678 / அயோத்திதாசர் சிந்தனைகள்
நடாத்தி வந்த சாக்கையர், வள்ளுவர், நிமித்தர்களென்போர்களை வள்ளுவப் பறையர்களெனத் தாழ்த்தி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலாளருக்கும் செய்துவந்தக் கன்மக்கிரியைகளை செய்யவிடாதகற்றி வேஷப் பிராமணர்களே அக்கிரியைகளை நடாத்துவதற்கு ஆரம்பித்துக்கொண்டதுமன்றி கல்வியற்ற அரசர்களிடத்தும், வள்ளுவர்களைப் பறையர்களென்றுகூறி இழிவுபடுத்தியது மன்றி அருகில் நெருங்கவிடாமலுஞ் செய்து அவர்களது தன்மகன்மக் கிரியைகளைத் தாங்களே அநுபவித்துக்கொண்டதுமன்றி அவர்களை எங்குந் தலையெடுக்கவிடாமல் செய்து மற்றும் யாது விஷயத்திலும் சீவிக்கவிடாது தாழ்த்தி நிலைகுலையச் செய்து ஊருக்குள் பிரவேசிக்கவிடாமலும், சுத்தநீர்களை மொண்டு குடிக்கவிடாமலும், வண்ணார்களை வஸ்திரம் எடுக்கவிடாமலும், அம்பட்டர்களை சவரஞ்செய்யவிடாமலும் மற்றுங் கனவான்களாயுள்ளக் குடிகள் வாசஞ்செய்யும் வீதிகளிற் போகவிடாமலும், அவர்களிடம் நெருங்கிப் பேசவிடாமலும், தடுத்துப் பலவகையாலும் பௌத்த குருக்களையும் பௌத்த உபாசகர்களையுமே கொல்லத்தக்க ஏதுக்களைத் தேடிக்கொண்டு தங்கள் பொய் வேதங்களையும், பொய் வேதாந்தங்களையும், பொய்ப்புராணங்களையும், பொய் ஸ்மிருதிகளையும், சிலாலயங்களாம் பொய்மதக்கடைகளையும் பரப்பி பொய்க்குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் யாவரும் மெய்க்குருக்கள் போல் நடித்து கல்வியற்றக் குடிகளையுங் காமியமுற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு பெளத்ததன்மத்தில் பிறழாது சுத்த சீலத்திலிருப்பவர்கள் யாவரைந் தாழ்ந்த சாதிகளென்று கூறி எவ்வெவ்வகையில் எவ்வெவ்வரிடத்து தாழ்ச்சிபெறக்கூறி நசிக்கக் கூடுமோ அவர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு, பௌத்தசிகாமணிகளாம் மேன்மக்கள் யாவரையுங் கீழ்மக்களெனத் தாழ்த்தி எங்கும் எவ்விதத்திலும் எச்சீவனங்களிலும் நெருங்கவிடாமல் துரத்தி நசித்துக்கொண்டே வந்தார்கள்.
பௌத்த தாயக மேன்மக்களோ வென்னில் சாதிபேதங்களால் உண்டாங் கேடுகளை விளக்கி அவைகளைக் கண்டித்தும், மத பேதங்களையும் அதன் கேடுகளையும் விளக்கி, அவைகளைக் கண்டித்தும் வேண்டியப் பாடல்களைப் பாடி நீதிமார்க்கங்களைப் பறைந்திருக்கின்றார்கள்.
ஆரிய மிலேச்சர்களோ கொண்டிருப்பது பிராமணவேஷம், போர்த்திருப்பது பொறாமெப்போர்வை, உள்ளத்துறைந்திருப்பதோ வஞ்சினக்கூற்று, நாவுரையோ நஞ்சுண்ட வாள், குடிகெடுப்பே குணசிந்தை யுள்ளவர்களாதலின் பெளத்த சிகாமணிகளின் நீதிபோதங்களைத் தங்கட் செவிகளிற்கேளாது தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதிபேதங்களுக்கும் பொய்மத பேதங்களுக்கும் உட்படாதவர்கள் யாவரையுந் தாழ்ந்த சாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பலவகையாலும் பரவச் செய்துவந்ததுமன்றி அன்னியதேசங்களிலிருந்து இவ்விடம் வந்து குடியேறியவர்களுக்கும் இழிவாக போதித்து அவர்களாலுந்தாழ்ச்சியடையச் செய்தும் இப்பறையனென்னும் பெயரை பட்சிகளுக்கும், மிருகங்களுக்குக் கொடுத்துப் பரவச்செய்து, இப்பறையனென்னும் பெயரை அரிச்சந்திர னென்னும் பொய்க்கதையிலும், நந்தன் சரித்திரமென்னும் பொய்க்கதையிலும், கபிலர் அகவலென்னும் பொய்க்கதையிலும் பரவச்செய்து கல்வியற்ற சாதிபேதமுள்ளோர் சகலர் நாவிலும் இழிவுபெற வழங்கவைத்துவிட்டார்கள். இவ்விழி பெயரால் பள்ளிக்கூட சிறுவர்களும் நாணமடைவதை அறிந்த கருணை நிறைந்த பிரிட்டிஷ் ராஜாங்கத்தார் பஞ்மர்களென்றேனும் அவர்கள் பெயரை மாற்றிவிடலாமென்று பள்ளிக்கூடங்களெங்கணும் மாற்றிவிட்டார்கள். அதையறிந்த சாதிபேத வஞ்சகர்கள் வீதிகளிலடித்துள்ள முநிசபில் போர்டுகள் யாவற்றிலும் முன்பவற்றிலில்லாத பறைச்சேரிவீதி பறைச்சேரி வீதியெனப் பலகைகளில் வரைந்து அப்பெயர் மாறாதிருக்கும் வழியைச் செய்திருக்கின்றார்கள்.