சமூகம் / 699
சுகமற்றுப் போயதுடன் துறவறக் கியானமுங்கெட்டு கற்பின் நிலையும் விட்டு சீரழிந்துபோகின்றார்கள். ஆதலின் நம்தேயப் புருடர்கள் பூர்வசரித்திரங்களை ஆய்ந்து பெண்களின் கஷ்டங்களை நீக்குவார்களென நம்புகிறோம்.
- 6:7; சூலை 24, 1912 -
39. மனிதன் எனப்படுவோனுக்குரிய உயர்சத்து
மனித வகுப்போரை மனிதவகுப்பாராக பாவிப்பது உயர்சத்து. அம்மனித வகுப்போருக்குள்ளக் குறைகளை அகற்றி சீர்தூக்கி ஆதரிப்பது உயர்சத்து. மற்றய மனிதவகுப்போருக்குற்றத் துன்பங்கள் யாவையுந் தங்களுக்கு வந்த துன்பம் போற்கருதி அவர்கள் துன்பத்தை நீக்கி ரட்சிப்பது உயர்சத்து. மனுமக்களை தன்னவர் அன்னியரென்னும் பேதம் பாராதலே உயர்சத்து, எம்மக்களையுந் தம்மக்களுக்கு சமதையாய் அன்புபாராட்டல் உயர்சத்து. சருவசீவர்களையும் தன்னுயிர்போல் பாதுகாத்த லுயர்சத்து, மனிதனுக்கு சீவகாருண்யம் நிறைந்திருத்தலே உயர்சத்து, மனிதனுக்கு குருவிசுவாசம், இராஜவிசுவாசம் நிறைந்திருத்தலே உயர்சத்து. சகலமக்களும் சுகம்பெற்று வாழ்கவேண்டும் என்று எண்ணுவது உயர்சத்து. மனிதனுக்குரிய சாந்தசத்துவே சுயவுருவென்றும், தன்மகாயமென்றும், உண்மெயென்றும், அந்தரங்கமென்றும் வழங்குதலால் மேற்கூறியுள்ள உயர்சத்துக்குரியச் செயல்களே தெய்வ நிலையுமாதலின் அச்செயல் மிகுத்தோரே மேன்மக்கள் என்றும், பெரியோர்கள் என்றும் அழைக்கப்படுவார்கள். ஞான நூற்களும், நீதி நூற்களும் இவைகளையே தழுவி நிற்கும். இதற்கு எதிரடையாய்ச் செய்கைகளை உடையவர்கள் யாரோ அவர்கள் யாவரையுங் கீழ்மக்கள் என்றும் சிறிய சிந்தையரென்றுங் கூறப்படும்.
இத்தகையக் கீழ்மக்களும் சிறியச் சிந்தையை உடையவர்களுமாகிய மனுக்கள் எத்தேசத்தில் வாசஞ்செய்கின்றார்களோ அத்தேசத்தின் சிறப்பு நாளுக்குநாள் கெடுவதுடன் தேசவாசிகளும் சீரழிவார்களென்பது திண்ணம். ஆதலின் மனுக்களுள் சீர்திருத்தக்காரர்களேனும் மேற்கூறியுள்ள நல்லெண்ணத்துடனும் செய்வார்களாயின் எடுக்கும் சீர்திருத்தங்கள் யாவும் செவ்வனே முடியும் முடியுமென்பது சத்தியம்.
- 8:8; சூலை 31, 1912 -
40. எத்தேசம் சீரும் சிறப்பும் பெறும் எத்தேசமக்கள் சுகமும் ஆறுதலும் பெறுவார்கள்
வித்தியா விருத்தியும் விவசாய விருத்தியுமுள்ள தேசம் சீரும் சிறப்பும் பெறும். வித்தையும், புத்தியும், ஈகையும், சன்மார்க்கமும் நிறைந்த மக்கள் சுகமும் ஆறுதலுமுற்ற வாழ்க்கைப் பெறுவார்கள். அதாவது தேசமக்கள் தங்கள் தங்கள் முயற்சியை நீர்வளம் நிலவளம் முதலியவற்றில் செலுத்த வேண்டும். ஆகாயத்தை நோக்கி மழையைப் பார்ப்பதுடன் அந்தந்த பண்ணை பூமிகளினருகே நீர் தோன்றுமிடங் கண்டு கருணை தங்கிய கவர்ன்மென்றாரால் கண்டுபிடித்துள்ள நீர் இயந்திரங்களைக் கொண்டு நீர்வளத்தைப் பெருக்கிக் கொள்ளல் வேண்டும். அதனால் வளம் பெற்ற பூமிகளை வரப்புயரச் செய்யல் வேண்டும் அவ்வகைச் செய்தும் எத்தேசத் தானியம் இத்தேசத்தை சீரும் சிறப்பும் பெறச்செய்யுமெனக் கண்டறிந்து அவைகளை விதைத்தல் வேண்டும். இத்தியாதி விவசாய விருத்திக்கும் நாளொன்றுக்கும் முக்காலணா கூலி ஓரணாகூலிக்கு ஏனவாயப் பறையன் அகப்படுவான் இளிச்சவாயப்பள்ளன் அகப்படுவான் என்னும் உலோபத்துவமும் சாதிகர்வம் வையாது பண்ணை பூமியானது பாப்பானுடைய தாயினும் அவன் பெரியசாதியின் போர்வையைப் பூராவாக அப்புறப்படுத்திவிட்டு அவனே ஏர்பிடித்து உழுது பூமியைப் பழுக்கவழுகக் கலக்கி விதைவிதைத்து பிள்ளைகளை வளர்ப்பதுபோல் விளையும் பயிறுகளையுங் கண்ணுங் கருத்துமாகக் கார்த்து விருத்தி செய்யல் வேண்டும்.