668 / அயோத்திதாசர் சிந்தனைகள்
தங்கள் பொய்ப்பிராமண வேஷங்களையும் பொய்ப்போதகங்களையும் பொய்மதக் கடைகளையுங் குடிகளுக்கு விளக்கி விவரித்துவந்த விவேகமிகுத்தக் குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளெனக் கூறியும் தங்களையொத்த வேஷப்பிராமணர்கள் யாவரையும் உயர்ந்த சாதிகளெனக் கூறியும் தங்கள் தங்கள் மித்திரபேதங்களினாலும் மகமதிய துரைத்தனத்தார் உதவியைக் கொண்டும் பௌத்தர்களின் அறப்பள்ளிகளையும் சமணமுனிவர்களையும் சீர்கெடுத்து நிலைகுலையச் செய்துவிட்டதுமன்றி, வேஷப்பிராமணர்களுக்கு எதிரடை யாயிருந்த விவேகமிகுத்த பௌத்தக்குடிகள் யாவரையுந் தாழ்ந்தசாதிகளென வகுத்து, நிலைகெடச்செய்யும்படி ஆரம்பித்து பலவகையிடுக்கங்களாலும் பலவகைத் துன்பங்களாலும் நசித்து விவேகமிகுத்த மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்றுந் தாழ்த்தி பலவகையாலும் இம்சித்து வதைத்துவருங்கால் இவர்கள் செய்துவந்த பூர்வ புண்ணிய வசத்தால் மேல்நாட்டு ஐரோப்பிய விவேகக்கூட்டத்தோர் வந்து தோன்றினார்கள்.
அவ்வகை வந்து தோன்றியவர்களுக்குள் சிலர் வியாபார விசாரிணை யிலும், இராஜகீய விசாரிணையிலும் இருந்தபோதிலும் சிலர் வடகாசியில் வழங்கிவந்த வேதம் வேதமென்னு மொழியிலேயே ஊக்கமுடையவர்களாகி அதன் ஆராய்ச்சியிலிருந்தார்கள். காரணமோவென்னில் புத்தபிரான் ஆதிசங்கத்தை நாட்டியதுங்காசி, சமணமுநிவர்களை நிறப்பியதுங் காசி, ஆதிவேத மொழிகளாம் திரிபீடவாக்கியங்களை பரவச்செய்ததுங்காசி, அம்மூவரு மொழிகளாம் பேதவாக்கியத்தின் அந்தரார்த்த உபநிடதங்களை விளக்கியதுங் காசி, அவர் பரிநிருவாணமுற்றதுங் காசியாதலின் அங்குள்ள மக்களும் கங்கையாதாரனாம் காசிநாதன் வியாரத்தை தரிசிக்கவரும் மக்களும் திரிபேதவாக்கியங்களையே சிரமேற்கொண்டேந்து மொழியைக் கேட்கும் ஐரோப்பிய விவேகிகள் வேதமென்பதென்ன, அஃதெங்குளது, அதன் பொருளென்னையென விசாரிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.
அக்காலத்திலும் பௌத்ததன்ம விவேகிகள் ஒருவரும் ஐரோப்பியர்களிடம் நெருங்காது வேஷப்பிராமணர்களே முன்சென்று வேணசங்கதிகளைக் கூறவும் தேசசங்கதிகளை விளக்கவுமுடையவர்களாயிருந்ததுடன் மகமதியர்கள் வந்து குடியேறியபோதே அவர்களது உதவிகொண்டுந் தங்கள் கெட்ட எண்ணங்களினால் காசியிலுள்ளப் பெருங் கட்டிடங்கள் யாவையுந் தகர்த்து புத்தரைப்போன்ற சிலைகள் யாவையும் அப்புறப்படுத்தியும், மண்களிற் புதைத்தும், தங்களெண்ணம்போற் செய்துக் கொண்ட விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தாங்களே இத்தேசத்துப் பூர்வக்குடிகள்போல் அபிநயித்து பௌத்தர்களை அவர்களிடம் பேசவிடாமலும் நெருங்கவிடாமலும் செய்துகொண்டிருந்த காலத்தில் இந்திரரை சிந்திக்கும் இந்திரதேசக் குடிகளை இந்தியரென்று வழங்கிவந்தப் பெயரை மாற்றி மகமதியர்களால் (இந்து லோகா) வென வழங்கி நாளுக்குநாள் இந்து இந்துவென வழங்கிக்கொண்டே வந்துவிட்டார்கள். அவ்வழக்க மொழியைக் கேட்டுவந்த ஐரோப்பியர்களும் வேஷப்பிராமணர்களை இந்து வென்றழைத்து, உங்கள் இந்து வேதமென்பதென்னை, அதன் கருத்தென்னை யென வினவ ஆரம்பித்தபோது, வேதமென்னு மொழியை அறியாதவர்களும் அனந்தரார்த்தந் தெரியாதவர்களுமாதலின் சிலகால் திகைத்தே நின்றார்கள்.
காரணமோவென்னில், புத்தசங்கங்களில் தங்கியிருந்த சமணமுநிவர்கள் புத்தபிரானால் ஆதியில் போதித்த அருமொழிகளாம் செளபாபஸ்ஸ அகரணம், குஸலஸ வுபசம்பதா, சசித்தபரியோதானம் எனும் மூன்று சிறந்த மொழிகளும் முப்பேதமாயிருந்தபடியால் திரிபேத வாக்கியங்களென்றும், ஒருவர் போதிக்கவும் மற்றவர் கேட்கவுமாயிருந்தபடியால் திரிசுருதிவாக்கியங்களின் உபநிட்சை யார்த்தங்களை விளக்கும் தெளிபொருள் விளக்கம் முப்பத்திரண்டுக்கும் உபநிடதங்களென்றும் வழங்கிவந்தார்கள்.