உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/745

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் / 697

மிதங்கு” மென்னும் பழமொழிக்கிணங்கி பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதுடன் கைத்தொழிலையும், வியாபாரத்தையுங் கற்பிப்பதே மிக்க மேலாம்.

- 6:4; சூலை 3, 1912 -


37. சாதிபேதமே ஊரைக்கெடுப்பதற்கு ஆதாரம்!
சாதிபேதமே ஒற்றுமெய் கேட்டிற்கு ஆதாரம்!! சாதிபேதமே கற்றவித்தைகளைக் காட்டாது ஒளிப்பதற்கு ஆதாரம்!!!

அதாவது பொய்யாய சாதிகட்டுப்பாட்டினால் உண்டாய பொறாமெயும் பற்கடிப்புமேயாம். தங்களுக்குத் தாங்களே பாப்பானென்று வகுத்துக் கொண்டுள்ள வகுப்பாருள், அவன் மொட்ரசாதி, நான் குட்ரசாதி, அவன் குருக்குபூசு சாதி, நான் நெடுக்குபூசு சாதி, அவன் வீட்டில் நான் பெண் கொள்ளமாட்டேன், என் வீட்டில் அவன் பெண் கொள்ளமாட்டான், அவன் வீட்டில் நான் சாப்பிடமாட்டேன், என் வீட்டில் அவன் சாப்பிடமாட்டான், என்னும் ஒற்றுமெய் கேட்டுரையும் வீண்வாதமுமே தொடுத்து நிற்பார்கள்.

ஐயா! பாப்பாரென்றாலும் ஒரு மொழி பிராமண னென்றாலும் ஒரு மொழியாயிருக்க இவற்றுள் நூற்றி யெட்டுப் பிரிவினைகளுண்டாவதற்குக் காரணம் என்னை என்றாலோ எங்கள் தேச ஆசாரமென்பார்கள். ஒருவரைப் பார்த்து மற்றொருவர் வேஷம் போட்டுக்கொண்ட விவரங்களை வெளியிடமாட்டார்கள்.

வேளாளர் என்போரிடத்தேனும் ஒற்றுமெய் உண்டா என்று ஆராயுங்கால் சிலர் காரைகாட்டு வேளாளரென்பர், சிலர் துளுவ வேளாளரென்பர், சிலர் கொண்டைகட்டிவேளாளரென்பர், இவர்கள் ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கல் வாங்கல் கிடையாது உண்பனை தின்பனை கிடையாது. ஐயா வேளாளன் என்பது ஒரு மொழியாயிருக்க அவற்றுள் முப்பத்தி எட்டுப் பிரிவினைகள் யாதுக்கென்றாலோ அது எங்கள் சாதியாசார மென்பார்கள். வேளாளர் என்போருள் முதலியார் என்னுந் தொடர்மொழியும், பிள்ளையென்னுந் தொடர்மொழியுஞ் சேர்த்துள்ளோரைக் கண்டு ஐயா! தங்களுக்குள்ளேனும் ஒற்றுமெயுண்டோ வென்னில் இல்லை, நான் வேளாள முதலி, அவன் அழும்பிடைய முதலி, இவன் நட்டுவ முதலி, உவன் தோட்டக்கார முதலி, அவன் பள்ளி முதலி, இவன் பறைமுதலி யென்பார்கள், பிள்ளைகளிலோ நான் வேளாளப்பிள்ளை, அவன் இடைப்பிள்ளை, இவன் கணக்கன் பிள்ளை, அவன் பள்ளிப்பிள்ளை, இவன் பறைப்பிள்ளை யென்பார்கள். முதலியென்றாலும் ஒருமொழி, பிள்ளை யென்றாலும் ஒருமொழியாயிருக்க இவற்றினுள்ளும் இருபத்தெட்டுப் பிரிவினைகள் ஏதென்னிலோ தங்களுக்குத் தாங்களே நூதனமாக வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை வெளிக்குச் சொல்லாது அது எங்கள் குலமரபு என்பார்கள்.

நாயுடு என்பது ஒரு மொழியாச்சே அதனினும் பிரிவுகளுண்டோவெனில் நாங்கள்தான் சரியான நாயுடுக்கள் இப்போது சில தெலுகுபேசும் இடையர்கள் எல்லவரும் நாயுடாகிவிட்டார்கள். நெல்லூரிலிருந்தும், பந்தரிலிருந்தும் வந்துள்ள சில தெலுகுபாஷைக்காரர்கள் எல்லவரும் நாயுடாகிவிட்டார்கள் அவர்கள் வீடுகளில் நாங்கள் பெண்கொள்ளமாட்டோம், கொடுக்கமாட்டோம் என்னும் ஒற்றுமெய் கேட்டிலே யிருக்கின்றார்கள், இவ்வகையாக ஒவ்வொருவரும் நூற்றியெட்டுப் பிரிவினைகளை உண்டாக்கிக்கொண்டு பொறாமெய் சிந்தையிலும் பொய்ச்சாப்பிலுமே நிறைந்துள்ள படியால் தேசத்தின் சீரைக் கெடுப்பதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றும், ஒருவருக்கொருவர் ஒற்றுமெய் கேடு அடைவதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றும், ஒருவருக்குத் தெரிந்த வித்தைகளை மற்றவர்களுக்குக் காட்டாது ஒளிப்பதற்கும் இச்சாதிபேதங்களே ஆதாரமென்றுங் கூறியுள்ளோம். இதனது விளக்கம் கருணைமிகுத்தோருக்கும், விவேகிகளுக்கும் பொது நலப்பிரியர்களுக்கும் விளங்குமேயன்றி கருணையற்ற லோபிகளுக்கும்,