உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/702

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

654 / அயோத்திதாசர் சிந்தனைகள்

அளிப்போரும் வந்திருக்குங் கூட்டத்தோரைக் காப்போருமாக உதவிபுரிய ஆரம்பித்துக்கொண்டார்கள். விவேகமிகுத்த சிலக் குடிகளோ இவர்களை வேஷப்பிராமணப் பொய்க்குருக்களென்றறிந்து துரத்திய போதினும் அவிவேகிகளின் கூட்ட மிகுத்திருக்குமிடங்களில் விவேகிகளின் போதம் ஏற்காமல் அவர்களைத் தங்களுக்கு விரோதிகளென்றுகூறி அருகில் நெருங்கவிடாமற் செய்துகொண்டு தங்களது பொய்க்குரு வேஷத்தை மெய்க்கும்போல் நடித்து தேசங்களை சுற்றிவருங்கால் விவேகமிகுத்த பௌத்தக் கூட்டத்தோர்களால் யானை ஒட்டக முதலியவைகளைப் பறிகொடுத்து பல்லக்கு முடையுண்டு பொய்க்குருவும் மடியுண்டு ஓடியபோதினும் ஜகத் குருவென்று பொய்யைச் சொல்லி பல்லக்கிலேற்றித் திரிவதால் மிக்கப் பொருள் சேகரிப்பதற்கு வழியும் சுகசீவனமுமாயிருக்கின்றபடியால் மறுபடியும் பல்லக்கு ஒட்டகம் யானை முதலியவைகளை சேகரித்துக்கொண்டு தென்னாடெங்குஞ் சுற்றி பொருள் பறிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள்.

ஆரிய வேஷப்பிராமணர்கள் செய்துவரும் படாடம்பப் பொய்க்குரு வேஷத்தால் திராவிட வேஷப்பிராமணர்கள் செய்துவரும் சிலாலய வரவு குன்றி கஷ்டம் நேரிட்டபடியால் தங்களாசிரியனாகும் சிவாச்சாரியன் பெயரை நீலகண்ட சிவாச்சாரியென நீட்டி இவர்தான் ஜகத்குரு, இவர்தான் சிவாச்சாரி, இவரால் போதித்துக் கட்டியுள்ள அறுகோண பீடமே முக்கியம் அவ்விடங் கொண்டுவந்து தட்சணை தாம்பூலம் ஈவதே விசேஷமெனக் கூற ஆரம்பித்துக் கொண்டதுமன்றி சங்கரராகிய ஜகத்குரு வடக்கே மகதநாட்டின் சக்கிரவர்த்தித் திருமகனாகப் பிறந்து சகலப் பற்றுக்களையுந் துறந்து நிருவாணமுற்று நித்திய சுகம் பெற்றதுடன் தானடைந்த சுகத்தை உலகில் தோன்றியுள்ள சகல மக்களும் பெற்று துக்கத்தை நீக்கிக் கொள்ளுவதற்காகத் தரணியெங்கும் சாது சங்கங்களை நாட்டி மெய்யறத்தையூட்டி மத்திய பாதையில் விடுத்துவிட்டு பரிநிருவாணமடைந்து அவரது தேகத்தையும் தகனஞ்செய்து நெடுங்காலமாகி விட்டது. அவரது சங்கறரென்னும் பெயரையும் ஜகத்குருவென்னும் பெயரையும் இவர்கள் சொல்லிக்கொண்டு பொருள்பறித்து வருகின்றார்கள். இவர்களது பொய்க்குருவேஷத்தை மெய்யென்று நம்பி மோசம் போகாமல் நீலகண்ட சிவாச்சாரியின் கொள்கைகளையும் அவரது சிலாலயங்களையும் பூசிப்பதே விசேஷமெனக் கூறிவந்தார்கள்.

திராவிட வேஷப்பிராமணர்களது கூற்றையறிந்து ஆரிய வேஷப் பிராமணர்கள் சங்கங்களுக்கு அறத்தைப் போதிக்காது ஜனசமூகத்தில் பொருள் பறிப்பவர்களாயிருக்கின்றபடியாலும், சாதியில் பெரிய சாதியென்னும் பெயரை வைத்துக்கொண்டு தாங்கள் இருக்குமிடங்களை விட்டு வெளிதேசங்களுக்குப் போகாமலிருக்கின்ற படியாலும் தங்களை சங்கறரல்லவென்றும் ஜகத்திற்கே குருவல்லவென்றும் பெரும் பொய்யர்களென்றும் சொல்லி வருகின்றார் களென்று அறிந்துகொண்டு தங்களது பொய்யாய ஜகத்குருவை பல்லக்கிலேற்றி செல்லுங்கால் பெருங்கூட்டங்களும் கனவான்களும் நிறைந்துள்ள இடங்களில் இறக்கி மரத்தடியில் உட்காரவைத்து யானையைப் போல காதையாட்டும் கஜகரணவித்தையையும், பசுவைப்போல் தேகமெங்குந் துடிப்பெழச்செய்யும் கோகரண வித்தையையுஞ் செய்யவிட்டு மக்களை மதிமயக்கி திகைக்கச்செய்து பொருள்பறிப்பதுமன்றி அவர் யாரெனில் சிவனே சங்கராச்சாரியாக வந்து பிறந்திருக்கின்றார் இவரையே நீங்கள் சிவனென்றெண்ணியும் இவரையே ஜகத்குருவென்று பாவித்தும் தட்சணை தாம்பூலம் அளிப்பீர்களாயின் சகல சம்பத்தும் பெற்று உலகத்தில் வாழ்வதுடன் உங்கள் மரணத்திற்குப்பின் சிவனுடன் கலந்துக்கொள்ளுவீர்கள். மற்றப்படி உருதிராட்டும் உருத்திராட்சக் கொட்டை யென்னும் பேரிலந்தை விதையாலும் சாணச்சாம்பலாலும், அறுகோணத்திற்குச் செலுத்தும் தட்சணையாலும் யாதொரு பலனையும் அடையமாட்டீர்களென சொல்லிக்கொண்டே அங்கங்கு சென்று பொருள் பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.