உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

682 / அயோத்திதாசர் சிந்தனைகள்


23. பஞ்சமுண்டாவதற்குக் காரணம் பூமியின் விருத்தி குறைவேயாம்

நமது தேசத்தார் தங்கள் கைப்பொருளை பூமியைப்பண்படுத்தி தானியவிருத்தி விருட்சவிருத்திகளைச் செய்யாது ஒவ்வொருவரும் பி.எ., எம்.எ. பட்டங்களைப்பெற்று விடவேண்டும், இராஜாங்க உத்தியோகங்களைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும் சுயராட்சியம் செய்யவேண்டுமென்னும் பேரவாவில் இருக்கின்றார்கள்.

எத்தேசமாயினும் பூமியின் விருத்தி நோக்கமற்றிருக்குமாயின் அத்தேசம் ஒருக்காலும் சிறப்புப்பெறாதென்பது திண்ணமாம். அதற்குப் பகரமாய் அமேரிக்கா, ஜப்பான், டிபேத், பர்ம்மா முதலிய தேசங்களே போதுஞ் சான்றாம். அத்தேசத்தோர் தங்கள் திரவியங்களை பூமியின் விருத்திக்கேசெலவிட்டு அதன்பலனால் குபேரசம்பத்துடையவர்களாய் இருக்கின்றார்கள். அமெரிக்கா தேசத்திய கோதுமைமாவும் பர்மா தேசத்திய அரிசியும் நமது தேசத்தில் வந்து ஏராளமாக இறக்குமதி செய்வதைக் காண்கின்றோம். அத்தகைய பர்மியர் அமேரிக்கர் முதலானோர் முயற்சிகளைப்போல் நமது தேயத்தோர் இல்லாமல் பாழடையுங் காரணமோவென்னில் பூமியில் உழைத்துப்பாடுபடும் மக்களை தாழ்ந்தசாதியாக வகுத்துவிட்டு சோம்பேரிகளெல்லாம் பெரியசாதிகளென ஏற்படுத்திக்கொண்டபடியால் பூமியின் விருத்தியற்று தானியங்களுங் குறைந்து பஞ்சமும் அதிகரித்துக்கொண்டே வருகின்றது.

பெரியசாதிகளெனப் பெயர்வைத்துக் கொண்டவர்கள் தங்கள் பணங்களை தாராளமாக செலவு செய்து ஏழைக் கூலியாட்களுக்கு பசியாற அன்னமளித்தேனும் பூமிகளை விருத்திச்செய்கின்றார்களா அதேனுங்கிடையா. எப்போதும் உழைத்துப் பணம் சம்பாதிக்காதவர்களின் கரங்களில் சொற்பப் பணங் கிடைத்துவிடுமாயின் அதையே தெய்வமாக பாவித்து ஒரு காசேனும் செலவிட மனம்வராது தகுந்த புசிப்பெடுக்காமலும், சுத்தவாடைகள் அணையாமலும் மேலுமேலும் அப்பணத்தைப் பெருக்கி அதன்பேரில் படுத்துக்கொண்டிருப்பார்கள். இவ்வகை ஒருகாசேனுஞ் செலவிட மனமெழாது மரணகாலம்வரில் அப்பணத்தை இழைத்து வாயில் வார்த்தால் தான் அப்பிராணன் நீங்கும் அல்லாவிடில் இரண்டு நாள் மூன்றுநாளேனும் அப்பண ஆசையின் பற்றால் பிராணன் இழுத்துக் கொண்டே கிடக்கும்.

இதுவே தற்காலம் இத்தேசத்தில் தோன்றியுள்ளப் பிரபுக்களின் சுவாபமாகும். இத்தகையக் கனவான்கள் தங்கள் பணங்களைச் செலவிட்டு பூமியின் விருத்தி செய்வார்களோ, ஏழைக்குப் பசியாற அன்னமளித்து ஏவல்வாங்குவரோ ஒருக்காலுமில்லை. பூர்வம் இத்தேசத்தில் மிக்க உழைப்பாளிகளாயிருந்து பணம் சம்பாதித்து அச்சமின்றி செலவிட்டு பூமியின் விருத்தியும், வித்தியா அபிவிருத்தியும் செய்து வந்தவர்கள் எழியநிலை அடைந்தும் சோம்பேரிகளும் பணம் சம்பாதிக்கத் திறமெயற்றவர்களும் பிரபுக்களாக பெருகிவிட்டபடியால் வித்தியா விருத்திகளுங் கெட்டு பூமியின் விருத்திகளும் நாசமுற்று நாளுக்குநாள் பஞ்சமதிகரித்துக்கொண்டே வருகின்றது.

இத்தகைய பஞ்சத்தின் அதிகரிப்பைக் கண்ட கவர்ன்மென்டாரும் விவசாய விருத்திக்கென்று வேண்டிய முயற்சிகளும் அதற்காய சாதனங் கருவிகளும் அமைத்து பணவுதவியும் செய்துவருகின்றார்கள். அத்தகையச் செயலிலும் நமது தேசத்தார் மேல்போக்குக் காட்டிக்கொண்டு அதன் வழியாகப் பணம் சம்பாதிக்க ஆரம்பிக்கின்றார்களன்றி பூமிகளில் உழைக்கவும் தங்கடங்கள் பணங்களைச் செலவு செய்து தானியங்களை விருத்திசெய்யவும் முயற்சியற்றே இருக்கின்றார்கள். ஆதலின் நமது தேய்த்துக் கனவான்களென்போர் இனியேனும் லோபத்துவத்தையும், சோம்பலையும் பெருக்காது இராஜாங்கத்தோர் முயற்சியையும் செயலையும் பின்பற்றுவார்களென்று நம்புகிறோம்.

- 4:8; சூலை 20, 1910 -