சமூகம்/ 635
பேரானந்த ஞானரகசியம் யாதெனில் சத்தியசங்கத்துள் சேர்ந்துள்ள சமணமுநிவர்கள் திரிகாய மந்திரமாம் காயத்திரி மந்திரத்துள் நிலைத்து கொல்லா விரதம், குடியா விரதம், பிறர்தாரம்நயவா விரதம், பிறர்பொருளை இச்சியா விரதம், பொய் சொல்லாவிரதமாகிய பஞ்சசீலத்தில் லயித்து பற்றறுத்த செயலுங் குணங் குறிகளும் ஞானாசிரியர்களாகும் அறஹத்துக்களுக்குத் தெரிந்தவுடன் அம்மாணாக்கனை வியாரத்தைவிட்டு நிலைபேராது செய்து வெளியிற் பார்க்கும் ஊனக்கண் பார்வையை நீக்கி தனக்குள் பார்க்கும் ஞானக்கண் பார்வையை அளிப்பார்கள். இவற்றையே உள்விழியென்றும், உதவிவிழியென்றும், உபநயனமென்றுங் கூறப்படும். உலகப்பொருளை நோக்குவது ஊன்னயனமும், உண்மெய்யை நோக்குவது உபநயனமுமாம்.
உபநயனம் பெற்ற மாணாக்கர்கள் முன்போல் பிச்சாபாத்திரமேந்தி வெளிபோகாமலும், மற்றும் உலகவிவகாரங்களிற் பிரவேசியாமலும் தங்கள் உள்விழிப்பார்வையில் இருக்கவேண்டியவர்களாதலின் அத்தேச அரசர்களையும், உபாசகர்களையும் வரவழைத்து இம்மாணாக்கன் சமணமுநிவருள் சித்திபெறவேண்டிய உபநயனம் பெற்றுக்கொண்டபடியால் கடைத்தேறுமளவும் இவனுக்கு வேண்டிய பொருளுதவியும் புசிப்புதவியும் அளித்துவர வேண்டியதென்றும் உபநயனம் பெற்றோன் அதாவது உள்விழி கண்டோனென்றும் அடையாளத்தை மற்றவர்களறிந்து வேண உதவிபுரிந்துவருவதற்காக மதாணி பூநூலென்னும் முப்புரிநூலை மாணாக்கன் வலதுபுறத்திற்கும் இடது இடுப்பிற்கும் சுற்றி நிற்கும்படி அணைந்துவிடுவார்கள். அந்நூலணைந்துள்ளோரைக் கண்டவுடன் சகலரும் வணங்கி வேணப் பொருளளிப்பது வழக்கமாகும்.
முப்புரிநூலை அவ்வகை யணையம் அந்தரார்த்தம் யாதெனில் குழந்தையானது தாயின் வயிற்றில் கட்டுப்பட்டிருக்குங்கால் மூச்சோடிக்கொண்டிருக்கும் ரத்தினமானது உந்தியாகிய கொப்புழுக்கும் இடது புறவுள் விலாவிற்கும்சுற்றி வலமுதுகிலேறி பிடரிவழியிற்சென்று நாசிமுனை வழி வந்து மார்பிலிரங்கி உந்தியிற் கலந்திருக்கும் வழியைத் திறந்து மூச்சு உள்ளுக்குள்ளடங்கி உண்மெய் யுணரவேண்டியததுவாதலின் அதனிருப்பையும் உபநயன விழிப்பையுங் கண்டறிவதற்கும் திரிமந்திரமாம் மூவருமொழியை சிந்திப்பதற்கும் முப்புரிநூலை மார்பில் அணைந்து வைத்திருக்கின்றார்கள்.
முப்புரி நூலணையும் விவரமும் அதன் ஞானார்த்தங்களும் இவ்வேஷ பிராமணர்களுக்குத் தெரியாது, கல்வியற்றக் குடிகளுக்குத் தெரியாது. அதன் ஞானக்கருத்து தெரியாதிருப்பினும் சமணமுநிவர்களுக்கு உபநயனம் அளிக்குங்கால் சகலகுடிகளையுந் தருவித்து உபநயனம் பெற்றோரை சுட்டிக் காட்டி வேண வுதவி செய்யும்படிக் கேட்டுக்கொண்டவுடன் அவுற்பிரசாதமளித்து ஆனந்தமுடன் அனுப்புவதுமட்டிலும் அவர்களுக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்தவர்கள் இந்த வேஷப்பிராமணர்களை அடுத்து வணங்கி வியாரங்களிலுள்ள பிராமணர்கள் உபநயனமளிக்குங்கால் அவுற்பிரசாத மளித்து சகலரையும் ஆனந்திக்கச் செய்வார்கள். அவ்வகையாக நீங்கள் செய்யாதகாரணமென்னவென்று வினவியவுடன் அதனந்தரார்த்தம் இவர்களுக்குத் தெரியாதிருப்பினும் கல்வியற்றக் குடிகளிடத் தங்களுக்குத் தெரிந்தவைபோல் அபிநயித்து தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனஞ் செய்விக்கப்போகின்றோம் அவற்றிற்குத் தேங்காய், பழம், அவுல்கடலை கொண்டுவருவதுடன் பணவுதவியுஞ் செய்யவேண்டுமென்று பெற்று, தங்கள் பெண் பிள்ளைகளுடன் புசித்துத் தங்கள் பிள்ளைகளும் அத்தகைய நூலை யணிந்துவருகின்றார்கள். ஏழைக் குடிகள் அவுற்பிரசாதங் கொடுக்கவில்லையேயென்று கேட்டால் தேவர்களுக்கு அளிக்கும் அவுல் பிரசாதத்தை உங்களுக்கு அளிக்கலாகா தென்றேய்த்து பணம் பறித்துவருவதுமல்லாமல் அவுற்பிரசாதங் கொடாது தாங்களே தின்று கொழுத்துலாவுவதற்கு உபநயனமென்னும் மொழியும் சீவனத்திற்கு ஓர் வழியைக் கொடுத்துவிட்டது.