670 / அயோத்திதாசர் சிந்தனைகள்
பொருள் சேகரிக்கும் நோக்கத்திலேயே இருந்தார்கள். சமணமுநிவர்களுக்குள் உபநயனமென்பது ஞானக்கண் உள்விழி திறத்தலென்னுங் குறிப்பிட்டு ஞானத்தானம் பெற்றோன், ஞானக்கண் பெற்றவனென்னும் அடையாளத்திற்காக மதாணிப் பூணு நூலென்னும் முப்பிரி நூலை மார்பிலணிந்துவந்தார்கள். இவ்வேதத்திற்குரிய வேஷப்பிராமணர்களோ அதனந்தரார்த்தம் அறியாது என் பெரிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டும், சிறிய பிள்ளைக்கு உபநயனஞ் செய்யப்போகின்றேன் பொருள் வேண்டு மென்னும் சுயப்பிரயோசனத்தையே நாடிநின்றார்கள்.
சமண முநிவர்கள் புத்ததன்ம சங்கமென்னும் மும்மணிகளை, மனோ வாக்கு காயமென்னும் மும்மெயில் வணங்கி அவற்றை திரிகாய மந்திரமென்றும், காயத்திரி மந்திரமென்றும், வழங்கிவந்தார்கள். அதனந்தரார்த்தம் தெரியாது இவ்வேஷப்பிராமணர்கள் விசேஷமான காயத்திரி மந்திரஞ் செய்யப் போகின்றோம், காயத்திரி மந்திரஞ் செய்யப்போகின்றோம் என்னும் இரண்டொரு வடமொழி சுலோகங்களைச் சொல்லிக்கொண்டே பொருள் சம்பாதிக்கும் ஏதுவில் நின்றுவிட்டார்கள். அறஹத்துக்கள் சமண முநிவர்களாகியத் தங்கள் மாணாக்கர்களை சாலக்கிரமம், சாலக்கிரமமென ஆசீரளிப்பது கண்டு அதனந்தரார்த்தம் அறியா இவ்வேஷப்பிராமணர்கள் சமுத்திர ஓரங்களில் உருண்டுகிடக்கும் சிறியக் கூழாங்கற்களில் சிவப்பு நிறக்கோடுகளுள்ளதை எடுத்துவந்து கல்வியற்றக் குடிகளிடம் இதுதான் சாலக்கிராமம் இதைப் பூசிப்பவர்கள் மேலான பாக்கியம் பெறுவார்களென வஞ்சித்து அதனாலும் பொருள் சம்பாதித்து வந்தார்கள்.
இவை போன்றே சமண முநிவர்களுள் பேதமென்னு மொழியை வேதமென்றும் வழங்கிவந்ததும், திரிபேத வாக்கியமென்னும் மொழியை மூன்றுவகையான மொழியென்பதையும், வரிவடிவு அட்சரமில்லாதகாலத்தில் இவ் அருமொழி மூன்றினையும் ஒருவர் ஓதவும் மற்றொருவர் கேட்கவும் சிந்திக்கவுமாய் இருந்தபடியால் திரிகருதிவாக்கியங்களென்றும், மும்மொழியும் பொருள்மயங்கிநின்றபடியால் மும்மறை மொழிகளென்றும் வழங்கிவந்ததுடன் அதன் சாதன சித்தியால் வீடுபேறு கண்டவுடன் வீடுபேறென்னும் மொழியையும் ஓர் வாக்கியமாக்கி சதுர்வேதவாக்கியமென்றும், நான்கு சுருதிவாக்கியமென்றும், நான்கு மறைபொருளென்றும் வழங்கி வந்த ரகசியார்த்தத்தை இவ் வேஷப்பிராமணர்கள் அறியாதும், பேத மொழிகளென்பதே வேத வாக்கியங்களென வழங்கிவருவனவற்றை நான்கு பேதமொழிகளென்றும், நான்கு வகையாய வாக்கியங்களென்றும் உணராது, பெரியபெரியக் கட்டுபுத்தகமென்றெண்ணியும் இப்பேதமொழிகள் மூன்றும் வரிவடிவ அட்சரம் இல்லாத காலத்தில் புத்தபிரானால் ஓதவும் மற்றவர்கள் தங்கள் தங்கட் செவிகளாற் கேட்கவும் சிந்திக்கவுமாயிருந்தது கொண்டு வரையாக் கேள்வி யென்றும் திரிசுருதி வாக்கியங்களென்றும், சொல்லவுங் கேட்கவுமாயிருந்த மொழிகளை உணராது பத்தாயிரஞ் சுலோகம், பன்னீராயிரஞ் சுலோகம், எட்டு புத்தகம், பத்து புத்தகமென வரைந்துள்ள கதைகள் யாவையும் ஒருவன் மனதிற் பதியவைத்துக் கொண்டு மற்றவனுக்கு போதிக்கவும், மற்றவனவற்றை தனது செவிகளாற் கேட்டு சிந்தனையில் வைக்கவும் கூடுமோ என்றறியாதும் பெரியக் கட்டுபுத்தகத்தை சுருதியென்றுங்கூறி தங்கள் அறியாமெயால் மற்றவர்களையும் மயக்கி ஜோராஸ்டிரரால் வரைந்துவைத்துள்ள ஜின்ட்டவஸ்த்தாவிலிருந்த சரித்திரங்களிற் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும், புத்ததன்மங்களிலிருந்த சரித்திரங்களிலும், பெயர்களிலும் ஞானங்களிலும் சிலவற்றைக் கூட்டியுங் குறைத்தும், நாலைந்துபேர் தங்கள் தங்கள் மனம்போனவாறு எழுதிக் கொண்டுபோய் கனந்தங்கிய துரைமக்களிடங் கொடுத்து இவைகள்தான் வேதவாக்கியம், இவைகள் தான் சுருதி வாக்கியமெனக் கொடுத்து அதனாலும் பொருள் சம்பாதிக்க ஆரம்பித்துக்கொண்டார்கள்.