பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/748

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

700 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அத்தகைய விருத்தியால் தேச செழிப்புண்டாவதுடன் சாதிபேத நாற்றமற்ற பர்ம்மா தேசத்தோர் அரிசியும், சாதிபேத நாற்றமற்ற அமேரிக்கா தேசத்தோர் கோதுமையும், உலகெங்குஞ் சென்று உண்ண உதவுவதுடன் தங்கள் தேசங்களின் பெயரையுஞ் சிறப்படையச் செய்வதுபோல் இத்தேசத்துள் விருத்திபெறுந் தானியங்கள் மற்றய தேசங்களுக்கு உபகாரமாவதுடன் இத்தேசப் பெயரும் உலகெங்கும் விளங்கும். ஒவ்வோர் மனிதனும் பூமியின் விருத்தியை நாடிப் பணங்களைச் செலவு செய்வதுடன் தங்கள் கண்ணையுங் கருத்தையும் அதனிடம் நிறுத்தல் வேண்டும், அதுவே விவசாய விருத்தியின் சிறப்பென்னப்படும். வித்தியாவிருத்தியாங் கைத்தொழில்களிலோ மண்ணினாற் செய்யுங் கைத்தொழில்களும், கல்லினாற் செய்யுங் கைத்தொழில்களும், மரத்தாற் செய்யுங் கைத்தொழில்களும், உலோகங்களாற் செய்யுங் கைத்தொழில்களும், பஞ்சினாற் செய்யுங் கைத்தொழில்களும், தோலினாற் செய்யுங் கைத்தொழில்களும் அனந்தமுண்டு. அத்தகைய வித்தியா விருத்திகளுக்குப் பணங்களை செலவிட்டு ஒவ்வோர் தொழிலையும் விருத்தி செய்ய வேண்டும். அவ்வகை விருத்தியை நாடுவோர் சாதியாசாரம் இல்லாதவர்களை மட்டிலும் அதில் சேர்க்கப்படாதென்பாராயின் அதனழிவிற்கு அடிப்படை அப்பொறாமெயென்றே அறிந்து கொள்ள வேண்டும். அங்ஙனஞ் சேர்த்துக் கொள்ளினும் பெரியசாதிகள் என்போரே பெரிய பெரிய காக்காய் பிடிக்கும் பெரியதன உத்தியோகத்திலிருத்தல் வேண்டும். சிறியசாதிகள் என்று அழைக்கப்படுவோர் சிறியத்தொழிலையே பெறவேண்டும் என்பாராயின் அதுவுங் கைத்தொழில் விருத்திக்குக் கேடாக முடியும். அதாவது காக்காய் பிடிக்கும் வேஷதாரிகள் கைத்தொழில் செய்வதற்கும், அதன் மேற்பார்வை இடுவதற்கும் உதவவே மாட்டார்கள். காரணமோ என்னில், ஒவ்வோர் தொழிலாளியும் அந்தந்தத் தொழிலில் சிறுவயதினின்று உழைத்து விருத்தி பெற்று விவகாரம் அறிந்தவனே அந்தந்த தொழிலுக்கதிகாரியும், அந்தந்தத் தொழிலைப் பார்வையிடுபவனுமாய் இருத்தல் வேண்டும். அதனால் வேலையின் நுட்பமும், வேலைகள் செய்வோர் முன்னேற்றமும் கண்டு வித்தியாசாலையை விருத்திக்குக் கொண்டுவருவான். அதனாற் சகல கைத்தொழில்களும் விருத்தியடைவதுடன் விருத்தி பெற்ற பொருட்கள் பலதேசங்களுக்குஞ் சென்று தேசத்தின் வித்தியா சிறப்பு விளங்கும்.

இத்தகையாய் விருத்திபெறும் விவசாயமும், சித்திபெறும் வித்தையுமே அத்தேசத்தை சீருஞ் சிறப்பும் பெறச்செய்யும்.

எத்தேச மக்களாயினும் தங்கள் எண்ணங்களையும் நோக்கங்களையும் வித்தியா விருத்தியினிடத்திலேயே வைத்தல் வேண்டும். அஃது கோவில் சுற்றும் வித்தையல்ல, குளமுழுகும் வித்தையல்ல, குறுக்குபூசும் வித்தையல்ல, நெடுக்குப்பூசும் வித்தையல்ல, சந்தன பொட்டு வித்தையல்ல, சாந்துபொட்டு வித்தையல்ல, மஞ்சள் திருசுன்ன வித்தையல்ல, சிவப்பு திருசுன்ன வித்தையல்ல, பேரிலந்தங் கொட்டை வித்தையல்ல, துளசிக்கட்டை வித்தையல்ல, குடுமி வைக்கும் வித்தையல்ல, நூல்போடும் வித்தையல்ல, மந்திரம் பண்ணும் வித்தையல்ல, மணிகுலுக்கும் வித்தையல்ல, அவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, இவனை வேண்டிக்கொள்ளும் வித்தையல்ல, பெரியபூசை வித்தையல்ல, சிறியபூசை வித்தையல்ல, ஆட்டிக்கும் வித்தையல்ல, கோழியறுக்கும் வித்தையல்ல, இத்தியாதி வித்தைகளும் மதக்கடைபரப்பி வஞ்சித்தும் பொய் சொல்லியும் பொருள் பறித்தும் சீவிக்கும் மதக்கடை, சாமிக்கடை, சோம்பேரிகளின் வித்தைகளாகும். அத்தகைய மதக்கடை சாமிக்கடை சரக்குகளை நம்பிப் பின்பற்றுவோர் அவர்களிலும் சோம்பேரிகளாகி அல்லலடைய வேண்டியவர்களேயாவதுடன் அத்தகையோர் தேசமும் பாழடையுமென்பது சத்தியம். ஆதலின் சுகமும் ஆறுதலும் அடைய வேண்டிய மக்கள் மண்வித்தையிலும், உலோகவித்தையிலும், மரவித்தையிலும், பஞ்சுவித்தையிலும், சித்திரவித்தையிலும், ஓடதிவித்தையிலும், வியாபார வித்தையிலுங் கருத்தை இருத்தி விடாமுயற்சியிலிருப்பார்களாயின் அம்மக்கள் சுகமும் ஆற்றலும் பெறுவார்கள். அத்தகையோர் தங்கள் தங்கள் புத்தியையும்