உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/708

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

660 / அயோத்திதாசர் சிந்தனைகள்

கணிதத்தை விவரித்தார்கள். அரசனும் புன்னகைக் கொண்டு நிமித்தகர்களே, சென்ற சுக்கிரவாரம் இரவு ஐயன் அறப்பள்ளியில் யானுறங்குங்கால் எனதரிய தந்தை சொற்பனத்தில் வந்து காசிபாவென்னு மோர் சத்தமிட்டு மிலேச்சர்களாகிய சத்துருக்கள் உன்னைக் கொல்லுதற்கு வட்டமிட்டிருக்கின்றார்கள், விழித்திருமென்று கூறி மறைந்துவிட்டார். யானும் விழித்து வெளிவந்து ஆகாயவிரிவை நோக்குங்கால் நட்சேத்திர சுழலால் ஐந்தாவது ஜாமம் விளங்கிற்று. அக்கால சொற்பனம் மறைவின்றி யதார்த்தமாதலின் தங்களை தருவித்து ஜாதகவோலையைத் தந்தேன். தாங்களும் எனது மிருத்தியுவின் கணிதத்தைக் கண்டீர். ஆனந்தமே ஆயினும் எனது பட்டத்திற்கு தம்பி காங்கேயனை நியமிக்க உத்தேசித்திருக்கின்றேன் அவன் கால கணிதம் எப்படியோ அதையும் ஆராயுங்கோள் என்று சொல்லி அவனது ஓலையையும் ஈய்ந்தான். அதைக் கண்ணுற்ற நிமித்தகர் அவனது காலவோலையின் சுகத்தைக்கண்டு பட்டமளிக்கலாமென்று கூறினார்கள். உடனே அரசனுந் தனதரசவங்கத்தோர்களுக்கு அறிக்கைவிட்டு காங்கேயனுக்கு அரசையளித்து விட்டடான்.

அதனை அறிந்த வேஷப்பிராமணர்கள் யாசகத்திற்கு வந்து நின்றார்கள், இவர்களைக் கண்ட அரசனுக்கு சந்தேகம் தோன்றி, இவர்கள் யார், இவர்கள் தேசமெது நன்றாய் உழைத்துப் பாடுபட்டு சீவிக்கக்கூடியவர்களாயிருந்தும் நாணமில்லாது பிச்சையேற்றுண்ணுங் காரணம் யாதென விசாரித்தான். அரசனது மொழியைக் கேட்ட வேஷப்பிராமணர்கள் தங்களை பிராமணர்களென்று கூறினால் அரசன் நம்பமாட்டான் அன்னியதேசத்திலிருந்து வந்துவிட்டோம், சீவனமில்லாததால் யாசகத்திற்கு வந்தோமென்று கூறினார்கள்.

அவ்வகைக் கூறியும் அரசன் அவர்களது மொழியை நம்பாது இவர்கள் தான் மிலேச்சர்களாகிய சத்துருக்களாயிருக்கவேண்டுமென்றெண்ணி வேவுகர்களை அழைத்து அவர்கள் யாவரையுந் தனது தேசத்தைவிட்டு அப்புறப்படுத்தும் படி ஆக்கியாபித்துவிட்டான்.

அவற்றை உணர்ந்த வேஷப்பிராமணர்கள் யாவரும் ஊரைவிட்டகன்றும் ஆசை வெழ்க்கமறியாது கல்வியற்றக் குடிகளிடஞ்சென்று தங்களை பிராமணர்கள் பிராமணர்களெனக் கூறி வஞ்சித்துப் பொருள் பறித்துவந்தார்கள். அக்கால் காசிபச் சக்கிரவர்த்தியும் கபாதிக்கக் கள்ளவியாதியால் மரணமடைந்தான். அதனைக் கேழ்வியுற்ற வேஷப்பிராமணர்களுக்கு மிக்க ஆனந்தமுண்டாகி முன்போல் நகருள் நுழைந்து தங்கள் யாசக சீவனத்தை செய்துக் கொண்டே காங்கேயச் சக்கிரவர்த்தி தங்கள் போதனைக்கு எப்போது வயப்படுவானென்னும் உத்தேசத்திலேயே காலங்கழித்து வந்தார்கள்.

தென்காசியைச் சேர்ந்து வாழ்ந்த ஆரிய வேஷப்பிராமணர்களும், மராஷ்டகவேஷப்பிராமணர்களும், கன்னடவேஷப்ப்பிராமணர்களும், திராவிட வேஷப்பிராமணர்களும் ஒருவருக்கொருவர் கண்டு உட்சினம் எழுவிய போதினும் வெளிக்குக் காட்டிச்கொள்ளாமல் ஒருவர்வீட்டிலொருவர் புசிப்பெடுக்காமலும், ஒருவர் பெண்ணை மற்றொருவர் கொள்ளாமலும் முறுமுறுத்துக்கொண்டே தங்கள் வேஷப்பிராமணத்தை விருத்திச்செய்து வந்ததுடன் தாங்கள் ஏற்படுத்திவரும் சிலாலயங்களிலும் வெவ்வேறு தேவர்களை சிருட்டிசெய்துக் கொண்டு அதற்குத் தக்கப் பொய்ப்புராணங்களையும் வரைந்து பேதை மக்களுக்குப் போதித்து பொருள்பறிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.

எவ்வகையாலென்னில் இவ்விந்திரதேசமெங்கணுமுள்ள இந்திரக் குடிகள் யாவரும் இந்திரராம் புத்தபிரானையே ஆதியங்கடவுளாக சிந்தித்து அறநெறியில் நின்றொழுகுங்கால் அறப்பள்ளிகளிலுள்ள சமணமுநிவர்கள் வரிவடிவ கல்வியாரம்பம் செய்யுங்காலங்களிலும், வித்தை ஆரம்பம் செய்யுங்காலங்களிலும், இலக்கிய நூல், இலக்கண நூல், ஞானநூல், நீதிநூல் முதலியவைகளை எழுதுங் காலங்களிலும் விநாயகராம் புத்தபிரானைக் காப்புக்கு முன்னெடுத்து துதிக்குங் கடவுளாக சிந்தித்து வித்தியாராம்பஞ்செய்வது இயல்பாம்.