பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/759

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சமூகம் /711

கலைநூற்கள் என்னும் பெயர் வந்த காரணம் யாதெனில், கலை என்னும் சந்திரனானது நாளுக்கு நாள் வளர்ந்து பூரணமுற்று சுகவொளி வீசுவதுபோல், இந்நூற்களைக் கற்றவன் அறிவானது வளர்ந்து உலகத்தோருக்கு நல்லவன், உபகாரியென்று வழங்குவதுடன் பிறப்பு, பிணி, மூப்புச், சாக்காடு என்னும் நான்கு வகைத் துக்கங்களும் ஒழிந்து பூரணசுகமடைவான்.

இத்தகையக் கலை நூற்களை விடுத்து பொய்க்கதா நூற்களைப் படித்து எங்கள் சாமிக்கு இரண்டு பெண்சாதிகளுண்டு, அவன் சாமிக்குப் பன்னீராயிரம் பெண்சாதிகளுண்டு, எங்கள் சாமிக்குப் பெண்சாதி கிடையாது, எங்கள் சாமிக்கு கலியாணங்கிடையாது, உங்கள் சாமி கலியாணமில்லாது பல ரிஷிபத்தினிகளை சேர்த்துக்கொள்ளுவார், எங்கள் சாமி வெண்ணெயைத் திருடித்தின்பதில் மிக சாமார்த்தியமுடையவர், உங்கள் சாமி புட்டுகளை ஏமாற்றித் தின்பதில் மிக்க வல்லவர், எங்கள் சாமி பெண்சாதியை ஒருவன் எடுத்துக்கொண்டு போய்விட்டான், அவனையும் அவன் சந்ததியோரையுந் தேசத்தோரையுங் கொன்றுவிட்டார். இன்னொரு சகோதரர்கள் பாகவழக்கு நேரிட்டது அவர்களுள் ஒரு பக்கஞ் சேர்ந்துகொண்டு திரளான அரசர்களையுங் குடிபடைகள் யாவரையுங் கொன்று பாழ்படுத்திவிட்டார், உங்கள்சாமி திரிபுரமெரிக்கத் திரண்ட அரக்கர்களைக் கொன்று தீரமாக நின்றார், எங்கள் சாமி கணக்கற்ற கற்புடைய மாதர்களைக் கெடுத்துவிட்டுயானொன்றும் அறியேனெனக் கற்பூரம் ஏந்திக் கொண்டார், உங்கள்சாமி இரிஷிபத்தினிகளின் கற்புநிலையைக் கெடுத்துவிட்டு கோசமற்றுப்போனார் என்னும் அசத்தியமும், அசப்பியமும், துன்மார்க்கமும், பெருகி மக்களைக் கேட்டிற்குக் கொண்டு போகும் வழியை விசாலமாகத் திறந்து உள்ள அறிவுங் கெட்டு மானி என்னும் மனிதப்பெயரற்று மிருகத்திற்கு ஒப்பாவார்கள். இதனால் மேலய நூற்கள் கலை நூற்களாகா.

நாவினாற் கற்கும் வித்தை இவ்வாறிருக்கக் கையையுங் காலையும் ஓர் இயந்திரமாகக் கொண்டு செய்யும் சூத்திரத்தொழிலாம் கைத்தொழில்களில் சிறுவர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன் தேகசுத்தம், உடைசுத்தமாயபின் மரங்களைக் கொண்டேனும், இரும்புகளைக் கொண்டேனும், தராக்களைக் கொண்டேனும், பஞ்சுகளைக் கொண்டேனும் ஒவ்வோர் வித்தைகளில் அறிவைசெலுத்தி நூதனமாயக் கைதொழில்களை விருத்திச் செய்வதுடன் தேச விவசாய விருத்தியில் அறிவை செலுத்தியும் வியாபாரத்தில் அறிவை செலுத்தியும் வித்தைகளை விருத்தி செய்து தாங்கள் சுகச்சீரடைவதுடன் தங்கள் தங்கள் சந்ததிகளையும் விருத்தி செய்து தேசத்தையுஞ் சிறப்படையச் செய்யவேண்டிய வித்தியா விருத்தியில் பழகவேண்டியதே அழகாம்.

அங்ஙனமின்றி சிறியோர்களும் பெரியோர்களும் காலையில் எழுந்தவுடன், தேகசுத்தஞ்செய்ய நாலுநாழிகை, உடை துவைக்க ஐந்து நாழிகை, குறுக்குப்பூச்சு பூச ரெண்டு நாழிகை, கொட்டைகழுவி கட்ட மூன்று நாழிகை, நெடுக்குப்பூச்சு பூச நாலு நாழிகை, வெங்கலசாமி கட்டை சாமிகளைக் கழுவ மூன்றுநாழிகை, அவைகள் மீது புட்பங்களிரைத்து பாட்டு மந்திரங் கூட்டு மந்திரஞ் செபிக்க நாலு நாழிகை, மணிகுலுக்கி மந்திரஞ் செபிக்க இரண்டு நாழிகை என்னும் வீண் காலங்களைப் போக்கித் தங்கள் தங்கள் அறிவை மயக்கிக் கொள்ளுவதுடன் தடிச்சோம்பேறி வித்தைகள் பெருகுமாயின் தாங்களுங்கெட்டு தங்கள் சந்ததியோருங்கெட்டு தேசசீருமற்று பிச்சை இரந்துண்பதே போதுமான வித்தையெனப் புலம்பித்திரிவதாகும். காணும் உலகத்தில் சுகச்சீர்பெரும் வாழ்க்கையையும் அறிவை வளர்க்கும் வித்தையையுங் கருதாது காணாத சாமி கொடுப்பார் சாமி கொடுப்பார் என்னுந் தடிச்சோம்பேறிகள் என்னும் இழிமக்களாகாது வித்தியாவிருத்திகளாம் மேன்மக்கள் செயலில் பழகவேண்டும்.

இனி புத்தியையும், அதன் விருத்தியையும் ஆலோசிப்போமாக.

- 7:5; சூலை 9, 1913 -