சமூகம்/705
தாங்களே சிரமேற்று அரசவங்கத்தினர்களென்று உழைக்கும் சேனாபதியர், புரோகிதர், தொழிற்றூதுவர், கர்மவிதிக்காரர், காப்பாளர், காரண குருக்கள், காரிய குருக்கள் மற்றும் வேண்டிய அதிகாரத் தொழிலாளர்கள் யாவரையும் ஆய்ந்து அரசாங்கத்துக்காரியாதிகளை நடாத்துவதுடன் தேசமக்கள் சீருக்கும் சிறப்புக்கும் வரும் பூமியின் விருத்தியையே முதலாவதாக கருதி உழுது பண்படுத்தும் உழைப்பாளிகளின் மீது முழுநோக்கம் வைத்து அவர்களது குறைவு நிறைவுகளையே சீர்திருத்தி பூமிக்களைப் பண்படுத்தும் வழிகளைத் தேடுவார்கள். பூமியின் உழைப்பாளிகளின் சுகச்சீரைமட்டிலும் மந்திரவாதிகள் முக்கியமாகக் கவனிப்பது யாதுக்கென்னில் பண்ணைபூமிகளின் வரப்புயர் நீருயரும், நீருயர பயிறுயரும், பயிறுயர குடியுயரும், குடியுயர கோனுயரும். பூமிகளின் தானியங்களானது விருத்தியடையக் குடிகள் யாவரும் சுகசீவிய வாழ்க்கையைப் பெறுவார்கள். குடிகள் எப்போது சுகவாழ்க்கையில் இருக்கின்றார்களோ அரசரும் அரச அங்கத்தினரும் அரசரது சகல காரியாதிகளும் சுகமாகவே நடைபெறும். குடிகளின் சுகத்தைக் கருதி அரசை ஆநந்தநிலை பெறச்செய்யும் மந்திரவாதிகள் பூமிக்கென்று உழைக்கும் பண்ணையாட்களின் சுகத்தையும் விருத்தியையுமே மிக்கக்கருதி நிற்பார்கள்.
இத்தகைய மேலாயக் கருத்தமைந்த மந்திரவாதிகள் அரசருக்கரசர் யுத்தம் நேரிடுங் கலகங்களிலும் மதியூகத்தால் சாம, தான, பேத, தண்டமென்னும் சதுர்வித உபாயங்களைக் கையாடி அரசை நிலை நிறுத்துவார்கள். இவைகள் யாவுங் குடிகளை அல்லலடையவிடாமலும் அரசர் அதிகவலையுறாமலும் இராட்சியபாரம் தாங்குதற்கேயாம். இத்தகையாய கருணையும் மதியும் வல்லபமும்பெற்ற மந்திரவாதிகளிருக்கும் இராஜாங்கமே சுகவாட்சியுற்று ஆனந்தநிலையில் நிற்கும்.
இவற்றிற்கு மாறாக குடியாலும் வஞ்சத்தாலும் சூதினாலும் பொய்யாலும் பொருளாசையுற்றலையும் சோம்பேறிகள் குடும்பத்திற் பிறந்து வேளை புசிப்பு வேளைக்கின்றி வளர்ந்து ஈவோர்கரத்தையும் நேயத்தையும் நாடித்திரிந்து சொற்பக்கல்வியிற் பயின்று நான் இந்த சாஸ்திரத்தில் வல்லவன், நான் அந்த சாஸ்திரத்தில் வல்லவனெனப் பகட்டித்திரிவோர்களைக்கொண்டு இராஜாங்க மந்திராலோசனை சங்கத்துக்காரியாதிகளை நடத்துவதாயின் அவர்கள் ஏதுகல்வியில் விருத்திப்பெற்றிருந்த போதினும் தாங்கள் பிறந்த குடியினது செயலும் வளர்ந்த வளப்பின் பழக்கமும் பொருளாசையால் செல்வர்களைப்பின் தொடர்ந்து திரிந்த அநுபவங்களும் அவர்களைவிடாது தொடர்ந்து நிற்றலால் அரசர்கள் எப்போது மாறுவார்களோ அப்போதே அரசபீடத்தை அபகரிக்கலாம் என்றும், குடிகள் எப்போது மாறுவார்களோ அப்போதே குடிகளைக் கெடுக்கலாமென்றும், தங்கள் சுயப்பிரயோசனத்திலேயே நின்று அரசருக்குங் குடிகளுக்கும் அதிக உழைப்பாளிகளைப்போல் அபிநயித்துத் திரிவார்களன்றி பூமிகளின் விருத்திகளையும் தேசவிருத்திகளையும் மக்கள் விருத்திகளையும் தங்கள் கனவிலேனுங் கருதமாட்டார்கள். அத்தகையச் செயல்களால் தேசமும் பாழடைந்து மக்களும் சீரழிந்து அரசனும் சுகமிழந்து அல்லல் அடைந்துவிடுவான். ஆதலின் இராஜாங்கம் சுகவாட்சியுற்று ஆனந்தம் பெறவேண்டுமாயின் நற்குடும்பத்திற் பிறந்து சிறந்த செல்வத்தில் வளர்ந்து சீவகாருண்யம் முதிர்ந்து பரந்த விவேகம் நிறைந்துள்ளவர்களை மந்திரவாதிகளாய் நியமித்து அவர்களது ஆலோசனைக்கு உட்பட்டு அரசை நடாத்துவதே இராஜாங்க சுகவாட்சிக்கு அழகையும் ஆறுதலையுந் தருமென்பது சத்தியம்.
- 6:41; மார்ச் 19, 1913 -
44. வித்தியாகர்வம் தனகர்வம் மதகர்வம் சாதிகர்வம் பெருகும் தேசத்தில் சுகச்சீர் பெருகுமோ?
முக்காலும் பெருகாவாம். காரணமோவென்னில் வித்தை என்பதை யாதென விரும்பாது காலையிலெழுந்தவுடன் குறுக்குப்பூச்சு பூசுவதே வித்தை.