672 /அயோத்திதாசர் சிந்தனைகள்
அதன் பின்னர் புத்தபிரான் பாலியாம் மகடபாஷையையே மூலமாகக்கொண்டு, சகடபாஷையாம் வடமொழியையும், திராவிட பாஷையாம் பேதவாக்கியங்களை செவியாறக் கேட்கவும், மனமாற சிந்திக்கவும், அறிவாறத் தெளிவும் உண்டாகி சாந்த ரூபிகளாய் பிறப்புப் பிணி மூப்புச் சாக்காட்டை ஜெயித்த அறஹத்துக்களின் சரித்திரங்களையும் அவரவர்கள் சாதனங்களையும் ஆசிரியர் போதனங்களையும் விளக்கி ஓர் சரித்திரம் எழுதியுள்ள நூற்களுக்கு இஸ்மிருதிக ளென்றும் வகுத்திருந்தார்கள்.
இவற்றுள் அன்னமீவது ஓர் தன்மமும், ஆடையீவதோர் தன்மமுமாயிருப்பினும் மக்களுக்கு நீதியையும் நெறியையும் ஓதி துன்மார்க்கங்களை ஒழித்து, நன்மார்க்கங்களில் நடக்கும் போதனைகளையூட்டி, துக்க நிவர்த்திச்செய்து சுகம்பெறச் செய்யுந் தன்மம் மேலாய் தன்மமாயிருக்கின்ற படியால் அத்தகைய போதனைகளைப் போதிப்பவர் பெயரையுங் அவற்றைக் கேட்டு நடப்பவர் பெயரையும் கண்டு தெளிவுற எழுதியுள்ள நூலுக்கு இஸ்மிருதியென்றும் தன்மநூலென்றும் எழுதியிருந்தார்கள்.
அதாவது, வாசிட்டம், பிரகற்பதி, கார்த்திகேயம், திசாகரம், மங்குலீயம், மனு, அத்திரி, விண்டு, இமயம், ஆபத்தம்பம், இரேவிதம், சுரலைவம், கோசமங், பராசரம், வியாசரம், துவத்தராங்கம், கவுத்துவம், கிராவம் என்பவைகளேயாம். இவைகளுள் வசிட்ட ரென்னும் மகாஞானி இராமனென்னும் அரசனுக்கு புத்தரது வாய்மெகளையும் அவரது சாதனங்களை மற்றும் பரிநிருவாணமுற்ற அரசர்களின் சரித்திரங்களையும் அவர்களது சாதனங்களையும் விளக்கிக் கூறியுள்ள நூலுக்கு வசிட்ட ஸ்மிருதியென்றும், வசிட்ட தன்ம நூலென்றுங் கூறப்படும். பிரகற்பதியென்னும் மகாஞானி சந்திரவாணனென்னும் அரயனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்கங்களையும் ஞானசாதனங்களையும் வரைந்துள்ள நூலுக்கு பிரகற்பதி ஸ்மிருதியென்றும், பிரகற்பதி தன்மநூலென்றுங் கூறப்படும். கார்த்திகேயராம் முருகக்கடவுள், கமலபீடனாம் மணிவண்ணனுக்குப் போதித்த நீதிநெறி ஒழுக்க சாதனங்களையும் அதனதன் பலன்களையும் விளக்கிக்காட்டிய நூலுக்கு கார்த்திகேய ஸ்மிருதியென்றும், கார்த்திகேயர் தன்ம சாஸ்திரமென்றும், கூறப்படும். மதுவென்னும் மகாஞானியார், பிரஜாவிருத்தி யென்னும் அரயனுக்குப் போதித்த சத்திய தன்மமும் அதை அநுசரித்து நடந்ததினால் டைந்த சுகபலனையும் விளக்கிய நூலுக்கு மநுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றுங் கூறப்படும்.
இத்தகையாய் வழங்கிவந்த பெளத்ததன்ம நூல்களும் அதனதன் சாராம்ஸங்களும் அஞ்ஞானிகளாகிய இவ்வேஷப்பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் தங்கள் தங்கள் வேஷப்பிராமணச் செயலைவிருத்திசெய்து சுயப்பிரயோசனத்தில் கசிப்பதற்கு மேற்கூறிய பதிநெட்டு இஸ்மிருதிகளாம் தன்மசாஸ்திரங்களின் சாராம்ஸங்களை முற்றும் அறிந்தவர்கள்போல் மதுஸ்மிருதியென்றும், மநுதன்ம சாஸ்திரமென்றும் ஓர் அதன்மநூலை ஏற்படுத்திக்கொண்டார்கள்.
இத்தகைய அதன்மநூல் தோன்றியகாலத்தில் சமணமுநிவர்களும், சாது சங்கங்களும் அழிந்து அறப்பள்ளிகளின் பெயர்களும் ஒழிந்து வேஷப் பிராமணர்களைத் தட்டிக் கேழ்க்கும் நாதர்களில்லாது போய்விட்டபடியால், வேஷப் பிராமணர்கள் தங்களை உயர்ந்த சாதி தேவர்களென வகுத்துக்கொண்டு மற்றவர்களைத் தங்கள் மனம்போனவாறு தாழ்த்தத்தக்கவைகளை வரைந்து கொண்டும், பௌத்தர்களுடைய ஸ்மிருதிகளேதேனும் வெளிவருமென்னும் பயத்தினால் தங்களுடைய மநுதன்ம சாஸ்திரத்தின் முகவுரையில் “பதிநெட்டு ஸ்மிருதிகளுள் மநுஸ்மிருதிக்கு விரோதமாய் மற்றப் பதினேழு ஸ்மிருதிகளும் ஒரேவாக்காய் சொல்லியிருந்தாலும் அது ஒப்புக்கொள்ளத்தக்கதன்று.”
தங்களுடைய அதன்ம நூலையே தன்ம நூலாக ஒப்புக்கொள்ள வேண்டுமென்னும் அட்டவணையைப் போட்டுக்கொண்டு தங்கள் சுயசீவனத்திற்கான வழிகளையெல்லாம் எழுதிவைத்துக்கொண்டார்கள். அவற்றுள்ளும் வருணமென்னு மொழி நிறத்தைக் குறிக்கக்கூடியவை என்றுணராது அவைகளையே ஒவ்வோர்சாதிகளாக எழுதியுள்ளார்கள்.