பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 677

கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் ஆசாரங்களையும், சிலாலயப் பூசைகளையும், அவரவர்கள் மனம்போல் ஏற்படுத்திக்கொண்டு, மதக்கடைபரப்பி சீவிக்குங்கால் இவர்களது பொய் வேதங்களையும், பொய்க்குரு உபதேசங்களையும், சமணமுநிவர்களாகும் பாம்பாட்டி சித்தர் முதலியோர் கண்டித்தும் இவர்களது பொய்ச்சாதி வேஷங்களையும் பொய்லிங்க பூசைகளையும், சிலாலிங்கத் தொழுகைகளையும், சமணமுநிவர்களாம் சிவவாக்கியர், பட்டினத்தார், தாயுமானவர், சாம்பவனார், கடுவெளி சித்தர், குதும்பை சித்தர் மற்றுமுள்ள மகாஞானிகளாலுங் கண்டித்து அனந்த நூற்கள் எழுதியதுமன்றி பெளத்த தாயகர்களாம் விவேகிகளால் வேஷபிராமணர்களைக் காணுமிடங்களிலெல்லாம் தங்கவிடாமல் அடித்து துரத்தவும் பௌத்தர்கள் வாசஞ்செய்யும் சேரிகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் வந்து நுழைந்துவிடுவார்களானால் கிராமத்திற்கும் சேரிக்கும் ஏதேனும் தீங்குண்டாமென்று பயந்து அவர்களை அடித்துத் துரத்தி அவர்கள் நடந்தவழியே சாணத்தைக் கரைத்துத் துளிர்த்துக்கொண்டேபோய் சாணச்சட்டியை அவர்கள் மீதே யுடைத்து வருவதுமாகிய வழக்கத்திலிருந்தார்கள்.

ஆரியர்கள் மாடுகளையுங் குதிரைகளையும் உயிருடன் சுட்டுத்தின்னக் கண்ட பௌத்தர்கள் அவர்களை மிலேச்சரென்றும் புலால் புசிக்கும் புலையரென்றும். இழிவுகூறி அகற்றிவந்தச் செயல்களானது, கன்னட வேஷப் பிராமணர்களுக்கும், மராஷ்டக வேஷப்பிராமணர்களுக்கும் திராவிட வேஷபிராமணர்களுக்கும் மனத்தாங்கலுண்டாகி பௌத்தர்களுக்கு எதிரிடையாய் பெருங்கூட்ட விரோதிகள் பெருகிவிட்டார்கள்.

அத்தகையப் பெருக்கத்தால் வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்களே சகலருக்கும் பெரியசாதிகள் என்று ஏற்படுத்திக் கொண்டு தங்களது பொய்வேஷத்தையும் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ச்சாதிகளையும், பொய்ப் புராணங்களையும் சகலருக்கும் விளங்கப் பறைந்து வந்தவர்களும் அவர்கள் கட்டுக்குள் அடங்காத பராயர்களுமாகவிளங்கிய மேலோர்களாம் பௌத்தர்களை சகலருக்குந் தாழ்ந்த சாதிப் பறையரென்றும் வகுத்து, தங்களை அடுத்தக் கல்வியற்ற சிற்றரசர்களுக்கும், கல்வியற்ற பெருங்குடிகளுக்கும் போதித்து இழிவடையச் செய்துவந்ததுமன்றி பௌத்தர்கள் எங்கேனும் சுகத்திலிருப்பார்களாயின் தங்களுடைய நாணமற்ற ஒழுக்கங்களையும், மிலேச்சச் செயல்களையும், பிராமண வேஷங்களையும் சகலருக்கும் பறைந்து தங்கள் கெளரதையை கெடுத்துவிடுவார்க ளென்னும் பயத்தால் பௌத்தர்கள் யாவரையும் எவ்வகையால் கெடுத்து எவ்வகையால் நாசஞ் செய்து எவ்வகையாற் பாழ்படுத்தலாமோவென்னுங் கெடு எண்ணத்தையே குடிகொள்ள வைத்துக்கொண்டார்கள்.

காரணமோவென்னில் பௌத்தர்கள் சுகச்சீருடனிருப்பார்களாயின் பௌத்தர்களது வேதவாக்கியங்களையும் பௌத்தர்களது வேதாந்தங்களாம் உபநிஷத்துக்களையும் அறஹத்துக்களாம் பிராமணர்களது செயல்களையும் விளக்கிக்கொண்டே வருவார்கள். அதனால் தங்களது பொய்ப் பிராமண வேஷங்களும், பொய்ச்சாதி வேஷங்களும், பொய்போத வேதங்களும், பொய் வேதாந்த கீதங்களும் பரக்க விளங்கிப்போமென்னும் பயத்தால் மேன்மக்களாம் பௌத்தர்களை கீழ்மக்களாம் பறையர்களெனத் தாழ்த்தி நிலைகுலைக்கும் நோக்கத்திலேயே இருந்துவிட்டார்கள்.

எத்தகைய நிலைகுலைவென்னில் மடங்களில் தங்கியிருந்த சமண முநிவர்களை அவ்விடங்களிலிருந்து ஓட்டுவதும், அந்தந்த மடங்களிற் சிறுவர்கள் வாசிப்புக்கென்று ஏற்படுத்தியிருந்த பள்ளிக்கூடங்களைக் கலைத்தும், தங்களது போதனைக்குட்பட்ட அரசர்களை விடுத்தும், தங்களது பொய்ப் போதனைகளுக்கு மயங்கா விவேக அரசர்களை மித்திரபேதங்களாற் கொன்றும் தேசங்களை விட்டோட்டியும் புத்த தன்மங்களை மாறுபடுத்திக்கொண்டு வந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்ம குருக்களாகவிருந்து தன்மகன்மக் கிரியைகளை