயிற்றிலும், நாய்வயிற்றிலும், தவளை வயிற்றிலும் மனிதர்கள் பிறந்தாரென்னில் யார் நம்புவார்களென்று நகைத்தபோது அரசன் கையமர்த்தி சேஷனென்பவனை நோக்கி, ஐயா, இருஷிகளின் உற்பவங்களைக்கூறினீர்களே அவர்களுடைய சரித்திரங்களிலும் சிலதைச் சொல்லவேண்டுமென்று கேட்டான். புருசீகர்களாம் மிலேச்சர்கள் எழுந்து பிறந்தபோதே இருஷிகளென்னும் பெயர் கொடுக்கத் தகுமா, பிறந்து வளர்ந்து ஞானமுதிர்ந்தபோது கொடுக்கத் தகுமா என்பதை உணராமல் உளற ஆரம்பித்த சங்கதிகள் யாவும் அரயன்மனதிற்கு ஒவ்வாதபடியால் நத்தனாரைநோக்கி, இவைகளுக்குத் தாங்களென்ன சொல்லுகின்றீரென்றான்.
உடனே நத்தனார் எழுந்து இராஜேந்திரா, ஞானம் இன்னதென்றும், ஞானிகள் இன்னாரென்றும், யோகம் இன்னதென்றும், யோகிகள் இன்னாரென்றும், குடும்பம் இன்னதென்றும், குடும்பிகள் இன்னாரென்றும், இருடிச் சரம் இன்னதென்றும், இருஷீஸ்வரர் இன்னாரென்றும், முனைச்சரம் இன்னதென்றும் முநீச்சுரர் இன்னாரென்றும், பிரம்மணம் இன்னதென்றும், பிராமணாள் இன்னாரென்றும், மகத்துவம் இன்னதென்றும், மகாத்மாக்கள் இன்னாரென்றும், பார்ப்பவை யின்னதென்றும், பார்ப்போர்க ளின்னாரென்றும் இவர்களுக்குத் தெரியவேமாட்டாது. அதற்காய சாஸ்திரங்களை வாசித்தவர்களுமன்று. அத்தகைய சாதனங்களிற் பழகினவர்களுமன்று.