சமூகம் / 687
சமஸ்கிருதமுங் கற்று தங்களை பிராமணர் பிராமணரென சொல்லிக் கொண்டு காமியமுற்ற சிற்றரசரையும், கல்வியற்றப் பெருங்குடிகளையும் வஞ்சித்தும் பொருள் பறித்தும் தின்றுவருவதை நாளுக்குநாள் கண்டுணர்ந்த பௌத்ததன்ம விவேகிகள் வேஷப்பிராமணர்களை அடித்துத் துரத்தவும் சாணத்தைக் கரைத்து அவர்கள்மீது வார்த்துத் துரத்துவதுமாயிருந்தார்கள்.
இத்தகைய சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடிக்கொண்டே பிச்சையிரந்து தின்று வளர்ந்தவர்களுக்கு பெருங்குடிகள் வசப்பட்டு அதிகாரப் பிச்சைக்கு ஆளாகிவிட்டவுடன் பௌத்தர்களைக் காணுமிடத்து சாணச்சட்டிக்கும் அடிக்கும் பயந்து ஓடுங்கால் வேஷபிராமணருக்குரியவர்கள் கண்டு ஏனையா ஓடுகின்றீர்களென்று கேட்பார்களாயின் அடியின் பயத்தையும், சாணச்சட்டியின் பயத்தையும் வெளிக்குப் பகராது அவர்கள் நீச்சர்கள் அவர்களைத் தீண்டப்படாதென்று சொல்லிக்கொண்டே ஓடிவிடுவது வழக்கமாயிருந்தது. அவ்வடி பயத்தால் கூறிவந்த வழக்க மொழியையே வலுபெறச்செய்து வேஷப்பிராமணர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பராயர்களாகவும் எதிரிகளாகவும் இருந்தோர்களை தீண்டாதவர்களென்றும், சண்டாளர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும் பலவகையாலும் இழிவுகூறிப் பாழ்படச்செய்துவிட்டார்கள். சாணச்சட்டியின் அடியையும், அதன் செயலையும் நாளதுவரையிற் குக்கிராமங்களிற் காணலாம். மநுக்களைத் தீண்டாதவற்றிற்கு சகல சாதியோருக்குரிய தீச்செயலும், ரோகமுமே காரணமன்றி தற்காலம் ஏழைகளாயுள்ள ஆறுகோடி மக்கள் ஒருக்காலும் தீண்டாதவர்களாக மாட்டார்கள்.
- 4:15; செப்டம்பர் 21, 1910 -
28. கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா
வினா : ஐயா, செப்டம்பர் மாதம் வெளியான “நல்லாயன்” பத்திரிகையில் “ஜனத்தொகைக் கணக்கெடுக்கவரும் சென்ஸஸ் உத்தியோகஸ்தர்கள் உங்கள் மதத்தைக் கேட்கையில் “கத்தோலிக்கு மதம்” என்றும், ஜாதியைக் கேட்பார்களானால் உங்கள் உங்களுடைய ஜாதியையும் சொல்லுங்கள்” என்று வரைந்திருக்கிறது.
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் வெளியான “திரு இருதயத் தூதன்” பத்திரிகையில், “பலஸ்தீனுக்கும் ஐரோப்பாவுக்கும் திரு யாத்திரையாய்ச் சென்ற இரண்டு இந்தியர்கள்” என்ற தலைப்பின்கீழ் “உரோமை நகர் வத்திக்கான் அரண்மனையில் துரைசாமி ஐயர் கிறீஸ்துவ பிராமணர்களின் தொகை அதிகரிக்கும் படியாகவும், அவர்களின் குடும்பங்கள் செழித்திருக்கும்படியாகவும் அர்ச். பாப்பானவர் ஆசீர்வதிக்கும்படி மன்றாடினார்” எனக் கண்டிருக்கிறது. இதனால் எனக்குத் தோன்றிய சந்தேகங்களாவன: முதலாவது, கிறீஸ்தவர்களுக்கு ஜாதியுண்டா? இந்து மதத்திற்கே சொந்த பொருளாயுள்ள ஜாதியைக் கிறீஸ்தவர்கள் அநுசரிக்கலாமா? அப்படி அநுசரிப்பவர்கள் கிறீஸ்தவர்களாவார்களா? இரண்டாவது, பிராமணனாயிருந்தவன் கிறீஸ்தவனானபோது அவனைப் பிராமணனென்று அழைக்கலாமா? அப்படிப்பட்டவன் பூணூல் தரித்துக்கொள்ளலாமா? தன் குடும்பங்கள் செழித்திருக்க பாப்பாண்டவரின் ஆசீர்வாதத்தைக் கேட்டவர்கள் மற்ற குடும்பங்களை நினையாமற் போனதென்னை? ஜாதி கிறீஸ்தவர்களாகிய இந்த இரண்டு யாத்திரைக்காரரும் பலஸ்தீனாவிலும் ஐரோப்பாவிலும் யாரிடத்தில் போஜனஞ் செய்திருப்பார்கள்? அப்போது ஜாதி கெடவில்லையா?
பி.கே, சென்னை.
விடை : அதாவது, ஓர் இந்து மதத்தைச்சார்ந்தவன் கிறிஸ்தவனாகிவிடுவானாயின் அவன் முன்பு அநுசரித்துவந்த சாதியாசாரமும், சமயாசாரமும் அன்றே ஒழிந்துவிட்டது என்பது திண்ணம். அங்ஙனமின்றி சாதியாசாரமும், சமயவாசாரமும் விடுவதில்லை என்றால் அவனுக்குக் கிறீஸ்தவனென்னும் பெயர் பொருந்தவே பொருந்தாது. அல்லது