உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

690 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அதனுடன் குப்பைகளிலுள்ள சாம்பலிற்புரளும் காகங்களும், நாய்களும் மோட்சம் பெற்றிருக்க வேண்டுமன்றோ. அத்தகைய மோட்சந்தான் எங்குளது. இடிந்துள்ள வீடுகளும் குட்டைச்சுவர்கள் எங்குளதோ அங்குதான் கழுதைகள் ஒண்டிநிற்பது சுவாபம். மோட்சத்தில் அவ்வகை இடிந்துள்ளக் குட்டிச்சுவருகளுண்டோவென்று கேட்கும்படியான பகுத்தறிவில்லாதவனானபடியால் விசாரிணையில் தன் முயற்சி அற்றவனென்றும் நித்திய சுகத்திற்கு யோக்கியதை இல்லாதவனென்றும் வகுத்திருக்கின்றார்கள்.

மற்றொருவன், அப்பா, இந்தக் கொட்டையைக் கட்டிக் கொள்ளுவாயாயின் சகல சம்பத்தும் பெற்று சுகமடைவாயென்று கூறுவானாயின் இக்கொட்டையின் மகத்துவத்தைக் கூறியவர் இக் கொட்டையை கழுத்திற் கட்டிக்கொண்டுதான் ஏதேனுஞ் சுகத்திலிருக்கின்றாரா. அவர்சுகிப்பதற்கு நம்மிடம் வந்து துட்டு கேட்கின்றாரா என்று கண்டறியான். நமக்கும் அவரது கதிதானென்று உணரமாட்டான்.

தன்னுடைய முயற்சியால் தனக்கோர் மகத்துவமில்லாமல் இக் கொட்டையால் மகத்துவமுண்டாமென்று கூறுவது என்ன மதியென்று பகுத்தறியவுமாட்டான், இத்தகைய பகுத்தறிவற்ற மக்களும் தன்முயற்சியற்று பிறர் முயற்சியை நாடும்பேதைகளும் சுகம்பெறமாட்டார்களென்றுணர்ந்த பெரியோர்கள் “தன் முயற்சியில்லாத் தலைமகனுக்கும், தலைகணையில்லா நித்திரைக்கும்” சுகமில்லையென வகுத்துவிட்டார்கள்.

- 4:17; அக்டோபர் 5, 1910 -


30. யதார்த்தவாதி வெகுஜன விரோதி

எனும் பழமொழிக்கிணங்க சாதிவேஷ சமயவேஷக்காரர்களும், சிற்சில பத்திராதிபர்களும் நமது பத்திரிகையின் மீது பழிகூறுவதாக விளங்குகின்றது. காரணமோவென்னில் அவர்களது பொய்யாகியக் கட்டுப்பாட்டின்படி நீங்கள் புறசாதியாரென்று கூறியவுடன் ஆமாம் நாங்கள் புறசாதியாரென்று ஒதுங்கியும், புறசமயத்தாரென்றவுடன் ஆமாம் யாங்கள் புறசமயத்தாரென்று அடங்கியும் பேசுவதாயின் நமது பத்திரிகையைப் போற்றுவார்கள். அங்ஙனமின்றி புறசாதியான் யார் புறசமயத்தான் யாரென்றவுடன் தூற்றுகின்றார்கள்போலும்.

அந்தோ, இத்தேசத்துள் வந்து குடியேறியவர்களும் இத்தேசத்து வகையற்றக் குடிகளும் ஒன்றுசேர்ந்துகொண்டு இத்தேசத்துப் பூர்வக் குடிகளை புறசாதியாரென்றால் பொருந்துமோ. இத்தேசத்துப் பூர்வதன்மத்தைப் புறச்சமயமென்றால் பொருந்துமோ ஒருக்காலும் பொருந்தாவாம். அத்தகையப் பொருந்தாவகைகளை நமது பத்திரிகையில் திருந்த எழுதிவருகிறபடியால் நூதன சாதிபேதத்தோருக்கும், நூதன சமயபேதத்தோருக்கும் அருவெறுப்புண்டாகி நமது பத்திரிகையைத் தூற்றினும் ஓரிழிவாகக் கொள்ளோம். போற்றினும் புகழாகக்கொள்ளோம். அதன் காரணமோவென்னில் இத்தேசத்து மக்கள் சகலரும் சீர்பெற்று சுகமடையவேண்டுமென்னும் அவாவின் மிகுதியால் நமது பத்திரிகை வெளிவந்துலாவுகிறபடியால் தனது சாதியோர் சீர்பெற வேண்டும். ஏனைய சாதியோர் சீர்கெட வேண்டுமென்றும் தனது சமயத்தோர் பெருகவேண்டுமென்றும், ஏனைய சமயத்தோர் குறுக வேண்டுமென்றும் பொறாமெய் மிகுத்தோர் தூற்றுவதும் போற்றுவதும் பயனற்றதென்றெண்ணி அன்னோரிழிவையும் புகழையும் ஏற்காது ஒழித்தோம்.

நமது பத்திரிகையையும் நம்மெயுந் தூற்றுவோர் சாதியாசாரம் மெய்யாயின், சோற்றுக்கடை காப்பிக்கடைகளிலுள்ள சாதிக்கட்டுபாடுகள், சாராயக்கடை, கள்ளுக்கடைகளிலும் உண்டா, (ரிப்ரஷ்மென்ட்ரூம்) தாசிவீடுகளிலும் உண்டா. இல்லையே, தாங்கள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதி யாசாரங் கிடையாது. ஏழைகள் சீவிக்கவேண்டிய இடங்களிலெல்லாம் சாதியாசாரம் உண்டென்பது நியாயமாமோ. விவேகிகள் இவற்றைப் பொதுநலமெனக் கொள்வரோ, ஒருக்காலுங் கொள்ளார்கள். தள்ளுவரேயாம்.