பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/755

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /707

ஒக்க அற்பருக்கு தனஞ்சேரில் அதையடுத்தே கர்வமுஞ் சேருமென்பது கருத்து. அதை அநுசரித்தே தேசமுஞ் சீரழியுமென்பதுடைத்து.

இனி மதகர்வத்தை ஆராய்வோமென்னில் தங்களுடைய மதத்தை இந்துமதமென இருமாப்புற்றிருப்பதைக் காண்கின்றோம். அவருள் ஒருவரை அணுகி நீவிர் இந்துமதத்தோரென்று கூறுகின்றீர். அவ்விந்து என்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து ஆரியமதமென்பார்; ஆரியரென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் அதை மறுத்து பிரமசமாஜம் பிரமமதமென்பர்; அப்பிரமமென்பவர் யார், எத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென உசாவில் ஆ, ஆ, பிரமமென்பது தெரியாதா, வேதங்களிலும் வரைந்திருக்கின்றது உபநிடதங்களிலும் வரைந்திருக்கின்றது புராணங்களிலும் வரைந்திருக்கின்றது அதை நீர் வாசித்ததில்லையோ என்பார். வாசித்தும் அஃது ஏட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது. அப்பிரமம் அநுபவத்திற்கும் காட்சிக்கும் பொருந்தியதோவென்றால் அவரவர்கள் அனுபவத்திற்குங் காட்சிக்கும் பொருந்தியதாகும் என்பார். மறுத்து அஃதேனும் மற்றவர்களுக்குக் காட்சியாமோவென்னில் மாறு உத்தரம் இன்றியே அடங்கிவிடுவார்.

இத்தகைய அடிப்படையற்ற பீடத்தினின்று தோன்றிய சிவமதம் விஷ்ணுமதமென்பவருள் எங்கள் சிவமதமே மதமென கர்வித்து நிற்போரை அணுகி தங்கள் மதத்திற்குக் காரணராகிய சிவனென்பவர் யார், அவரெத்தேசத்தவர், எங்கு பிறந்தவரென்னிலோ எங்கள் மதம் அநாதியாயுள்ளது என்பார்கள் உங்கள் சிவமதத்திற்கு ஆதரவாயுள்ள இந்துமதம், ஆரியமதம், பிரமமதம் ஆதியற்ற அநாதிமதமாயிருக்க அவ்வநாதிமதத்திருந்தே மற்றுமோர் அநாதிமதந்தோன்றுமோவென்னில், அதனந்தரார்த்தம் விளங்காது எங்கள்சிவமே அநாதியாய் உள்ளது என்பார்கள். ஆதியற்ற சிவமதத்தைக் கொண்டு மற்றும் ஆதியாயுள்ள மதங்களைக் கண்டிக்குங் கர்வந்தோன்றலாமோவென்னில் மறுத்தும் எங்கள்சிவம் அநாதியே என்பார்கள், அநாதியாயுள்ள சிவனுக்குக் கல்யாணமுண்டோ பிள்ளை பெண்சாதிகளுண்டோவென்னில் அதுவோர் திருவிளையாட்டு என்பார்கள். திருவிளையாட்டு ஆடத் தோன்றிய உருவேனும் ஆதியாகாதோ, அதன் காலமிறாதோ, தோன்றிய தேசமிராதோவென்னில், உடைந்த மூங்கிலுக்கு முருங்கைக் கொம்பை முட்டுக்கொடுப்பதுபோல் பொய்யிற்குப் பொய்யைச் சொல்லிக்கொண்டே திரிந்தபோதினும் மதகர்வமட்டிலும் அவர்களை விட்டகலா. வைணவ மதத்தோரும் அவ்வாறேயாம்.

ஐரோப்பா, அமெரிக்கா, சைனா, ஜப்பான் முதலிய தேசத்தோர் அனுசரித்துவரும் சரித்திர ஆதாரமாய மதங்களைப்போலிருக்குமாயின் இன்னுமென்ன கர்வங்கொண்டு மதச்சண்டைக்கு மார்புகொடுப்பார்களோ என்பதை சரித்திரக்காரர்களே தெரிந்துக்கொள்ளவேண்டியதாகும். ஆதியற்ற அநாதியாயுள்ள மதத்தோருக்கே இத்தகைய கர்வமும் பற்கடிப்புத் தோன்றுமாயின் தேசமும் தேசமக்களும் சுகச்சீர்பெறுவதென்னவாம். வேறுமோர் சாதி கர்வத்தை ஆராயப் புகிலோ நெல்லரிசி சோற்றின் சுவை அறியாதவனாயிருப்பினும், வண்ணான் என்னும் பெயர் தெரியாதவனனா யிருப்பினும், மலோபாதைக்குச் சென்று காலலம்பாதவனாயிருப்பினும், தீபாவளி தீபாவளிக்குக் குளிப்பவனாய் இருப்பினும், மோசத்தினாலும் சூதினாலும் சீவிப்பவனாயிருப்பினும், களவினாலும் பொய்யினாலும் சீவிப்பவனாயிருப்பினும், சாராயக்கடை கள்ளுக்கடைகளையே குத்தகையெடுத்து குடித்து வெறிப்பவனாயிருப்பினும், பிள்ளையென்றும் பெண்சாதியென்றும் பராமரிக்காத பேமானியாயிருப்பினும் கல்வியென்பதே கனவிலு மறியாத கசடனாயிருப்பினும், ஊரார் சொத்துக்கே உலைவைத்துத்திரியும் உலுத்தனாயிருப்பினும், எக்காலும் பிச்சையிரந்துண்டே காலங்கழிப்பவனாயிருப்பினும் சாதிகர்வமட்டிலுங் களிம்பேறி அவர்களைவிட்டு அகல்வது கிடையாது. இத்தகைய கர்வங்கள் அகலாமலிருத்தற்குக் காரணமோ வென்னில் எக்காலும் வித்தையிலேயே ஒருவன் தனதறிவை செலுத்தி விடுவானாயின் அவனுக்கு வித்தியாகர்வந்